புதன்கிழமை, டிசம்பர் 9, 2009, 10:31
கோபன்ஹேகன்: கோபன்ஹேகன் புவிவெப்ப மாநாட்டின் இறுதி பிரகடனம் குறித்து டென்மார்க் சமர்ப்பித்த வரைவுத் திட்டத்திற்கு வளரும் நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்தனன. இதையடுத்து தனது திட்டத்தை டென்மார்க் வாபஸ் பெற்று விட்டது.
2வது நாள் மாநாட்டின் மாலையில் டென்மார்க் மாநாட்டின் இறுதிப் பிரகடனம் தொடர்பான ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது.
ஏற்கனவே உள்ள ஐ.நா. புவிவெப்ப மாநாட்டு திட்டம் மற்றும் கியோட்டா பிரகடனம் ஆகியவற்றில், வளர்ந்த நாடுகள், தொழில்மயமான நாடுகள்தான் பெருமளவில் புகை மாசுவை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. கார்பன் புகை பெருமளவில் உலகை அச்சுறுத்த இந்த நாடுகள்தான் காரணம் என இதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக வளரும் நாடுகள்தான் இதில் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும். புகை மாசைக் குறைக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தனது வரைவுத் திட்டத்தில் டென்மார்க் கூறியுள்ளது.
இதற்கு வளரும் நாடுகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்த.
இதுகுறித்து ஐ.நாவுக்கான சூடான் பிரதிநிதி லுமும்பா ஸ்டானிஸ்லஸ் டி அபிங் கூறுகையில், டென்மார்க்கின் கூற்று முற்றிலும் தவறானது. கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். கியோட்டோ பிரகடனம் மற்றும் ஐ.நா. பிரகடனம் ஆகிய இரண்டையுமே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் உள்ளது டென்மார்க்கின் பேச்சு.
வளரும் நாடுகளை குற்றவாளியாக்க அது முயலுகிறது. மேலும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நிதியுதவிகள் பாய வேண்டும் என்றும் அது கூற முயலுகிறது. இதை ஏற்கவே முடியாது என்றார்.
வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி-77 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் சூடான் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறுகையில், வளரும் நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகவே இது தோன்றுகிறது. பொருளாதார வளம் மிகுந்த வளர்ந்த நாடுகளை காப்பாற்ற டென்மார்க முயல்வதாக தெரிகிறது.
வளரும் நாடுகளின் வளங்களையும், நலங்களையும் கொள்ளையடிக்க டென்மார்க் திட்டமிடுகிறது என்றார் அவர்.
வெளியேறுவோம்- இந்தியா எச்சரிக்கை...
டென்மார்க்கின் திட்டம் குறித்து இந்தியாவும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், டென்மார்க்கின் திட்டம் தவறானது, கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தை முன்னிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்த மாநாட்டிலிருந்து இந்தியா வெளியேற வேண்டியிருக்கும் என்றார்.
இதேபோல சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் கூட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது டென்மார்க்.
இதுகுறித்து டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சர் கோனி ஹெட்கார்ட் கூறுகையில், இது ஒரு திட்டமல்ல. மாறாக விவாதத்திற்கான பொருள்தான். இருப்பினும் அது சர்ச்சையைக் கிளப்பியதால் அதைத் திரும்பப் பெற்றுள்ளோம் என்றார்.
ஐ.நா. புவிவெப்ப மாநாட்டு செயலகமும் இது திட்டமல்ல, விவாதப் பொருள்தான், அதிகாரப்பூர்வமான ஒன்றல்ல என்று விளக்கியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து இந்தியப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், டென்மார்க் அரசின் இந்தத் திட்டம் நகல் எடுக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்றார்.
புவிவெப்ப மாநாட்டில் 2வது நாளே சூடு பறக்கத் தொடங்கியுள்ளதால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment