பெரும் பரபரப்பு, திருப்பங்களுக்கு மத்தியில் நேற்று (மார்ச் 7) நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. ஆனால் மல்லையா மூலம் மத்திய அரசுதான் இந்தப் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், சந்தனத்தால் செய்யப்பட்ட செருப்பு, சாப்பாட்டு தட்டு, குவளை, ரத்த பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு கையெழுத்திட்டு அவர் அனுப்பிய வாழ்த்து தந்தி போன்ற அவரது நினைவு பொருட்கள் ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் வசம் இருந்தது.
அவர் காந்தியின் பொருட்களை நியூயார்க்கில் உள்ள ஆன்டிகோரம் என்ற ஏலமையம் மூலம் இன்று ஏலம்விடப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை விதித்தார்.
ஆனால், அவரது நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததை அடுத்து அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன் மோகன் சிங், இந்த ஏலத்தை ரத்து செய்ய முடிந்தவரை முயற்சிக்குமாறு கலாசார துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடைசி நிமிடத்தில் மனம் மாறிய ஜேம்ஸ் ஓடில் ஏலத்தை ரத்து செய்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஏலத்தில் பங்கேற்க 30 பேர் பெயர் கொடுத்து விட்டனர். சிலர் ஏலத் தொகையையும் தெரிவித்துள்ளனர். எனவே ஏலத்தை ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது.
இதையடுத்து ஏலம் நடந்தது. ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். அவரது சார்பில் டோனி பேடி என்பவர் ஏலத்தில் பங்கேற்றார்.
ரூ. 9.3 கோடிக்கு அவர் காந்தியடிகளின் பொருட்களை ஏலத்தில் எடுத்தார். காந்தியடிகளின் பொருட்களை நாட்டுக்காக மல்லையா ஏலத்தில் எடுத்துள்ளதாக டோனி தெரிவித்தார்.
மத்திய அரசே வாங்கி விட்டது - சோனி
இதற்கிடையே, மல்லையா மூலம் மத்திய அரசே காந்தியடிகளின் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
இதுகுறித்து அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவேதான் விஜய் மல்லையா மூலம் இந்த ஏலத்தில் பங்கேற்று காந்தியடிகளின் பொருட்களை மத்திய அரசு பெற்றுள்ளது.
விஜய் மல்லையாவின் ஏஜென்ட் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.
கலாச்சாரத்துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து காந்தியடிகளின் பொருட்களை பெறுவதில் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்று கூறியுள்ளார் சோனி.
கைக்கு வர 2 வாரமாகும்
ஏலத்தில் மல்லையா காந்தி பொருட்களை எடுத்து விட்டாலும் கூட சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக இன்னும் 2 வாரங்களுக்கு ஆன்டிகோரம் நிறுவனத்திடமே ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் இருக்கும்.
இதற்குக் காரணம், காந்தி பொருட்களை ஏலம் விடக் கூடாது என்று தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமெரிக்க சட்டத்துறைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்து ஏலத்தை நிறுத்துமாறு கோரியிருந்தது.
இதையடுத்து ஏல நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அமெரிக்க சட்டத்துறை, ஏலத்தை நடத்தலாம். ஆனால் அதை வாங்கியவர்களிடம், மறு உத்தரவு வரும் வரை பொருட்களை தரக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.
இந்தியா தற்போது என்ன சொல்கிறதோ அதற்கேற்ப, ஆன்டிகோரம் நிறுவனத்திற்கு அமெரிக்க சட்டத்துறை உத்தரவு பிறப்பிக்கும். அதன் பிறகே மல்லையா கைக்கு ஏலப் பொருட்கள் வந்து சேரும்.
இது யாருக்கு அவமானம்:
நிச்சயமாக இது மகாத்மா காந்திக்கு அவமானம் தான் ஏனெனில் மதுவிலக்கை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் போராடியும், வாழ்ந்தும் வந்த அந்த கோவாணான்டியின் பொருட்களை ஒரு சாராய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி மீட்டுவருவதும் அதற்கு ஏற்பாடு செய்ததே தாங்கள் தான் என தம்பட்டம் அடித்து கொள்ளும் காந்தியத்தை கொன்ற காங்கிரஸ் கட்சியும் என்ற செய்தி உண்மையிலேயே காந்தியை அவமானப்படுத்தும் செயல்தான் அதற்கு பதிலாக வேறு யாரேனும் முகம் தெரியாத அயல்நாட்டுகாரனிடம் இருந்தால் கூட நாளு பேருக்கு பயன்படும் வகையில் வைத்திருப்பான். பிராந்தி வித்த காசு கசக்காது என காங்கிரஸ் முடிவு செய்து மல்லையாவை அனுப்பியதோ என்னவோ.
நன்றி: தட்ஸ் தமிழ்.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment