Tuesday, December 22, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு

First Published : 23 Dec 2009 12:00:00 AM இசட்

கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!

சௌர்சே< sectionname="Editorial%20Articles&artid="172660&SectionID="133&MainSectionID="133&SEO="&Title="

Sunday, December 20, 2009

உற்சாகத்தோடு கூடி குழப்பம் மற்றும் தோல்வியுடன் முடிந்த கோபன்ஹேகன் மாநாடு

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2009, 12:55[IST]

கோபன்ஹேகன்: பெரும் உற்சாகத்தோடும், எதிர்பார்ப்போடும் கூடிய கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற மாநாடு [^] பெரும் தோ்லவியில் முடிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பேசிக் எனப்படும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் நிராகரித்து விட்டன.

இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த உருப்படியான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.

கோபன்ஹேகன் மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. 192 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் கூடி விவாதித்த இந்த மாநாட்டின் இறுதி நாளில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.

இதற்காக சில வரைவு ஒப்பந்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே, குறிப்பாக டென்மார்க் நாடு முன்வைத்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்ததால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா 2 முறையும், சீனா ஒரு முறையும், ஆப்பிரிக்க நாடுகள் ஒரு முறையும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பிரச்சினையைத் தீர்த்து சுமூக நிலையை ஏற்படுத்த பேசிக் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமே மாநாட்டின் ஒப்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளும் நிராகரித்து விட்டன. இதில் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமான அம்சங்கள் இருப்பதாக அவை கூறி விட்டன.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் மாநாட்டின் ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டால்தான் அது அமலுக்கு வரும் என்பதால் அது நடக்காது என்பது தெளிவாகியுள்ளதால் 2 வாரமாக கோபன்ஹேகனில் நடந்த மாநாடு பெரும் தோல்வி மாநாடாகவே கருதப்படுகிறது.

கோபன்ஹேன் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள், குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளன வளரும் நாடுகள். புவிவெப்ப மாற்ற தடுப்பு நடவடிக்கைளுக்கான கால அட்டவணை இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்பதை அவை கசுட்டிக் காட்டியுள்ளன.

இந்த ஒப்பந்தம், நாஜிகள் நடத்திய இன அழிப்புச் செயலுக்கு சமமானது என்று ஒரு ஆப்பிக்க நாட்டுப் பிரிதிநிதி சற்று கடுமையாகவே வர்ணித்தார்.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் லண்டனில் கூறுகையில், நாம் இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் போதாது என்றார்.

கோபன்ஹேகன் மாநாட்டைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்தியில் மெக்சிகோவில் அடுத்த ஐ.நா. புவிவெப்ப மாநாடு நடைபெறவுள்ளது. அதிலாவது ஏதாவது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும் என பல நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

கியூபா, நிகாரகுவா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமானு என்று வர்ணித்துள்ளன.

முன்னதாக சனிக்கிழமை காலை மாநாட்டின் இறுதி நிகழ்வாக அமெரிக்கா மற்றும் பேசிக் கூட்டமைப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மாநாட்டு ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டது.

இதை ஐ.நா. புவிவெப்ப தடுப்பு கோபன்ஹேகன் மாநாட்டுத் தீர்மானமாக அங்கீகரிப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதை அனைவரும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் வந்து விடக் கூடாது என்பதற்காக மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள், இந்த கோபன்ஹேகன் ஒப்பந்தத்தை கவனத்தில் கொண்டதாக அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாநாடு குறித்து மாநாட்டுத் தலைவரும் டென்மார்க் பிரதமருமான ரஸ்முஸன் கூறுகையில், எனக்கு திருப்தியாக உள்ளது. ஒரு முடிவை நாம் சாதித்துள்ளோம். அடுத்து நாடுகள் அதில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகும். அதன் பின்னர் இது அமலுக்கு வரும் என்றார்.

சௌர்சே> http://thatstamil.oneindia.in/news/2009/12/20/a-copenhagen-accord-it-is.html

Saturday, December 19, 2009

முக்கிய இலக்குகள் எட்டப்படவில்லை - கோபன்ஹேகன் மாநாடு தோல்வி!

சனிக்கிழமை, டிசம்பர் 19, 2009, 9:03[IST]

கோபன்ஹேகன்: கோபன்ஹேகனில் நடந்த .நா. புவிவெப்ப மாற்றத் தடுப்பு குறித்த உச்சிமாநாடு [^], முக்கிய இலக்குகளை எட்டாமல், சொதப்பலாகியுள்ளது.

வளரும் நாடுகள், ஏழை நாடுகளின் பல எதிர்பார்ப்புகள் இதில் பூர்த்தியாகவில்லை.

இந்த மாநாட்டில் மொத்தம் எட்டு வரைவுத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் பேசிக் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கத் தலைவர்கள் முன்பு நேற்று இறுதி பரிசீலனைக்கு வைக்கப்பட்டன.

பேசிக் அமைப்பை திருப்திப்படுத்தி உடன்பாட்டை ஏற்படுத்தும் பொறுப்பு ஒபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ மற்றும் பிரேசில், தென் ஆப்பிரிக்க தலைவர்களுடன் நேற்று பகல் முழுவதும் ஒபாமா தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் இறுதியில், இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தமே கோபன்ஹேகன் மாநாட்டின் பிரகடனமாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையவில்லை. இதனால் கோபன்ஹேகன் மாநாடு நிச்சயம் தோல்விதான் என்று வளரும் நாடுகள் தெரிவித்துள்ளன.

பூமியின் வெப்ப நிலையை, 2 சென்டிகிரேடுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் முக்கியமாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த இலக்கை எட்டத் தேவையான புகை மாசுக் கட்டுப்பாடு, குறைக்கும் அளவு குறித்து எந்தவித உத்தரவாதமும், இலக்கும் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.

மேலும், ஏழை நாடுகள் புவிவெப்ப மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக அடுத்த ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை 30 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும். அதேபோல 2020ம் ஆண்டுக்குப் பின்னர் 100 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும்.

2050ம் ஆண்டுக்குள் உலகின் புகை மாசு அளவினை 80 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற முந்தைய கோரிக்கை இந்த ஒப்பந்தத்தில் கைவிடப்பட்டுள்ளது.

வன அழிப்பைத் தடுக்க ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்ய தனியாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரி வந்த , வளரும் நாடுகளில் புகை மாசுக் குறைப்பு நடவடிக்கைளை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், இது அர்த்தப்பூர்வமான ஒப்பந்தம். ஆனால் இந்த முன்னேற்றம் போதாது. இருப்பினும் நீண்ட தூரம் வந்து விட்டோம். மேலும் நிறைய தூரம் போக வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் பூரண திருப்தியைத் தரவில்லை. அதேசமயம், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. நிச்சயம் இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஒப்பந்தம், நடவடிக்கைகள் அமையலாம்.

சில நாடுகள் (சீனாவைக் குறிப்பிட்டுச் சொன்னதாக கூறப்படுகிறது) தங்களது நிலையிலிருந்து இறங்கி வராமல் பிடிவாதம் செய்ததால்தான் ஒப்பந்தத்தின் பலம் கூட வாய்ப்பில்லாமல் போனது என்றார்.

அமெரிக்காவுக்கும், பேசிக் அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து 192 நாடுகளும் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவி்ல்லை.

இப்படி பல ஓட்டைகளும், சில உடைசல்களுமாக கோபன்ஹேகன் ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அடுத்து வனப் பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து தனித் தனியாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-77 அமைப்பின் தலைவரான லுமும்பா டி அபிங் கூறுகையில், இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஆப்பிரிக்கா மற்றும் சிறிய தீவு நாடுகளில் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் கற்பனை செய்து பார்த்ததை விட மிகக் குறைந்த அளவிலான எதிர்பார்ப்பையே இது பூர்த்தி செய்துள்ளது.

பல நாடுகளை இந்த ஒப்பந்தம் நிரந்தரமாக ஏழைகளாகவே வைத்திருக்க வகை செய்யும். ஒபாமாவுக்கும், புஷ்ஷுக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதையே இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என்று குறை கூறியுள்ளார்.

அமெரிக்கா திரும்புகிறார் ஒபாமா..

ஒப்பந்தம் மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்படவுள்ளது. இருப்பினும் இதில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் கோபன்ஹேகன் தட்பவெப்ப நிலை தனக்கு ஒத்துவராததால், வாஷிங்டன் திரும்புவதாகவும் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும், கோபன்ஹேகன் தீர்மானம் அமெரிக்காவை எந்தவிதத்திலும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என்றுதெரிவித்த ஒபாமா புகை மாசுக் குறைப்பு தொடர்பாக அமெரிக்க அளித்த உத்தரவாதத்தை அது நிச்சயம் கடைப்பிடிக்கும் என்றும் கூறினார்.

இந்தியா கிளம்பினார் மன்மோகன்:

இந்த நிலையில், புவிவெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

முன்னதாக மாநாட்டில் அவர் பேசுகையில், இனி வரும் பேச்சுவார்த்தைகள் கியோட்யோ பிரகடனம் மற்றும் பாலி பேச்சுவார்த்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்.

தற்போது நம் முன் உள்ளது மிகக் கடினமான பணியாகும். இதில் ஆக்கப்பூர்வமான முடிவு ஏற்படும் என நம்புகிறேன். அனைவருக்கும் ஒத்துவரக் கூடிய உடன்பாட்டை நாம் எட்ட வேண்டும் என்றார் அவர்.

அமெரிக்க அதிபருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'பேசிக்' கூட்டணி சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், 'பேசிக்' கூட்டணிக்கும் சிறந்ததாகும். புவிவெப்ப மாற்றப் பிரச்சினை மட்டுமல்லாமல் பிற பிரச்சினைகளிலும் பேசிக் கூட்டணி இணைந்து இணக்கமாக செயல்படும் என்றார் அவர்.

பிரதமர் இந்தியாவுக்குக் கிளம்பிய போதிலும், அவரது சிறப்புத் தூதுவரான ஷியாம் சரண் கோபன்ஹேகனிலேயேதான் உள்ளார். ஒப்பந்தத்தை மேலும் துல்லியமாக்க அவர் உதவுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌர்சே> வ்வ்வ்.தட்ஸ்தமிழ்.com

Friday, December 18, 2009

கோபன்ஹேகன்: அடுத்தடுத்து திருப்பம்- வெளிநடப்பு செய்து திரும்பி வந்த மன்மோகன் சிங்-சீனா பிரதமர்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 18, 2009, 15:29[IST]

கோபன்ஹேகன்: வளர்ந்த நாடுகளுக்கு சாதகமான முறையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபன்ஹேகன் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்த இந்தியா [^], சீனா உள்ளிட்ட பேசிக் அமைப்பின் நாடுகள் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தின. பின்னர் அவர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோபன்ஹேகன் மாநாடு [^] பெரும் பரபரப்பாகியுள்ளது

கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானம் தொடர்பாக நேற்று இரவு இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளின் தலைவர்கள் கூடி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். இன்று காலை வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.

அதன் பின்னர் இந்தத் தலைவர்களின் பிரதிநிதிகள், மாநாட்டுத் தலைவரும் டென்மார்க் பிரதமருமான ரஸ்முஸனை சந்தித்தனர். அதன் பின்னர் மாநாட்டுத் தீர்மானம் தயாராகி விட்டதாகவும், விரைவில் இதை டென்மார்க் சமர்ப்பிக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.

ஆனால் இதற்கு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தன.

இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-77 ஆகியவை இந்த தீர்மானம் மிகப் பெரிய டிராமா என்று வர்ணித்துள்ளன.

கடும் கோபத்தை முகத்தில் காட்டியபடி மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் மிகப் பெரிய டிராமாவை அரங்கேற்றியுள்ளதாக கருதுகிறோம். அனைவருடனும் ஆலோசனை நடத்தினோம் என்று கணக்கு காட்டுவதற்காகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக கருதுகிறோம்.

பேசிக் அமைப்பின் (இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்போம்.

ஏற்கனவே டென்மார்க் சமர்ப்பித்த வரைவுத் தீர்மானத்தைத்தான் உரு மாற்றி புதிய தீர்மானமாக காட்டுகின்றனர். ஒரு மணி நேரத்தில் எப்படி இவ்வளவு பெரிய தீர்மானத்தை உருவாக்க முடியும். இது மிகப் பெரும் மர்மமாக உள்ளது.

யாரிடமிருந்தோ தீர்மானத்தைப் பெற்று புதிய தீர்மானமாக காட்ட முயல்வதாக கருதுகிறோம் என்றார்.

ஜி-77 அமைப்பின் இணைத் தலைவரான லுமும்பா ஸ்டானிஸ்லாஸ் டி அபிங் கூறுகையில், இது பெரிய நாடகம். டென்மார்க் கொடுத்த வரைவுத் தீர்மானத்தை அப்படியே மாற்றிக் காட்டுகின்றனர். திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார்.

'பேசிக்' கூட்டம்...

இந்த நிலையில் இன்று பேசிக் எனப்படும் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு தீர்மானம் குறித்து விவாதித்தது.

முன்னதாக இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் சந்தித்து இதுகுறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், தீர்மானத்தின் அம்சங்கள் வளரும் நாடுகளுக்கு சாதகமாக இல்லை என்ற கருத்தொற்றுமை எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற இரு தலைவர்களும், மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர்.

இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, சீனா தவிர, பேசிக் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் வெளிநடப்பு செய்தன.

பின்னர் இந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் தனியாக கூடி ஆலோசித்தனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நான்கு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்து அரங்குக்குத் திரும்பினர்.

எதில் சிக்கல்...?:

புகை மாசுக் கட்டுப்பாட்டு குறித்துதான் இந்தியா, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் மட்டுமல்லாமல் அமெரிக்காவும் பிடிவாதத்துடன் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆன்ட்ரியாஸ் கார்ல்கிரென் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 110 உலகத் தலைவர்களின் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தீர்மானத்தை இறுதி செய்ய தீர்மானித்தோம். ஆனால் முடியவி்ல்லை.

தற்போது உலகத் தலைவர்கள்தான் இதுகுறித்து தீர்மானிக்க வேண்டும். சீனாவும், அமெரிக்காவும்தான் இழுபறிக்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.

சென்னை மேயர் சைக்கிளில் ரவுண்டு...

இதற்கிடையே கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், சைக்கிளில் நகரை வலம் வந்தார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ள, சென்னை மற்றும் டெல்லி மேயர்களுக்கு அழைப்பு வந்தது. அதில் சென்னை மேயர் மா.சுப்ரமணியன் மட்டும் கலந்து கொண்டார்.

கடல்நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்துதல், கழிவுநீரை எரிவாயுவாக மாற்றி அந்நாட்டு மக்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை மேயர் நேரில் பார்வையிட்டார்.

சௌர்சே> http://thatstamil.oneindia.in/news/2009/12/18/climate-draft-ready-india-suspects.html

Wednesday, December 16, 2009

கோபன்ஹேகனில் வன்முறை!-கண்ணீர் புகை குண்டு வீச்சு!!

புதன்கிழமை, டிசம்பர் 16, 2009, 16:47[IST]

கோபன்ஹேகன்: கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற தடுப்பு மாநாட்டு அரங்கம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். வன்முறை [^]யில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெல்லா சென்டர் ரயில் நிலையம் அருகே பேரணியாக கிளம்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கலைய மறுத்ததால் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.

போலீஸாரின் நாய்ப்படையும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

இந்த பல்லா சென்டரில்தான் புவிவெப்ப தடுப்பு மாநாடு [^] நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள், புவிவெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மாநாடு அதிகம் கவலைப்படாமல் தேவையில்லாதவை குறித்து அதிகம் பேசி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும், ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழலியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

முன்னதாக கோபன்ஹேகனுக்கு வெளியே உள்ள தார்ன்பி என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அவர்கள் கிளம்பினர். கிளைமேட் ஜஸ்டிஸ் ஆக்ஷன் என்ற அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கிட்டத்தட்ட 1000 பேர் வரை இதற்காக கூடியிருந்தனர்.

சௌர்சே> http://thatstamil.oneindia.in/news/2009/12/16/copenhagen-police-arrest-100-prote.html

கோபன்ஹேகன் மாநாடு கிளப்பும் 46,200 டன் கார்பன் டை ஆக்சைடு!

புதன்கிழமை, டிசம்பர் 16, 2009, 15:48[IST]

கோபன்ஹேகன்: புவிவெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக இதற்கு முன்பு நடந்த மாநாடு [^]கள் மூலம் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவை விட தற்போதைய கோபன்ஹேகன் மாநாட்டால் 46,200 டன் புகை மாசு உருவாக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது 6,60,000 எத்தியோப்பியர்கள் ஒரு ஆண்டில் ஏற்படுத்தும் புகை மாசுக்கு சமமாம்.

உலகம் முழுவதுமிருந்து பத்திரிக்கையாளர்கள், பிரதிநிதிகள், பேச்சாளர்கள், பல்வேறு அமைப்பினர், பார்வையாளர்கள் என கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கோபன்ஹேகனில் குழுமியுள்ளனர். டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

இவர்களின் வருகையால் ஏகப்பட்ட விமானங்கள் கோபன்ஹேகன் நகருக்கு வந்தவண்ணம் உள்ளன. இந்த விமானங்கள் எழுப்பும் புகைதான் மேற்கண்ட புள்ளி விவரம்.

இந்தப் புகையைக் கொண்டு 10 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப முடியும். ஆண்டுக்கு 2300 அமெரிக்கர்கள் வெளிப்படுத்தும் புகை மாசுவுக்கு இது சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாநாட்டின் மூலம் கிட்டத்தட்ட 5,700 டன் புகை மாசு வெளிப்படுமாம். இதுதவிர விமானங்களின் போக்குவரத்தின் மூலம் 40,500 டன் புகை மாசு வெளியாகிறதாம்.

இந்த ஆய்வை மேற்கொண்ட டிலோலைட் என்ற நிறுவனத்தின் ஆலோசகரான ஸ்டைன் பல்ஸ்லேவ் கூறுகையில், கியோட்டா மாநாட்டில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியாகவில்லை. ஆனால் இந்த முறை மிகப் பெரிய அளவில் மக்கள் கூடியுள்ளதால் புகை மாசின் அளவு அதிகமாக உள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தது 18,000 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். எனவே கார்பன் மாசின் அளவும் அதிகமாக உள்ளது.

இது தொடக்க கட்ட புள்ளி விவரம்தான். மாநாட்டின் நிறைவில் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

நாங்கள் மேற்கொண்ட புகை மாசு ஆய்வின்போது, தங்குமிடங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு, உள்ளூர் போக்குவரத்தால் ஏற்படும் மாசு, மின்சாரம், மாநாட்டு அரங்கத்தை வெம்மையாக வைத்திருக்க செய்யப்படும் சூடுபடுத்தும் ஏற்பாடு, காகிதங்கள், பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கம்ப்யூட்டர்கள், சமையலறைகள், போட்டோ காப்பியர்கள், பிரின்டர்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மாசு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டோம்.

கோபன்ஹேகனில் தற்போது வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களில் 23 சதவீதம் தங்குமிடத்திலிருந்துதான் வருகிறது. போக்குவரத்தின் பங்கு 7 சதவீதமாகும். 70 சதவீதம் மாநாட்டு அரங்குக்குள்ளிருந்து வருகிறது என்றார் பல்ஸ்லேவ்.

புகையைத் தடுக்கக் கூடியுள்ள மாநாட்டின் மூலம் இவ்வளவு புகையா...??

Monday, December 14, 2009

தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆக பிரிப்பு: தனியார் வசமாகாது

திங்கள்கிழமை, டிசம்பர் 14, 2009, 15:30[IST]

சென்னை: தமிழ்நாடு [^] மின்சார வாரியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார வாரியம் எக்காரணம் கொண்டும் தனியார்வசம் ஒப்படைக்கப்படாது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியமானது தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகம் (Tamil NaduTransmission Corporation), மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளை முதல்வர் கருணாநிதி இன்று கோட்டையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

தமிழ்நாடு மின் வாரியம் 1957ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2007ல் பொன்விழா கண்டுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும்; மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது.

இந்த வாரியம் மேலும் செம்மையாகச் செயலாற்றி; மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாக, மத்திய அரசு 2003ல் பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியத்தை, தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என 3 அமைப்புகளாகப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தை இன்று தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழகத்தின் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கூடுதல் மின்சாரம், விவசாயிகளுக்குத் தேவையான இலவச மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதிலும் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் மின் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டியதில் கவனம் செலுத்துவது மாநில அரசிற்குக் கடமையாகிறது.

கடந்த கால ஆட்சியில் இந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றாததன் காரணமாகத் தற்போது தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதைச்சரி செய்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், மையத் தொகுப்பில் இருந்தும் பெரும் செலவில் மின்சாரம் வாங்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்காக 2006ம் ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்றபின், தற்போது உற்பத்தியாகும் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆயிரத்து 152 மெகாவாட்டாக உயர்த்திடத்திட்டமிடப்பட்டது.

இதற்காக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; மேலும் அதே வட சென்னையில், தேசிய அனல் மின் நிலையத் கழகத்துடன் இணைந்து 1,500 மெகாவாட் மின் உற்பத்திக்கும்;

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கூடுதலாக 600 மெகாவாட் மின் உற்பத்திக்கும்; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 1,000 மெகாவாட் மின் உற்பத்திக்கும்;

உடன்குடியில் பாரத மிகுமின் நிலையத்துடன் இணைந்து 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்திடப் புதிய மின் திட்டங்களுக்கு இந்த அரசு அனுமதி அளித்து, அதற்கான பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த திட்டங்கள் எல்லாம் 2012 இறுதியில் முடிவடையும்.

அப்பொழுது, நமது மின் உற்பத்தி 15 ஆயிரத்து 152 மெகாவாட்டாக உயரும்.

இது நமது வருங்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு இந்த அரசினால் உருவாக்கப்பட்டுள்ள மின் திட்டங்கள் ஆகும்.

இந்த மின் திட்டங்களுடைய பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், இதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தைச் சரியான முறையில் பகிர்ந்தளிப் பதற்கும் இப்போது புதிதாக ஏற்படுத்துகின்ற இந்த கழகங்கள் பயன்படும்.

ஏற்கனவே அறிவித்தவாறு, தமிழகத்தைப் பொறுத்தவரை மின் வாரியம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது. இந்தப் புதிய மின் உற்பத்திக் கழகங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, பணியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மூன்று நிறுவனங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் தலைமையிலேயே தொடர்ந்து இயங்கும். இந்த மூன்று நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள், அலுவலர்கள் தங்களது விருப்பப்படி, எந்த நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த மூன்று நிறுவனங்களிலும் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் இப்போது அடைந்து வரும் அனைத்துச் சலுகைகளையும் தொடர்ந்து பெறுவார்கள்.

இன்று தொடங்கப்படும் தமிழ்நாடு மின்தொடர் அமைப்புக்கழகம் தமிழகத்தில் சிறப்பான மின் விநியோகத்திற்கு உதவிட என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்றார் கருணாநிதி.

Wednesday, December 9, 2009

புவிவெப்ப மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவால் 100 கோடி பேர் இடம் பெயரும் அபாயம்

புதன்கிழமை, டிசம்பர் 9, 2009, 17:13

கோபன்ஹேகன்: புவிவெப்ப மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக அடுத்த நாற்பது ஆண்டுகளில் தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா [^], மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் [^] வேறு பகுதிக்கு இடம் பெயரும் நிலை ஏற்படும் சர்வதேச இடப் பெயர்ச்சிக்கான கழகம் தெரிவித்துள்ளது.

இதுது தொடர்பாக அந்தக் கழகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2050ம் ஆண்டுக்குள் புவிவெப்ப மாற்றம் காரணமாக 2.5 கோடி முதல் 100 கோடி பேர் வரை இடம் பெயரும் நிலைமை ஏற்படும்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மத்திய அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் இடம் பெயருவார்கள்.

புவிவெப்ப மாற்றம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சீரழிவும் கூட மக்களின் இடப் பெயர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும்.

2008ம் ஆண்டு திடீர் சுற்றுச்சூழல் சீரழிவுகள் காரணமாக 2 கோடி பேர் வீடுகளை இழக்க நேரிட்டது. இது வரும் காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கோபன்ஹேகன் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

கோபன்ஹேகன்: டென்மார்க் போட்ட குண்டு- வளரும் நாடுகள் கொந்தளிப்பு

புதன்கிழமை, டிசம்பர் 9, 2009, 10:31

கோபன்ஹேகன்: கோபன்ஹேகன் புவிவெப்ப மாநாட்டின் இறுதி பிரகடனம் குறித்து டென்மார்க் சமர்ப்பித்த வரைவுத் திட்டத்திற்கு வளரும் நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்தனன. இதையடுத்து தனது திட்டத்தை டென்மார்க் வாபஸ் பெற்று விட்டது.

2வது நாள் மாநாட்டின் மாலையில் டென்மார்க் மாநாட்டின் இறுதிப் பிரகடனம் தொடர்பான ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது.

ஏற்கனவே உள்ள ஐ.நா. புவிவெப்ப மாநாட்டு திட்டம் மற்றும் கியோட்டா பிரகடனம் ஆகியவற்றில், வளர்ந்த நாடுகள், தொழில்மயமான நாடுகள்தான் பெருமளவில் புகை மாசுவை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. கார்பன் புகை பெருமளவில் உலகை அச்சுறுத்த இந்த நாடுகள்தான் காரணம் என இதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக வளரும் நாடுகள்தான் இதில் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும். புகை மாசைக் குறைக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தனது வரைவுத் திட்டத்தில் டென்மார்க் கூறியுள்ளது.

இதற்கு வளரும் நாடுகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்த.

இதுகுறித்து ஐ.நாவுக்கான சூடான் பிரதிநிதி லுமும்பா ஸ்டானிஸ்லஸ் டி அபிங் கூறுகையில், டென்மார்க்கின் கூற்று முற்றிலும் தவறானது. கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். கியோட்டோ பிரகடனம் மற்றும் ஐ.நா. பிரகடனம் ஆகிய இரண்டையுமே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் உள்ளது டென்மார்க்கின் பேச்சு.

வளரும் நாடுகளை குற்றவாளியாக்க அது முயலுகிறது. மேலும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நிதியுதவிகள் பாய வேண்டும் என்றும் அது கூற முயலுகிறது. இதை ஏற்கவே முடியாது என்றார்.

வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி-77 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் சூடான் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறுகையில், வளரும் நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகவே இது தோன்றுகிறது. பொருளாதார வளம் மிகுந்த வளர்ந்த நாடுகளை காப்பாற்ற டென்மார்க முயல்வதாக தெரிகிறது.

வளரும் நாடுகளின் வளங்களையும், நலங்களையும் கொள்ளையடிக்க டென்மார்க் திட்டமிடுகிறது என்றார் அவர்.

வெளியேறுவோம்- இந்தியா எச்சரிக்கை...

டென்மார்க்கின் திட்டம் குறித்து இந்தியாவும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், டென்மார்க்கின் திட்டம் தவறானது, கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தை முன்னிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்த மாநாட்டிலிருந்து இந்தியா வெளியேற வேண்டியிருக்கும் என்றார்.

இதேபோல சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் கூட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது டென்மார்க்.

இதுகுறித்து டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சர் கோனி ஹெட்கார்ட் கூறுகையில், இது ஒரு திட்டமல்ல. மாறாக விவாதத்திற்கான பொருள்தான். இருப்பினும் அது சர்ச்சையைக் கிளப்பியதால் அதைத் திரும்பப் பெற்றுள்ளோம் என்றார்.

ஐ.நா. புவிவெப்ப மாநாட்டு செயலகமும் இது திட்டமல்ல, விவாதப் பொருள்தான், அதிகாரப்பூர்வமான ஒன்றல்ல என்று விளக்கியுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து இந்தியப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், டென்மார்க் அரசின் இந்தத் திட்டம் நகல் எடுக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்றார்.

புவிவெப்ப மாநாட்டில் 2வது நாளே சூடு பறக்கத் தொடங்கியுள்ளதால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tuesday, December 8, 2009

கோபன்ஹேகன்: ஒவ்வொரு நாடும் ஒரு கோரிக்கையோடு..!

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 8, 2009,

சென்னை:

புவிவெப்ப மாற்றத்தால் உலகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி கோபன்ஹேகனில் நேற்று முதல் தங்களது விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த 11 நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ள சில முக்கிய நாடுகள், இந்த மாநாட்டின் மூலம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்த ஒரு பார்வை...

இந்தியா:

பசுமை இல்ல வாயுக்களை (மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஓ.எப்.சி உள்ளிட்டவை) பெருமளவில் வெளியிடும் நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியக் குழுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்கிறார். 2020ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைப்பதாக இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த அறிவிப்பு எங்களது சுய விருப்பமே. இதை சட்டம் போட்டு கட்டுப்படுத்த முயலக் கூடாது என்று இந்தியா நிபந்தனை விதித்துள்ளது. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை இந்த மாநாடு விதிக்கக் கூடாது என்று இந்தியா முக்கியமாக எதிர்பார்க்கிறது.

புகை மாசைக் குறைக்கும் நடவடிக்கைகள் அந்தந்த நாட்டின் சுய விருப்பத்தின் பேரில் அமைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அடர்த்தி அளவு பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். உண்மையி்ல் உலகிலேயே மிகவும் குறைவான அடர்த்தியிலான கார்பன் டை ஆக்சைடைத்தான் இந்தியா வெளியிடுகிறது. இந்த விஷயத்தில் சீனாதான் மிகவும் மோசம். உலகிலேயே கார்பன் டை ஆக்டைசின் அடர்த்தி சீனாவில்தான் உள்ளது.

சீனா..

புகை மாசை 40 சதவீதம் அளவுக்குக் குறைக்க சீனா தயாராக உள்ளது. அதேசமயம் புகை மாசுக் குறைப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகள் தர வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.

சூரிய சக்தி உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா முன்னிலை வகிப்பதால் இந்த வகை மின்சாரத்தை தங்களிடமிருந்து பெற உலக நாடுகள் அதிக அளவில் முன்வர வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கிறது.

பிரேசில்..

அமேசான் நதி வனப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம், புகை மாசு அளவை பெருமளவில் குறைக்க முடியும் என பிரேசில் கருதுகிறது. மேலும், உயிரி எரிபொருளால் இயங்கும் கார்கள், வாகனங்களை அதிகரிப்பதன் மூலம் புகை மாசை குறைக்க முடியும் எனவும் பிரேசில் கருதுகிறது.

2020க்குள் 39 சதவீத புகை மாசைக் குறைக்க பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதை அடைய உலக நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.

ஐரோப்பிய யூனியன்...

புகை மாசு குறைப்பு தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், சட்டங்கள் தேவை என ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் சமீபத்தில் தீர்மானம் போட்டது. இதன் மூலம் வளர்ந்த, வளரும் நாடுகளின் புகை மாசு அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது கருதுகிறது.

புகை மாசைக் குறைக்க முன்வராத நாடுகளுக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க வேண்டும் எனவும் இது கூறுகிறது.

2020ம் ஆண்டுக்குள் 20 சதவீத புகை மாசைக் குறைப்போம் என்து ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடாகும்.

ஆப்பிரிக்கா...

ஆப்பிரிக்காவின் நிலை சற்று வினோதமாக உள்ளது. வளர்ந்த, தொழில்மயமான நாடுகள் செய்த சேட்டையால்தான் தங்களது கண்டத்தின் பெரும் பகுதி வறட்சியாக மாறியுள்ளதாகவும், ஒரு பகுதியில் வெள்ளக்காடாக உள்ளதாகவும் ஆப்பிரிக்க நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

நாங்கள் புகை மாசை ஏற்படுத்துவதில்லை. மாறாக, பிறர் ஏற்படுத்திய மாசால்தான் எங்களது நாடுகள் வறண்டும், வெள்ளத்தில் சிக்கியும் தவிக்கின்றன. எனவே வளர்ந்த நாடுகள் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என இவை கோருகின்றன.

நைஜீரியா போன்ற எண்ணை வளம் கொழிக்கும் நாடுகளோ, உளக அளவில் எண்ணை பயன்பாடு குறைந்து விட்டால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே அதற்கு இழப்பீடு தர வேண்டும் என கோருகின்றன.

இந்தோனேசியா..

மிகவும் அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடை கக்கும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இருப்பது இந்தோனேசியா. இந்த நாட்டினர் செய்யும் முக்கிய தவறே காடுகளை அழித்து வருவதுதான். காடுகளைப் பாதுகாக்க தொழில்நுட்ப உதவிகளை இந்த நாடு கோரியுள்ளது.

2020ம் ஆண்டுக்குள் 26 சதவீத புகை மாசைக் குறைப்பதாக கூறியுள்ளது இந்தோனேசியா.

ஈகுவடார்..

இந்த நாடு படு வித்தியாசமான நிபந்தனை ஒன்றை முன்வைத்து கோபன்ஹேகன் வந்துள்ளது. அதாவது இந்த நாட்டின் அமேசான் காட்டுப் பகுதியில், கிட்டத்தட்ட 850 மில்லியன் பேரல் கச்சா எண்ணை புதைந்து கிடக்கிறது. இதை எடுக்காமல் இருக்க வளர்ந்த நாடுகள் தங்களுக்கு 3.5 பில்லியன் டாலர் பணம் தர வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் கச்சா எண்ணையை எடுக்க மாட்டோம். புகை மாசும் பெருமளவில் குறையும் என்று தடாலடியாக கூறுகிறது ஈகுவடார்.

இப்படி ஒவ்வொரு நாடும் ஒரு எதிர்பார்ப்புடன் கோபன்ஹேகன் வந்துள்ளதால் இந்த மாநாடு வெற்றி பெறுமா அல்லது இன்னொரு கியோடாவாக மாறுமா என்பதை 11 நாட்கள் கழித்துத்தான் பார்க்க வேண்டும்.

Monday, December 7, 2009

புகை மாசுக் குறைப்பு குறித்த உலக நாடுகளின் நிலைப்பாடு

திங்கள்கிழமை, டிசம்பர் 7, 2009,

சென்னை: புவிவெப்ப மாற்ற மாநாடு கோபன்ஹேகனில் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் புகை மாசுக் குறைப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை...

இந்தியா - 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்க முன்வந்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் இதை செய்வதாக இந்தியா கூறியுள்ளது. இருப்பினும் சட்டம் போட்டு தங்களை கட்டுப்படுத்தி இதை செய்ய வைக்க முனையக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்கா - உலகின் மிகப் பெரிய புகை மாசு ஏற்படுத்துபவர்களில் 2வது இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. 2005ம் ஆண்டிலிருந்து 2020க்குள் 17 சதவீத மாசைக் குறைப்பதாக கூறியுள்ளது. அதேசமயம் 2025க்குள் 30 சதவீத மாசைக் குறைக்கவும் உறுதியளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் - 2020க்குள் 20 சதவீத மாசைக் குறைக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. பிற தொழில்மய நாடுகள் ஒன்றாக முன்வந்தால் இந்த அளவை 30 சதவீதமாக அதிகரிக்கவும் தயார் என அறிவித்துள்ளது.

ரஷ்யா - 2020க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க ரஷ்யா தயார். முன்பு 15 சதவீதம் வரை தயார் என கூறி வந்தது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா - புகை மாசுக் குறைப்புக்கு கனடா தரும் உறுதிமொழி 20 சதவீத குறைப்பு. அதேசமயம், கனடாவின் கீழ் உள்ள கியூபெக் பிராந்தியம், ஐரோப்பிய யூனியன் என்ன முடிவெடுக்கிறதோ அதை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.

மெக்சிகோ - 2050ம் ஆண்டுக்குள் 50 சதவீத புகை மாசைக் கட்டுப்படுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது மெக்சிகோ.

ஜப்பான் - 25 சதவீத புகை மாசை 2020க்குள் கட்டுப்படுத்துவதாக ஜப்பான் கூறுகிறது.

நியூசிலாந்து - 2020க்குள் 10 முதல் 20 சதவீத புகை மாசைக் குறைப்பதாக தெரிவித்துள்ளது நியூசிலாந்து. அதேசமயம் கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவைப் பொறுத்து தனது நிலையும் மாறும் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - புகைக் குறைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களை ஆஸ்திரேலிய எம்.பிக்கள் நிராகரித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவின் நிலையில் தெளிவில்லை.

நார்வே - 2020ம் ஆண்டுக்குள் 30 சதவீத புகை மாசைக் குறைக்க நார்வே விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், 40 சதவீதம் வரை இதை அதிகரிக்கவும், 2030ம் ஆண்டுக்குள் புகை மாசே இல்லாமல் செய்யவும் அது ஆர்வமாக உள்ளது.

சீனாவின் புகை மாசுக் குறைப்பு உறுதி மொழி 40 சதவீதமாகும், பிரேசிலின் உறுதிமொழி 36 சதவீதமாகவும் உள்ளன. இந்தோனேசியா 26 சதவீதத்தைக் குறைப்பதாகவும், தென் கொரியா 30 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய கோபன்ஹேகன் புவிவெப்ப மாநாடு

திங்கள்கிழமை, டிசம்பர் 7, 2009,

கோபன்ஹேகன்: உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற மாநாடு [^] இன்று தொடங்கியது.

ஐ.நா.வின் ஏற்பாட்டின் பேரில் 11 நாள் புவிவெப்ப மாற்ற மாநாடு இன்று கோபன்ஹேகனில் தொடங்கியது.

மாநாட்டின் முதல் நாளான இன்று புவிவெப்ப மாற்றத்தால் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள், ஆபத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் தொடக்கமாக ஒரு வீடியோ படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், புவிவெப்ப மாற்றம் ஒரு இளம் சிறுமியின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

தான் அடிப்பாடி விளையாடிய ஆசையான விளையாட்டு மைதானம், வறண்டு உலர்ந்த பாலைவனம் போல மாறுவதையும், மறுபக்கம் கடும் வெள்ளத்தால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவதையும் கண்டு அந்த சிறுமி கதறி அழுவதாக காட்சிகள் இருந்தன.

இந்த வீடியோ படத்தை உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களும் பார்த்தனர்.

முன்னதாக டென்மார்க் நாட்டு இளம் சிறுமியரின் கோரஸ் பாடல் இடம் பெற்றது.

மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய ஐ.நா. புவிவெப்ப மாற்றக் கமிட்டியின் தலைவரான ராஜேந்திர குமார் பச்சோரி கூறுகையில், உலகின் இயற்கையை, தட்பவெப்பத்தை மனிதர்கள் பாதிக்கிறார்கள். பதிலுக்கு அது நம்மை பாதிக்கப் போகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

புவிவெப்ப மாற்றத்தால் என்ன ஆகும் என்பது குறித்த அறிவியல் வாதங்களை நாம் நிறையப் பார்த்து விட்டோம். இப்போது நாம் நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். அதற்கான நேரம் இது. இந்த மாநாடு அந்த நடவடிக்கைளுக்கு வழி கோலட்டும் என்றார்.

டென்மார்க் பிரதமர் ரால்ஸ் லோக்கே ரஸ்முஸன் பேசுகையில், புவிவெப்ப மாற்றம், குழந்தைகள், முதியவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கும்.

புவிவெப்ப மாற்றத்திற்கு எல்லைகள் இல்லை. அது யாரையும் பார்க்காது. அனைவரையும் அழித்து விடும். இதை நாம் மாற்ற வேண்டும், நம்மால் மாற்ற முடியும், மாற்றியே தீர வேண்டும்.

இங்கு நடைபெறப் போகும் விவாதங்கள் மிகக் கடுமையானவையாக இருக்கும். உலகத் தலைவர்கள் கடுமையாக வாதிடப் போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. நிச்சயம் இது இங்கு சூட்டைக் கிளப்பும் என்பதில் ஐயம் இல்லை. அதேசமயம், ஒருமித்த தீர்ப்பை இந்த மாநாடு தரும் என்று நம்புகிறேன்.

உடன்பாட்டை நாம் எட்டும் தூரத்திற்கு வந்து விட்டோம். நிச்சயம் அதை நாம் சந்திப்போம் என்றார்.

மாநாட்டில் 192 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் கூடி விவாதித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தப் போகின்றனர். இந்த மாநாட்டின் இறுதியில் அந்த உடன்பாட்டை ஐ.நா. பிரகடனம் செய்யும். அதன்படி உலக நாடுகள் புவிவெப்ப மாற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் 3500 பத்திரிக்கையாளர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.