செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 8, 2009,
சென்னை:
புவிவெப்ப மாற்றத்தால் உலகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி கோபன்ஹேகனில் நேற்று முதல் தங்களது விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த 11 நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ள சில முக்கிய நாடுகள், இந்த மாநாட்டின் மூலம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்த ஒரு பார்வை...
இந்தியா:
பசுமை இல்ல வாயுக்களை (மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஓ.எப்.சி உள்ளிட்டவை) பெருமளவில் வெளியிடும் நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியக் குழுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்கிறார். 2020ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைப்பதாக இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த அறிவிப்பு எங்களது சுய விருப்பமே. இதை சட்டம் போட்டு கட்டுப்படுத்த முயலக் கூடாது என்று இந்தியா நிபந்தனை விதித்துள்ளது. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை இந்த மாநாடு விதிக்கக் கூடாது என்று இந்தியா முக்கியமாக எதிர்பார்க்கிறது.
புகை மாசைக் குறைக்கும் நடவடிக்கைகள் அந்தந்த நாட்டின் சுய விருப்பத்தின் பேரில் அமைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியா வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அடர்த்தி அளவு பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். உண்மையி்ல் உலகிலேயே மிகவும் குறைவான அடர்த்தியிலான கார்பன் டை ஆக்சைடைத்தான் இந்தியா வெளியிடுகிறது. இந்த விஷயத்தில் சீனாதான் மிகவும் மோசம். உலகிலேயே கார்பன் டை ஆக்டைசின் அடர்த்தி சீனாவில்தான் உள்ளது.
சீனா..
புகை மாசை 40 சதவீதம் அளவுக்குக் குறைக்க சீனா தயாராக உள்ளது. அதேசமயம் புகை மாசுக் குறைப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகள் தர வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.
சூரிய சக்தி உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா முன்னிலை வகிப்பதால் இந்த வகை மின்சாரத்தை தங்களிடமிருந்து பெற உலக நாடுகள் அதிக அளவில் முன்வர வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கிறது.
பிரேசில்..
அமேசான் நதி வனப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம், புகை மாசு அளவை பெருமளவில் குறைக்க முடியும் என பிரேசில் கருதுகிறது. மேலும், உயிரி எரிபொருளால் இயங்கும் கார்கள், வாகனங்களை அதிகரிப்பதன் மூலம் புகை மாசை குறைக்க முடியும் எனவும் பிரேசில் கருதுகிறது.
2020க்குள் 39 சதவீத புகை மாசைக் குறைக்க பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதை அடைய உலக நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.
ஐரோப்பிய யூனியன்...
புகை மாசு குறைப்பு தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், சட்டங்கள் தேவை என ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் சமீபத்தில் தீர்மானம் போட்டது. இதன் மூலம் வளர்ந்த, வளரும் நாடுகளின் புகை மாசு அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது கருதுகிறது.
புகை மாசைக் குறைக்க முன்வராத நாடுகளுக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க வேண்டும் எனவும் இது கூறுகிறது.
2020ம் ஆண்டுக்குள் 20 சதவீத புகை மாசைக் குறைப்போம் என்து ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடாகும்.
ஆப்பிரிக்கா...
ஆப்பிரிக்காவின் நிலை சற்று வினோதமாக உள்ளது. வளர்ந்த, தொழில்மயமான நாடுகள் செய்த சேட்டையால்தான் தங்களது கண்டத்தின் பெரும் பகுதி வறட்சியாக மாறியுள்ளதாகவும், ஒரு பகுதியில் வெள்ளக்காடாக உள்ளதாகவும் ஆப்பிரிக்க நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
நாங்கள் புகை மாசை ஏற்படுத்துவதில்லை. மாறாக, பிறர் ஏற்படுத்திய மாசால்தான் எங்களது நாடுகள் வறண்டும், வெள்ளத்தில் சிக்கியும் தவிக்கின்றன. எனவே வளர்ந்த நாடுகள் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என இவை கோருகின்றன.
நைஜீரியா போன்ற எண்ணை வளம் கொழிக்கும் நாடுகளோ, உளக அளவில் எண்ணை பயன்பாடு குறைந்து விட்டால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே அதற்கு இழப்பீடு தர வேண்டும் என கோருகின்றன.
இந்தோனேசியா..
மிகவும் அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடை கக்கும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இருப்பது இந்தோனேசியா. இந்த நாட்டினர் செய்யும் முக்கிய தவறே காடுகளை அழித்து வருவதுதான். காடுகளைப் பாதுகாக்க தொழில்நுட்ப உதவிகளை இந்த நாடு கோரியுள்ளது.
2020ம் ஆண்டுக்குள் 26 சதவீத புகை மாசைக் குறைப்பதாக கூறியுள்ளது இந்தோனேசியா.
ஈகுவடார்..
இந்த நாடு படு வித்தியாசமான நிபந்தனை ஒன்றை முன்வைத்து கோபன்ஹேகன் வந்துள்ளது. அதாவது இந்த நாட்டின் அமேசான் காட்டுப் பகுதியில், கிட்டத்தட்ட 850 மில்லியன் பேரல் கச்சா எண்ணை புதைந்து கிடக்கிறது. இதை எடுக்காமல் இருக்க வளர்ந்த நாடுகள் தங்களுக்கு 3.5 பில்லியன் டாலர் பணம் தர வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் கச்சா எண்ணையை எடுக்க மாட்டோம். புகை மாசும் பெருமளவில் குறையும் என்று தடாலடியாக கூறுகிறது ஈகுவடார்.
இப்படி ஒவ்வொரு நாடும் ஒரு எதிர்பார்ப்புடன் கோபன்ஹேகன் வந்துள்ளதால் இந்த மாநாடு வெற்றி பெறுமா அல்லது இன்னொரு கியோடாவாக மாறுமா என்பதை 11 நாட்கள் கழித்துத்தான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment