Saturday, December 19, 2009

முக்கிய இலக்குகள் எட்டப்படவில்லை - கோபன்ஹேகன் மாநாடு தோல்வி!

சனிக்கிழமை, டிசம்பர் 19, 2009, 9:03[IST]

கோபன்ஹேகன்: கோபன்ஹேகனில் நடந்த .நா. புவிவெப்ப மாற்றத் தடுப்பு குறித்த உச்சிமாநாடு [^], முக்கிய இலக்குகளை எட்டாமல், சொதப்பலாகியுள்ளது.

வளரும் நாடுகள், ஏழை நாடுகளின் பல எதிர்பார்ப்புகள் இதில் பூர்த்தியாகவில்லை.

இந்த மாநாட்டில் மொத்தம் எட்டு வரைவுத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் பேசிக் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கத் தலைவர்கள் முன்பு நேற்று இறுதி பரிசீலனைக்கு வைக்கப்பட்டன.

பேசிக் அமைப்பை திருப்திப்படுத்தி உடன்பாட்டை ஏற்படுத்தும் பொறுப்பு ஒபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ மற்றும் பிரேசில், தென் ஆப்பிரிக்க தலைவர்களுடன் நேற்று பகல் முழுவதும் ஒபாமா தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் இறுதியில், இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தமே கோபன்ஹேகன் மாநாட்டின் பிரகடனமாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையவில்லை. இதனால் கோபன்ஹேகன் மாநாடு நிச்சயம் தோல்விதான் என்று வளரும் நாடுகள் தெரிவித்துள்ளன.

பூமியின் வெப்ப நிலையை, 2 சென்டிகிரேடுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் முக்கியமாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த இலக்கை எட்டத் தேவையான புகை மாசுக் கட்டுப்பாடு, குறைக்கும் அளவு குறித்து எந்தவித உத்தரவாதமும், இலக்கும் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

மேலும், ஏழை நாடுகள் புவிவெப்ப மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக அடுத்த ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை 30 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும். அதேபோல 2020ம் ஆண்டுக்குப் பின்னர் 100 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும்.

2050ம் ஆண்டுக்குள் உலகின் புகை மாசு அளவினை 80 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற முந்தைய கோரிக்கை இந்த ஒப்பந்தத்தில் கைவிடப்பட்டுள்ளது.

வன அழிப்பைத் தடுக்க ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்ய தனியாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரி வந்த , வளரும் நாடுகளில் புகை மாசுக் குறைப்பு நடவடிக்கைளை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், இது அர்த்தப்பூர்வமான ஒப்பந்தம். ஆனால் இந்த முன்னேற்றம் போதாது. இருப்பினும் நீண்ட தூரம் வந்து விட்டோம். மேலும் நிறைய தூரம் போக வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் பூரண திருப்தியைத் தரவில்லை. அதேசமயம், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. நிச்சயம் இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஒப்பந்தம், நடவடிக்கைகள் அமையலாம்.

சில நாடுகள் (சீனாவைக் குறிப்பிட்டுச் சொன்னதாக கூறப்படுகிறது) தங்களது நிலையிலிருந்து இறங்கி வராமல் பிடிவாதம் செய்ததால்தான் ஒப்பந்தத்தின் பலம் கூட வாய்ப்பில்லாமல் போனது என்றார்.

அமெரிக்காவுக்கும், பேசிக் அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து 192 நாடுகளும் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவி்ல்லை.

இப்படி பல ஓட்டைகளும், சில உடைசல்களுமாக கோபன்ஹேகன் ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அடுத்து வனப் பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து தனித் தனியாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-77 அமைப்பின் தலைவரான லுமும்பா டி அபிங் கூறுகையில், இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஆப்பிரிக்கா மற்றும் சிறிய தீவு நாடுகளில் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் கற்பனை செய்து பார்த்ததை விட மிகக் குறைந்த அளவிலான எதிர்பார்ப்பையே இது பூர்த்தி செய்துள்ளது.

பல நாடுகளை இந்த ஒப்பந்தம் நிரந்தரமாக ஏழைகளாகவே வைத்திருக்க வகை செய்யும். ஒபாமாவுக்கும், புஷ்ஷுக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதையே இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என்று குறை கூறியுள்ளார்.

அமெரிக்கா திரும்புகிறார் ஒபாமா..

ஒப்பந்தம் மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்படவுள்ளது. இருப்பினும் இதில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் கோபன்ஹேகன் தட்பவெப்ப நிலை தனக்கு ஒத்துவராததால், வாஷிங்டன் திரும்புவதாகவும் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும், கோபன்ஹேகன் தீர்மானம் அமெரிக்காவை எந்தவிதத்திலும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என்றுதெரிவித்த ஒபாமா புகை மாசுக் குறைப்பு தொடர்பாக அமெரிக்க அளித்த உத்தரவாதத்தை அது நிச்சயம் கடைப்பிடிக்கும் என்றும் கூறினார்.

இந்தியா கிளம்பினார் மன்மோகன்:

இந்த நிலையில், புவிவெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

முன்னதாக மாநாட்டில் அவர் பேசுகையில், இனி வரும் பேச்சுவார்த்தைகள் கியோட்யோ பிரகடனம் மற்றும் பாலி பேச்சுவார்த்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்.

தற்போது நம் முன் உள்ளது மிகக் கடினமான பணியாகும். இதில் ஆக்கப்பூர்வமான முடிவு ஏற்படும் என நம்புகிறேன். அனைவருக்கும் ஒத்துவரக் கூடிய உடன்பாட்டை நாம் எட்ட வேண்டும் என்றார் அவர்.

அமெரிக்க அதிபருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'பேசிக்' கூட்டணி சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், 'பேசிக்' கூட்டணிக்கும் சிறந்ததாகும். புவிவெப்ப மாற்றப் பிரச்சினை மட்டுமல்லாமல் பிற பிரச்சினைகளிலும் பேசிக் கூட்டணி இணைந்து இணக்கமாக செயல்படும் என்றார் அவர்.

பிரதமர் இந்தியாவுக்குக் கிளம்பிய போதிலும், அவரது சிறப்புத் தூதுவரான ஷியாம் சரண் கோபன்ஹேகனிலேயேதான் உள்ளார். ஒப்பந்தத்தை மேலும் துல்லியமாக்க அவர் உதவுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌர்சே> வ்வ்வ்.தட்ஸ்தமிழ்.com

No comments: