Monday, December 7, 2009

புகை மாசுக் குறைப்பு குறித்த உலக நாடுகளின் நிலைப்பாடு

திங்கள்கிழமை, டிசம்பர் 7, 2009,

சென்னை: புவிவெப்ப மாற்ற மாநாடு கோபன்ஹேகனில் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் புகை மாசுக் குறைப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை...

இந்தியா - 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்க முன்வந்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் இதை செய்வதாக இந்தியா கூறியுள்ளது. இருப்பினும் சட்டம் போட்டு தங்களை கட்டுப்படுத்தி இதை செய்ய வைக்க முனையக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்கா - உலகின் மிகப் பெரிய புகை மாசு ஏற்படுத்துபவர்களில் 2வது இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. 2005ம் ஆண்டிலிருந்து 2020க்குள் 17 சதவீத மாசைக் குறைப்பதாக கூறியுள்ளது. அதேசமயம் 2025க்குள் 30 சதவீத மாசைக் குறைக்கவும் உறுதியளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் - 2020க்குள் 20 சதவீத மாசைக் குறைக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. பிற தொழில்மய நாடுகள் ஒன்றாக முன்வந்தால் இந்த அளவை 30 சதவீதமாக அதிகரிக்கவும் தயார் என அறிவித்துள்ளது.

ரஷ்யா - 2020க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க ரஷ்யா தயார். முன்பு 15 சதவீதம் வரை தயார் என கூறி வந்தது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா - புகை மாசுக் குறைப்புக்கு கனடா தரும் உறுதிமொழி 20 சதவீத குறைப்பு. அதேசமயம், கனடாவின் கீழ் உள்ள கியூபெக் பிராந்தியம், ஐரோப்பிய யூனியன் என்ன முடிவெடுக்கிறதோ அதை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.

மெக்சிகோ - 2050ம் ஆண்டுக்குள் 50 சதவீத புகை மாசைக் கட்டுப்படுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது மெக்சிகோ.

ஜப்பான் - 25 சதவீத புகை மாசை 2020க்குள் கட்டுப்படுத்துவதாக ஜப்பான் கூறுகிறது.

நியூசிலாந்து - 2020க்குள் 10 முதல் 20 சதவீத புகை மாசைக் குறைப்பதாக தெரிவித்துள்ளது நியூசிலாந்து. அதேசமயம் கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவைப் பொறுத்து தனது நிலையும் மாறும் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - புகைக் குறைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களை ஆஸ்திரேலிய எம்.பிக்கள் நிராகரித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவின் நிலையில் தெளிவில்லை.

நார்வே - 2020ம் ஆண்டுக்குள் 30 சதவீத புகை மாசைக் குறைக்க நார்வே விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், 40 சதவீதம் வரை இதை அதிகரிக்கவும், 2030ம் ஆண்டுக்குள் புகை மாசே இல்லாமல் செய்யவும் அது ஆர்வமாக உள்ளது.

சீனாவின் புகை மாசுக் குறைப்பு உறுதி மொழி 40 சதவீதமாகும், பிரேசிலின் உறுதிமொழி 36 சதவீதமாகவும் உள்ளன. இந்தோனேசியா 26 சதவீதத்தைக் குறைப்பதாகவும், தென் கொரியா 30 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

No comments: