Tuesday, June 25, 2013
ஜாசூல் - சமூகச்செயல்பாட்டாளர்களுக்கான மத்திய இமயமலை (உத்திரகாண்ட்) கல்விச்சுற்றுலா
ஏன் இந்த உத்திராகாண்ட் கல்விச்சுற்றுலா:
நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு (Joint Action for Sustainable Livelihood – JASuL) – ஜாசூல் அமைப்பு கடந்த 2004லிருந்து கிராமப்புற வாழ்வாதாரங்களின் (நிலம், நீர், விவசாயம், கால்நடைகள், காடுகள்) மீட்டொடுப்பிற்கான பணிகளை வலியுறுத்தி தொண்டு வலைப்பின்னலாக்கி செயல்பட்டு வருகிறது. இதற்கென ஆய்வுப்பணிகள், நேரடிச்செயல்பாடுகள் என கிராம அளவில் இருந்து மாநில அளவில் பல தளங்களில் இயங்கிவருகிறது. அதிலும் குறிப்பாக நீராதாரங்கள் மேலாண்மையில் சமூதாய மேலாண்மை வலியுறுத்தி வருகிறது. தண்ணீர் தனியுடையாக்கப்பட கூடாது என வலியுறித்தி மாநிலம் தழுவிய பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகள் குறித்தான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாழ்வாதாரங்களின் மீதான உலகமயம், தனியார்மயம், தாரளமயத்தின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கென, விவசாயிகள் மற்றும் சமுக செயல்பாட்டாளர்களை அணிதிரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
2003 – 2004களில் நிகழ்ந்த வரலாறு காணாத வறட்சி, அதற்கு பிந்தைய நிஷா பொன்ற புயல்களின் துயரநிகழ்வுகள், பருவம் தவரும் மழைகளினால் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மானாவரி விவசாயம், நிலத்தடி நீர், கிராமங்களை விட்டு நகர்புறங்களுக்கு இடம் பெயரும் தொழில் நுட்ப அறிவுத்திறன் படைத்த சிறு, குறு, மானாவரி விவசாயிகள் என கோர்வையான காலநிலை மாற்ற பிரச்சனைகளை சரியான கோணத்தில் அணுகாத ஆளும் அரசுகளின் போக்குகளை எதிர்கொள்ளும் ஒரு அவசரமான வரலாற்று தேவை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
தமிழக அரசு வளர்ச்சி என்ற பெயரில், உலகம் வெப்பமயமாகிவருவதற்கு காரணமான திட்டங்கள் வெகுவேகமாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தீவிரப்படுத்தி வருகிறது, இப்போக்கினை மாற்றி, வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், மக்கள் பயன்பெறவும், சூழல் பாதுகாக்கப்படவும், நிலைத்த முன்னேற்றத்தை அடைய வேண்டிய கற்றல் உத்தரகண்ட் மாநிலத்தில் கிடைக்கும் என்பதாலே இப்பயண ஏற்பாடு செய்யப்பட்டது. இது தவிர, இமயமலைத் தொடரின் பெரும் பகுதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவின் ஜீவா நதிகளான கங்கை, யமுனா போன்றவற்றின் உற்பத்தித்தளம் இதுவேயாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தெற்காசியாவின் நீர்த்தொட்டியாக விளங்கும் இமயமலையினை புரிந்து கொள்வது எதிர்கால ஜாசூல் செயல்பாடுகளுக்கு உகந்தாகும்.
சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:
உத்திராகாண்ட் மாநில வாழ்வாதார சூழல் மற்றும் அதனை சார்ந்து வாழும் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்வது
காலநிலை மாற்றத்தினால் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதிலும் குறிப்பாக இமயமலையின் இயற்கை சூழலில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை அறிந்து கொள்வது
வாழ்வாதாரங்கள், காலநிலை மாற்ற காரணிகளை எதிர்கொள்ள உத்திரகாண்ட மாநில சமூகசெயல்பாட்டு குழுக்களின் பங்களிப்பு
உத்தராகண்ட் மாநிலம் அல்லது இமயமலை வட்டாரம்:
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. வடக்கில் சீனாவும், கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்திரப்பிரதேசமும், மேற்கில் பஞ்சாபையும் எல்லைகளாக கொண்டு இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
உத்திராகாண்ட் மாநிலத்தை மூன்று பகுதிகாளாக பிரிக்கலாம். முதல் பகுதி 3000 – 5000 மீட்டர் உயரம் உடைய மேல் இமயமலை பகுதி (Uppar Himalayan Range). இப்பகுதி பனிச்சிகரங்கள், பாறைகள் நிறைந்த பகுதி. இப்பகுதியில் அல்பினோ வகையை சார்ந்த சிறு மரங்கள் அதிகமாக காணப்படும். மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ற பகுதி அல்ல இது. ஆனால் இங்கிருந்துதான் இந்தியாவின் ஜீவநதிகளான கங்கை, யமுனா போன்றவை உற்பத்தியாகின்றன. இதனையடுத்த பகுதி மத்திய இமயமலை பகுதி ( Central Himalayan Range). இப்பகுதி 2500 – 3000 அடிவரையிலான பகுதி ஆகும். இது அடர்த்தியான வனப்பகுதி ஆகும். 1500 லிருந்து 2500 அடிவரையிலான உயரம் உள்ள பகுதியில் அகன்ற இலை உள்ள வனப்பகுதியாக உள்ளது. 75% அளவிலான உத்திராகாண்ட் இப்பகுதியில் தான் வாழ்கின்றனர். அதனால் தான் சுற்றுப்பகுயனமும் மத்திய இமயமலை பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. மத்திய இமயமலைப்பகுதி கர்வால் பகுதி, குமாவுன் பகுதி என இரண்டு பகுதியாய் உள்ளது. 1500 அடிக்கு குறைவான உயரம் உடைய பகுதிகள் உள்ளூர் மொழியில் தராய் வட்டாரம் என அழைக்கப்படுகிறது. இது இமயமலையின் அடிவாரப்பகுதி ஆகும்.
1948ல் உத்தரகண்ட் தனி மாநில கோரிக்கை எழுத்தது. அப்பொது அது பல தலைவர்களால் மறுக்கப்பட்டு, 1956ம் மாநில மறு சீரமைப்பு கமிஷன் முன் மறுபடியும் கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இறுதியில் உத்திரகாண்ட் மாநில சமுகசெயல்பாட்டு குழுக்கள், காந்திய அமைப்புகள், மக்கள் அமைப்புகள் மற்றும் மாநில கட்சிகளின் இணைந்த தொடர் போரட்டங்களின் விளைவாக தனிமாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், உத்திரப்பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட இம்மாநிலம் உள்ளூர் மக்கள் மற்றும் சமுக அமைப்புகளின் பெரும் போராட்டத்திற்கு பின்னர் உத்தர்காண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. டெகராடூன் உத்திராகாண்ட் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமய திருத் தலங்களான ரிஷிகேஷ், அரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவையும் உத்தராகாண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
உத்திராகாண்ட் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், அரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும். இந்தி, கர்வாலி, குமாவோனி இங்கு அதிகமாக பேசப்படும் மொழிகளாகும்.
இம்மாநிலம் ரம்ம்மியமான மலைத்தொடர்களையும், பனிச்சிகரங்களையும், பெரும் வற்றாத ஜீவநதிகலையும், ஆயிரக்கணக்கான சிற்றோடைகளையும் கொண்ட ஒரு பசுமையான மலை மாநிலம். இம்மாநிலம் பேச்சுவழக்கில் தேவபூமி என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.
பயணக்குழுவினரை திரு. டேவிட் அவர்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். சரியாக 9.45மணிக்கு பயணம் டேராடூன் எக்ஸ்பிரஸ் வண்டியில் துவங்கியது. இரண்டு நாள் இரயில் வண்டி பயணம் 22ம் தேதி இரவு 11.30 மணிக்கு டில்லியை அடைந்தது. டில்லிக்கும் அரித்துவாருக்கும் இடையே சுமார் 230 கி.மீ. தூரம். அதிகாலை நேரம் துள்ளிப் பாய்ந்து வரும் கங்கை நதி, அரித்துவாரை நெருங்கி விட்டதை தெரிவித்தது. மூன்றறை மணி நேர தாமதத்திற்கு பின் 23ம் தேதி காலை 6.30 மணிக்கு அரித்துவார் புகைவண்டி நிலையத்தில் நிறைவு பெற்றது.
முதல் நாள், நவம்பர் 25, 2009:
அரித்துவார் புகைவண்டி நிலையம்:
திரு. முகேஷ் பகுகுணா, தேசிய ஒருங்கிணைப்பாளர் - குடிமக்கள் உலக அரங்கு - இந்திய பிரிவு அவர்கள் எல்லோரையும் உத்திரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தந்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். முகேஷ் அவர்கள் ஒட்டுமொத்த சுற்றுப்பயணத்திற்கும் உள்ளூர் வழிகாட்டியாக செயல்படும்படி ஏற்கெனவே மாநில ஒருங்கினைப்பாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார். அரித்துவார் புகைவண்டி நிலையத்தில் எல்லோரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளவும் காலை கடன்களை முடித்துக்கொள்ளவும் பணிக்கப்பட்டனர்.
38 பேர் அமரும் வகையிலான சுற்றுலாவிற்கான மினிப்பேரூந்து முகேஷ் அவர்களால் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தவகையான பேருந்துகளே உத்திரகாண்ட் மாநிலத்தில் பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது. அரசு பேரூந்துகளை விட தனியார் பேருந்து முதலாளிகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த தனியார் பேருந்துகளும் ஒரே கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. நீண்ட தூரம் பஸ்கள் மட்டுமோ அரசினால் இயக்கப்படுகிறது. உத்திரகாண்ட் மாநிலத்திற்குள் பெருவாரியாக தனியார் முதலாளிகள் கூட்டமைப்பு பேருந்துகளே அதிகமாய் இயக்கப்படுகிறது.
ஏற்கெனவே கல்விச்சுற்றுலா கீழ்கண்ட வகைகளாக பகுக்கப்பட்டிருந்தது. ஆன்மீகத்தளங்கள், சுற்றூலா தளங்கள், இயற்கை அமைப்பு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வரலாற்று சிறப்புக்களை உள்ளடக்கிய இடங்கள், பெருந்திட்டங்கள் செயல்படும் இடங்கள், சமூக செயல்பாட்டு குழுக்களின் பணித்தளங்கள், சிறப்பு சொற்பொழிவுகள் என பகுக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் ஆன்மிக தளமான அரித்துவாரின் சண்டிகோவிலை நோக்கி பயணம் எல்லோரும் சரியாக 8.30 பேருந்தில் ஏறிக்கொள்ள துவங்கியது.
அரித்துவார்:
சிவாலிக் மலைத்தொடரின் மலைஅடிவாரத்தில், கங்கை நதியின் வலது புறமாக அமைந்துள்ள அரித்துவார் நகராம், அரித்துவார் மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதத் தலமாகும். உத்திரகாண்ட் மாநிலத்தின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. அரித்துவார் என்றால், இறைவனை அடைவதற்கான வாயில் என்று பொருள்படும். தேவர்கள் தங்கள் கால் தடங்களை இங்கு விட்டுச் சென்றிருப்பதாக நம்பப்படுவதால், இந்துக்களின் ஏழு மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நகரம், கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் ஆகிய பிற இந்து புனிதத் தலங்களுக்கு நுழைவாயிலாகவும் திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் கும்பமேளா விழாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இமயமலைப்பகுதியில் கங்கை உற்பத்தியாகும் இடமான கோமுகியில் இருந்து கிட்டத்தட்ட 253 கிலோ மீட்டர் பயணம் செய்து அரித்துவார் நகரில் கங்கை நதியாக பரிணமிக்கிறது. இங்கிருந்து தான் கங்கை சமவெளிப்பகுதியில் தன்பயணத்தை தொடங்குகிறது. அதனால் அரித்துவார் நகர் முன்பு கங்காத்துவரா என அழைக்கப்பட்டுள்ளது.
சண்டிகோவில்:
அரித்துவார் நகரில் கர்கிபூரி, சப்தரிஷி ஆஸ்ரமம், மன்சாதேவி கோவில், மாயாதேவி கோவில், தக்க்ஷா மகாதேவ் கோவில் மற்றும் சண்டிதேவி கோவில் போன்ற புனித தளங்கள் உள்ளன. மாலைக்குள் ரிஷிகேஷ் நகரை அடையவேண்டும் என்ற அடிப்படையில், ரிஷிகேஷி செல்லும் வழியில் உள்ள சண்டிகோவிலை பார்த்து செல்வது என முடிவு செய்து, கங்கை நதியை கடந்து சண்டிகோவிலை அடைந்தோம். சண்டிகோவில் முன்பிருந்த தெருவோர கடையில் காலை உணவை முடித்துக்கொள்ளும்படி முகேஷ் அறிவுறுத்தியதன் அடிப்படையில் சண்டிகோவில் பிளாட்பார்ம் கடையில் பசுமதி அரிசியில் செய்யப்பட்ட சாதம் மற்றும் கேரட், வாழப்பழம் என காலை உணவை முடித்துகொண்டனர்.
சண்டிதேவி கோவில் 1929ம் ஆன்டு காஷ்மீர் அரசர் சச்சத்சிங்கினால் நீல் பார்வத் என்ற மலைக்குன்றின் மீது கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.
சண்டிதேவி ஆலயத்தை பற்றிய புராணக்கதை அல்லது பொதுமக்கள் மத்தியில் உலாவரும் வரும் கதை என்னவென்றால், புராணகாலத்தில் சம்புவா மற்றும் நிஷம்புவா என்னும் டிமோன் அரசர்கள் தேவலோகத்தின் மீது படையெடுத்து இந்திரனை வெற்றி கொண்டு தேவலோகத்தை கைப்பற்றியதாகவும், அங்கிருந்த தேவலோகவாசிகள், ரிஷிகளை சொர்க்கத்தை விட்டு விரட்டிகொடுமை செய்ததாகவும், கொடுமை பொருக்காத தேவலோக வாசிகள் பார்வதியிடம் முறையிட பார்வதி சண்டிதேவி வடிவமெடுத்து அரக்காரசர்களை அழித்து தேவலோகத்தை மீட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சண்டிதேவி இந்த நீலபார்வத மலை உச்சியில் அமர்ந்த ஓய்டெடுத்ததாகவும் நம்பப்படுகிறது. இக்கோவிலில் உள்ள சண்டிதேவி சிலை 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியரால் நிறுவப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து தங்களை தங்களுடைய வேண்டுதல்களை கூறி ஆசிபெற்று செல்கின்றனர்.
இக்கோவில் அரித்துவார் நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு இரண்டு வழிகளில் செல்லலாம். ஒன்று 3கிலோமீட்டர் மலைப்பாதை வழியாக நடந்தே செல்வது அடுத்த வழி ரூ. 45 செலுத்தி கேபிள் கார் வழியாக செல்வதாகும். கல்விச்சுற்றுலா குழுவினர் போகும்போது மலைப்பாதை வழியாகவும் வரும் போது ரோப் கார்மூலமும் வந்தனர். மலை உச்சியில் உள்ள கோவிலில் இருந்து பார்க்கும்போது ராஜாஜி தேசிய பூங்கா மற்றும் கங்கை நதிப்படுகையையும் ஒருசேர பார்க்கமுடிந்தது. சண்டி கோவில் அருகே அனுமனின் தாயாரான அஞ்சனையின் கோவில் உள்ளது. மலை மீதிருந்து, அரித்துவார் நகரைக் காணும் போது மனம் சிலிர்க்கிறது. ஒரு இடத்தில் கங்கையின் அகலம் சுமார் 1.9 கி.மீ. இயற்கையின் படைப்பை மிஞ்சியதோர் அற்புதம் இல்லை என்பதை பாய்ந்து வரும் கங்கை பறைசாற்றுகிறது
ராஜாஜி தேசிய பூங்கா:
ராஜாஜி (1964), மொட்டிச்சூர் (1948), சீலா (1977) ஆகிய மூன்று சிறிய சரணாலயங்களை ஒன்றாக இணைத்து 1983ம் ஆண்டு ராஜாஜி தேசிய பூங்காவாக முதுபெரும் தலைவரும் , சுதந்திரபோராட்ட தியாகியும், சுதந்திர இந்தியாவின் முதலும் கடைசியுமான கவர்னர் ஜெனராலான் ராஜாஜியின் பெயரில் உருவாக்கப்பட்டது.
இப்பூங்கா டேராடூன், அரித்துவார், பூரியா கர்வால் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 820.42 கிலோமீட்டர் சுற்றளவுடையது.
10 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய சிவாலிக் மலைத்தொடரின் இயற்கை அமைப்பை தனனகத்தே கொண்டுள்ள இப்பூங்காவில் 23வகையான உயிரினங்களும், 315வகையான தாவரங்களும் உள்ளன. தேசிய பூங்காவின் ஊடாக கங்கை நதி 24 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
ராஜாஜி தேசிய பூங்காவின் ஊடானான ரிஷிகேஸ்யை நோக்கிய நீண்ட நெடிய பயணம் சரியாக 11.30 மணிக்கு துவங்கியது. கங்கை நதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு மிகப்பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றான பீம்கோடா (Bhimgoda Dam)அணைக்கட்டை தூரத்திலிருந்து பார்வையிட்டு குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டதனுடன் பயணம் தொடர்ந்தது. இவ்வணைக்கட்டு 1840ம் ஆண்டு கட்டப்பட்டது. பயணத்தின் பெருவாரியான தூரம் பீம்கோடா அணைக்கட்டில் இருந்து பிரியும் மேல் கங்கை வாய்க்கால் (Uppar Ganges Canal) கரையை ஒட்டியே சென்று மலையேரத்தொடங்கியது. இடை இடையே யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் பயணத்தின் ஊடாக காணமுடிந்தது. இடையே கங்கை நதியின் குறுக்கே மின்னுற்பத்தி என கட்டுப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலையங்களை காண முடிந்தது. இறங்கி பார்க்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கு தேவையான அனுமதி மற்றும் நேரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. மாலை 2.45 மணிக்கு ரிஷிகேஸ் நகரத்தை அடைந்து மதிய உணவினை முடித்துக்கொண்டோம்.
ரிஷிகேஷ்:
புனித நதியான கங்கை ரிஷிகேஷின் வழியாகப் பாய்கிறது. உண்மையில், இங்கிருந்துதான் இமயத்தில் உள்ள சிவாலிக் மலைத்தொடருக்கு இந்த நதி செல்கிறது என்பதுடன் வட இந்திய சமவெளிகளுக்கும் பாய்ந்தோடுகிறது. பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன. சிலநேரங்களில் "யோகாவின் உலகத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்ற நிறைய யோகா மையங்களைக் கொண்டிருக்கிறது. ரிஷிகேஷில் அதன் வழியாக ஓடும் புனித ஆற்றின் முனையில் உட்கார்ந்து தியானம் செய்வது மோட்சத்தை அடைவதற்கான வழிகளுள் ஒன்று நம்பப்படுகிறது. இந்நகரம் அரித்துவாரில் இருந்து வடக்கு திசையில் 28கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 532 மீட்டர்களாகும் (1,745 அடிகள்).
புராணகதைகளின் படி, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான 'கேதர்கண்ட்' (இப்போது கர்வால்) இன் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. லங்காவின் அரசனான இராவணனைக் கொன்றதற்காக ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்துகொண்டதாக புராணங்களில் குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார், இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய லக்ஷ்மன் ஜீலா பாலம் உள்ளது. இந்த கயிற்றுப் பாலம் 1889 இல் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தனவானால் பொருளுதவி கொண்டு ஆங்கிலேயே அரசால் கட்டப்பட்டது ஆகும். 1924 இல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பிறகு, இந்து வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளை செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தில் கடந்துசெல்லாம். இன்றுமுகூட, இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்சுமணா கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் ராமனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது; இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' இல் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கு ஒரு கோயில் இருக்கிறது.
ஆன்மிகக் கடலில் மூழ்கி திளைக்கும் சிலருக்கு கரையருகே முத்து கிடைகிறது. சிலருக்கு ஆழ்கடலில் கிடைக்கிறது. அது கிடைக்கும் வரை தேடல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த தேடலுடையவர்களின் முக்கிய இடம் ரிஷிகேஷ். ரிஷிகேஷ் மற்றும் அரித்துவார் இரண்டிலும், ராமயணம் அல்லது மகாபாரதத்தை சம்பத்தப் படுத்தியே கோவில்கள் உள்ளன.
காலதாமதமான மதிய உணவு, குழுவினரில் சிலரை காணாமல் தேடல் என ரிஷிகேசை சுற்றிப்பார்க்கும் படலம் மாலை 5மணிக்கு மேல் துவங்கியது. பஸ் மூலம் கங்கை ஆற்றின் கரை வரை சென்று இறங்கினோம். பங்கேற்பாலர் சரியாக 7மணிக்கு வண்டிக்கு வந்துவிடவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் லக்ஷ்மண் ஜீலா எனப்படும் தொங்கு பாலம் பகுதிக்கு சென்றனர். இந்த பாலத்தைப் பயன்படுத்தி தான் அக்காலத்தில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் சென்றனர் பக்தர்கள். பாலத்தை ரசித்துக் கொண்டே போட் மூலம் கங்கையை கடந்தோம். . அருகருகே இருக்கும் சிற்சிறு கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு, "பாபா காளி கம்ப்ளிவாலா" சமாதிக்கு சென்றோம். இவர் தனது 12வது வயதில் ரிஷிகேஷ் வந்து சுமார் 20 வருடங்கள் ஒரே இடத்தில் தவம் புரிந்தார். இதைக் கேள்விப்பட்ட கார்வால் மகாராஜா அவருக்கு, குளிர் தாக்காத வண்ணம் ஒரு கருப்பு கம்பளி கொடுத்தார். அதனால் தான் அவரை "பாபா காளி கம்ப்ளிவாலா" என்று அழைத்தனர். இந்த பாபாவின் பெயரால் பத்ரிநாத், கேதாரிநாத், ரிஷிகேஷ் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஆஸ்ரமங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அதன் பின்னர் அருகே இருக்கும் மிகப்பழமையான ராமேஷ்வர் மகாதேவ் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்து, கீதா பவன் எனப்படும் ஆஸ்ரம் சென்றோம். அமைதியான சூழலில் அந்த மடம் இருக்கிறது. கீதோபதேசங்கள் எங்கும் பொறிக்கப்பட்டுள்ளன.பின்னர் அங்கிருந்து பரமார்த்த நிகேதன் என்னும் மடம் சென்றோம். அமைதியைத் தவிர வேறொன்றும் அங்கு கிட்டாது. அரிதாக தென்னிந்திய பாணியில் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. மறுபடியும் லக்ஷ்மண் ஜீலாவை நோக்கி படகு பயணம் தொடர்கிறது. பயணக்குழுவினரில் சிலர் தாமதமாக வர முன்பே வந்த ஒரு சிலர் அருகிலுள்ள சுவாமி சிவானந்தர் ஆலயத்திற்கு சென்றுவந்தனர். தமிழ்நாட்டிலிருந்து ரிஷிகேஷ் சென்று தவமியற்றி, மடங்களை நிறுவி, தர்மத்தை போதித்தவர்.
பின்னர் பயண குழு வினர் அரை மணிநேர தாமதத்திற்கு பின்னர் ஒன்று கூடி, 8 மணி அளவில் ஜெய்ராம் கைலாஸ் ஆஸ்ரம் திரும்பினர். கங்கையின் மேற்குகரையில் உள்ள இவ்வாசிரமத்தில் தான் இரவு தங்கல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு பெரும்பாலும் தங்கும் வசதிகளுடன் கூடிய ஆஸ்ரமங்கள் விடுதிகளை விட தரமான வசதிகளை குறைந்த செலவில் கொடுக்கக்கூடியவையாக உள்ளன. சீசன் நேரங்களில் வாடகையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இரவு உணவு முடித்து படிக்கைக்கு செல்ல கிட்டத்தட்ட இரவு 11மணி ஆகிவிட்டது. முதல்நாள் பயணம் குறித்தான அனுபவ பகிர்வு 10.30 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவு பெற்றது.
இரண்டாம் நாள், நவம்பர் 26, 2009:
முந்தையநாள் திட்டப்படி அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து திரிவேணி காட்டில் அதிகாலைப் பொழுதில் நிகழ்த்தப்படும் கங்கா ஆரத்தி பார்க்க குறைந்த நபர்களேயே செல்லமுடிந்தது. முதல்நாள் பயண களைப்பு எல்லோரையும் வாட்டியெடுத்து விட்டது. காலை உணவு அருந்துவதற்கு நேரம் இன்மை காரணமாக தேனீர் அருந்தி சமாளித்து கொள்ளும்படி கோரப்பட்டனர். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பெருவாரியான கடைகள் காலைநேரத்தில் திறக்கப்படாமல் இருந்ததும் ஒரு காரணம். டெகிரி அணையை நோக்கிய இரண்டாம் நாள் சிறிது காலதாமத்துடன் 7.30 மணிக்கு துவங்கியது.
நரேந்திராநகர்:
நரேந்திராநகர் ஒரு கோடைவாசஸ்தலம். இது ரிஷிகேஷில் இருந்து 15கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மன்னர் ஆட்சிக்காலத்தில் டெகிரி பகுதியின் தலைநகராக விளங்கியது. அப்பொழுது மன்னர் நரேந்திரஜா பெயரில் நரேந்திராநகர் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து இமயமலையின் விரிந்தபரப்பினை காண்பது ரம்மியமான விசயம். தற்பொழுது பழைய அரண்மனை முக்கிய பிரமுகர்கள் தங்க ஓய்வெடுக்கக்கூடிய விருந்தினர் விடுதியாக செயல்படுகிறது. சுற்றுப்பயண குழுவினரில் பலர் அரண்மனை முன்பிருந்த பீரங்கியின் முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.
சம்பா:
சம்பா டேராடூன் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம். இது ரிஷிகேஷ் நகரில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்துதான் உத்தர்காசி வழியாக கங்கோத்திரி செல்லும்பாதை, குமாவுன் மண்டலத்திற்கு செல்லும் டெகிரி கர்வால் பாதை பிரிகிறது. சம்பாவிற்கு முன்பு உள்ள கிராமத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு மதியம் 1.30 மணியை போல டெகிரி அணைக்கட்டை பார்வையிட கிளம்பினோம். சம்பா டவுனை தாண்டியவுடன் அகரகால் பகுதியில் இமயமலையின் பண்டர்போச் பனிச்சிகரத்தை (Himalayan Peak Bandarpoochh) முதன்முதலாய் கண்டோம்.
இன்று அதிகாலையில் இருந்து பார்த்த வந்த முக்கியமான காட்சி ஆற்றங்கரை விவசாயம். பனியாற்றின் இருபுறமும் உள்ள இடங்களில் உள்ளூர் மக்கள் பாசுமதி நெல் விவசாயம் நடைபெறுகிறது. நாங்கள் சென்ற இந்த நவம்பர் மாதம் அறுவடை முடிந்த மாதம் என்பதால் பெரும்பாலான வயல்களில் மாட்டுச்சாணங்களை கொட்டி வைத்திருந்தனர். இயற்கை உரத்தின் பயன்பாடு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதேபோன்று வைக்கோல் போர்கள் கால்நடைகளுக்காக மரங்களில் முடிகட்டி வைக்கப்பட்டிருந்தன. நம்மூரை போல தரையில் வைக்கோல் போர் படப்பை வைக்கமுடியாது என்பதால் மரங்களில் முடிகட்டி வைக்கின்றனர்.
போகும்வழியில் முகேஷ் அவர்களின் பிறந்த ஊர் மலை உச்சியில் எதிர்ப்பட இயற்கை உபாதைகளை கழிக்க பயண இடைவேளை விடப்பட்டது. எல்லோரும் முகேஷின் சொந்த ஊரான பால்டியை பின்னனியாக கொண்டு குழுப்படம் எடுத்து கொண்டனர்.
டெகிரி அணைக்கட்டு:
தற்போதைய டெகிரி கர்வால் மண்டலத்தின் தலைநகரம். பழைய தலைநகரம் நரேந்திரா நகர். டெகரி நகரம் பழைய டெகிரி மற்றும் புது டெகிரி என இரண்டு பகுதிகளாக உள்ளது. டெகரி அணை கட்டப்பட்ட பின் உருவான நகரம் புது டெகிரி ஆகும். இங்கு அரசு கட்டடங்கள், அரசு ஊழியர் குடியிறுப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
டெகரி அணை கட்டப்பட்ட விதம், அதற்கு உள்ளூர் மக்கள் எழுந்த எதிர்ப்புகள், குறித்த விளக்கங்களை பெற முதுபெரும் காந்திய சமூக செயல்பாட்டாளரான திரு.சுந்தர்லால் பகுகுணாவை சந்திக்க அவருடைய இல்லத்திற்கு சென்றோம். அவர் அங்கு இல்லாத காரணத்தால் அப்போரட்ட வரலாறு, உள்ளூர் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட விதம் குறித்து முகேஷ் பக்குணா விளக்கினார். சுற்றூப்பயண குழுவினரும் தொடர்ச்சியாய் நடந்துவரும் கட்டுமானங்களை நேரடியாக கண்டனர். அணைக்குள் மூழ்கிய நிலையில் உள்ள கிராமங்கள், கோவில்கள் என பழங்கதையாகிப்போன கிராமமக்களின் இருப்பு இல்லாமல் எங்கும் தண்ணீராய் பார்த்தபோது அதிர்ச்சியே மேலிட்டது. பல ஆயிரம் அடி உயரம் தண்ணீர் நிரம்பி, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, ஆற்றங்கரை விவசாய நிலங்களை இழந்து இன்று வெளியேற்றப்பட்ட சமவெளிப்பகுதிகளான டேராடூனில் உள்ள கிராமப்புறங்களில் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக உள்ளதாய் முகேஷ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து டெகிரி அணையில் நீர் மின்சாரம் எடுக்கப்படும் இடத்தை காண கிளம்பினோம். பகிரதி, பிண்டா நதிகள் இணையும் இடத்தில் இரண்டுமலைகளை இணைத்து இவ்வணையை கட்டியுள்ளனர். பார்க்கும்பொழுது ராட்சச அணையாக உள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மலையை குடைந்து மூன்று பெரிய டணல்களை அமைத்துள்ளனர். இதன்வழியே டர்பைன்கள் சுழன்று மின்சார உற்பத்தியில் ஈடுபடுகின்றன. பேருங்தில் இருந்து இறங்கி அணையில் இருந்து நீர் வெளியேரும் பகுதியை பார்த்தோம். மலை இடுக்கில் இவ்வளவு தண்ணீரை தேக்கி வைப்பது எந்தவகையில் ஞாயம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. இயற்கையை வென்று விட நினைக்கும் மனிதனின் எதேச்சதிகார குணத்தை டெகிரி நீர்மின்திட்டத்தின் மூலம் காணமுடிந்தது. இதற்கு இயற்கை என்ன எதிர்விளைவை தரப்போகிறதோ என்ற திகிலூட்டும் எண்ணமும் அவ்வப்போது வந்து சென்றது. டெகிரி டோமை சுற்றிக்கொண்டு புத்தகொடாரை நோக்கி பயணம் மாலை 3.30 மணிக்கு மேல் துவங்கியது.
போகும்வழியெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தண்ணீரில் முழ்கிப்போன கிராமங்கள் தலையை நீட்டிக்கொண்டிருந்தன. வளர்ச்சி என்ற பெயரில் கிராமங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட சோக வரலாற்றை எண்ணி யாருக்காக இந்த வளர்ச்சி என்ற கேள்வி அடிமனதில் எழும்பிக்கொண்டே வந்தது.
மாலை 6மணி அளவில் முகேஷ் அவர்களின் மனைவியின் சொந்த ஊரை அடைந்தோம். தண்ணீரில் முழ்கிய தங்களிடைய வீட்டிற்கு சிறிது தொலைவில் புதிதாய் வீடிகட்டியிருந்தனர். பழைய வீட்டியிலிருந்து பெயர்த்து வரப்பட்டிருந்த ஜன்னல், கதவு, செங்கல் போன்றவை மவுனசாட்சியாய் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. காணப்பயறு, துவரை, கோதுமை போன்றவை பயிர் செய்யும் குடும்பம் இவர்களுடையது. கடுமையான உழைப்பாளிகள்.
