தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் குறித்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் ஜாசூல் - திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட அமைப்புகள் சார்பில் திருவண்ணாமலை சாரண சாரணியர் பயிற்சி முகாம் கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மோட்டூர், வலையார், ராமாக்கால் ஓடை, பாம்பனார் வரட்டாறு, துறுஞ்சலாறு, பாம்பார் முதல் திருக்கோவிலாறு, கெடிலம், வராகநதி, நல்லஊர் ஆகிய தெண்பெண்ணையாறு, வராகநதி ஆறுகளின் துணை ஆற்றுப்படுகை பகுதிகளை சார்ந்த 60 விவசாயிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு அருணோதயம் இயற்கை விவசாய சங்கத் தலைவார் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். அகில இந்திய கிசான் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வேங்கடகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜாசூல் - மாநில ஒருங்கிணைப்பாளர் ஒய். டேவிட் அவர்கள் உலகமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் கிராமப்புற வாழ்வாதாரங்களான நிலம், நீர், விவசாயம், காடு, மற்றும் கால்நடை வளர்ப்பில் ஏற்பட்டுள்ள விரும்பத்தாகாத மாற்றங்கள் மற்றும் விவசாயிகளுக்கான அதனால் ஏற்பட்டுள்ள தீங்குகள் குறித்து உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து இயற்கை வள ஆதாரங்கள் மக்களின் ஆளுகையிலிருந்து அந்நியப்படுத்தப்படும் இன்றைய நிலைகளுக்கான காரணங்கள் அதலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பாசன தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு வரும் விதம் அதற்கு உலக வங்கி கையாண்டு வரும் துறைரீதியிலான சீர்திருத்தங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழக அரசிற்கு இதுவரை 14% வட்டியில் கொடுத்து வரும் நீர்வள ஆதார மேலாண்மைக்கான கடன் திட்டங்கள் அதன் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மூன்றாவது அமர்வாக பொறியாளர் மற்றும் ஒன்றிய கவுண்ஸ்லருமான மேலநட்டூர் பாலசுப்பிரமணி அவர்கள் உலகவங்கி கடனுதவியின் கீழான தமிழ்நாடு நீர்வள நில வள திட்டம் ( IAMWARM – Irrigated Agriculture Modernization and Waterbodies Restoration Project) குறித்தும் அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் அதில் எவ்வாறு விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் தலையீடு செய்வது என்பது எடுத்துரைத்தார். இதனையொட்டிய விவசாயிகளின் நேரடி கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இறுதியாக ஜாசூல் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் அரசுக்கு எவ்வாறு நெருக்குதல் கொடுப்பது அதன் மூலம் கிராமப்புற நீர்வள ஆதாரங்களை செம்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தலித் மனித உரிமைக்கான செயல்பாட்டாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஜாசூல் அமைப்பாளர் மரியநாதன் எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்களை அரசுக்கு வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அயெம்வார்ம் (IAMWARM) திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரும் பணிக்கும் முக்கிய இடம் கொடுக்கப்படவேண்டும்.
(IAMWARM) திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகிய மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் மக்களேடு கலந்து பேசி அவர்கள் எந்த பணி செய்யவேண்டும் என கருதுகிறார்களோ அப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யவேண்டும்.
(IAMWARM) திட்டத்தின் கொடுக்கப்படும் மானியங்கள் முறையாக உரிய மக்களுக்கு போய் சேருவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
இத்திட்டத்தை பற்றி மாநில அளவில் விவசாயிகள் மாநாடு நடத்துவதற்காக 63 துணைவடிநிலப்பகுதி விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற நவம்பரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் பாலு செய்திருந்தார். இறுதியாக வடக்கு மண்டல அமைப்பாளர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment