""விவசாயிகளின் அறிவை முடக்கும் வேளாண் மன்றச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு "நவதான்யா' அமைப்பின் தலைவரும், பிரபல சமூக சேவகியுமான வந்தனா சிவா கோரிக்கை விடுத்தார். "பசுமைப் புரட்சி வன்முறை' என்ற ஆய்வு நூலை எழுதியவர் வந்தனா சிவா. ரசாயன உரங்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக போராடி வருபவர் அவர். இந்நிலையில், அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: ""வேளாண் மன்றங்களில் பதிவு செய்துள்ள வேளாண் பட்டதாரிகள் மட்டுமே விவசாயப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்'' என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகளின் வேளாண் அறிவு குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் உருவாவது இல்லை. அந்த அறிவு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல்வகை சூழ்நிலைகளில், பல்வேறு விளைநிலங்களில், பல்வேறு உத்திகளை கையாண்டு பெற்ற அறிவாகும். இது தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இப்படித்தான் இந்திய விவசாயிகள் பல லட்சக்கணக்கான நெல் ரகங்களை உருவாக்கினார்கள். ஆனால் "பசுமைப் புரட்சி' என்ற பெயரில் இறக்குமதியான தொழில்நுட்பங்கள், ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் விற்பனை செய்வதற்காக இந்த நெல் ரகங்களை அழித்து விட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாபத்துக்காக உருவாக்கிய பசுமைப் புரட்சியின் அடுத்தக் கட்டமாக மரபணு மாற்றுத் தொழில்நுட்பமும், உயிரித் தொழில்நுட்பமும் உருவெடுத்துள்ளன. ஒரு விவசாயி யாரிடம் விவசாய தொழில்நுட்பத்தை பெறுவது என்பது அவரின் அடிப்படை உரிமை. அதனை தமிழக அரசின் சட்டம் முடக்குகிறது. விவசாயத்தை நிறுவனமயமாக்க நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் ஆதரவாக உள்ளது. தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து வரும் விவசாயிகளின் அறிவை முடக்கும் வேளாண் மன்றச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இந்திய விவசாயிகளை காப்பாற்றவும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை எதிர்த்தும், விவசாயத்தை நிறுவனமயமாக்கத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார் வந்தனா சிவா. பேட்டியின்போது ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் செல்வம், வேளாண் மன்றச் சட்டத்தை எதிர்க்கும் "கருப்புச் சட்ட எதிர்ப்பு கூட்டுக் குழு'வின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், விமலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
You are utilizing the blog in Good manner. I appreciate the way you post.
Go on!
Thanks for your comments
Post a Comment