இனிசெல்லவேண்டிய பாதை ஒருவண்டி மட்டுமே செல்லக்கூடிய குறுகலான பாதை என்பதால் பயணத்தை வேகப்படுத்தினோம். மாலை 7.00 மணிக்கு புத்தகெடாரை அடைந்தோம். இங்கிருந்து தான் பிரதான பாதை கேதார்நாத்திற்கு செல்கிறது. பிரதான பாதையில் இருந்து பிரிந்து ஒற்றை வண்டி பாதையில் பிகாரிலால் அவர்களின் ஆசாரமத்தை நோக்கி கிளம்பினோம். கடுமையான குளிர் ஆட்டத்துவங்கியது. கும்மிருட்டு வேறு. சுத்தமாய் மின்சாரம் கிடையாது. ஏனெனில் தற்போதைய பயணம் உத்திரகாண்ட் மாநிலத்தின் கிராமப்பகுதி என்பதால் மேற்சொன்ன கடினமான விடயங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அடுத்த 45 நிமிட பயணத்தில் பால்கங்கா சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ள பிகாரிலால் அவர்களின் ஆசரமத்தை அடைந்தோம். எல்லோரும் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்பொருட்டு அவரும் அவருடைய குழுவினரும் வெளியில் சென்று திரும்ப சிறிது காலதாமதமாகியிருந்தது. நாங்களும் பாதையை தவறவிட்டிருந்தோம். குறுகலான பாதை. எதிர்புறம் வந்த டாட்டா சுமோவிற்கு வழிவிட முடியாத சூழல். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரியான பாதையில் டிரைவரின் சாமர்த்தியமான பணியால் எந்தவிதமான அசம்பாவிதமுமின்றி ஆசரமத்தை அடைந்தோம்.
பிகாரிலால் ஆசிரமம் ( லோக் ஜீவன் விகாஸ் பாரத் பரிசத்):
பிகாரிலால் எல்லோரை வரவேற்று அங்குள்ள சவுகரிய குறைச்சல்களுக்கு பொருத்தருளும்படி கேட்டுக்கொண்டார். ஏனெனில் இந்த ஆசரமம் ஒரு சுயசார்பான மையம். ஆசரமத்திற்கு தேவையான தண்ணீர், மின்சாரம், உணவு பொருட்கள் போன்றவை இங்குள்ள தொழில்நுட்பங்களை கொண்டு, இங்குள்ளவர்களாலேயே உற்பத்தி செய்யப்படுவதாக கூறினார். ஆதாலல் தேவைப்படும்போது மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துவோம் தேவையற்ற நேரங்களில் அவையெல்லாம் செயலிழக்கசெய்யப்பட்டிருக்கும் என்றார். அவற்றை மறுபடியும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட காலதாமத்திற்காக மன்னிப்பு கோறூவதாய் கூறினார். பங்கேற்பாளர்களும் இதுபோன்ற உன்னதமான மக்கள் முயற்சியுடன் சுயசார்பை மையத்தில் தங்கியமைக்காக பெருமைப்படுவதாக கூறினர். எல்லோரும் இரவு உணவுக்கு முந்தைய தேனீர் கொடுத்து உபசரித்தன.
அதனை தொடர்ந்து லோக் ஜீவன் விகாஸ் பாரத் பரிசத் சார்பில் அருகிலுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்படும் கிராமப்புற சமுக மேம்பாட்டு பணிகளை பற்றி விளக்கினார். பெண் கல்வி, குழந்தைகள் திருமண தடுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பொருளாதார மேம்பாடு பணிகளில் தாங்கள் ஈடுபடும் விதம் பற்றி விளக்கினார். அதனை தொடர்ந்து பங்கேற்பாளார்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இரவு உணவுக்கு பின் இரவு 11மணிக்கு எல்லோரும் தூங்கசென்றனர்.
மூன்றாம் நாள், நவம்பர் 27, 2009:
அப்பகுதி மக்களால் மந்திரிஜீ என பாசத்துடன் அழைக்கப்படும் பிகாரிலால் அவர்களின் முயற்சியின் கீழ் இச்சிறுபுனல்மின்சாரதிட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலகங்கா ஆற்றில் கலக்கும் ஒரு சிறு நீரோடை வெகுவேகமாக நீர் செல்லும் வகையில் வாய்க்கால்களை வடிவமைத்து அதன் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் எடுக்கும் வகையிலான சிறு நீர்மின்சார திட்டம் செயல்படுகிறது. அதனை கொண்டு பிகாரிலால் ஆசரமம் மற்றும் அதன் அருகில் உள்ள 3கிராமங்கள் பயன்பெற்று வருவது முதல் நாள் இரவு விளக்கினார். உடனே பயண குழுவின் சார்பில் அவ்விடத்தை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாலை 6.30 மணிக்கு 15க்கும் மேற்பட்ட நபர்கள் ஆற்றை கடக்க முற்பட்டு குளிர்ச்சி தாங்கமுடியாமல் சிவப்பிரகாசம், முத்துச்சாமி, வேணு, முருகேசன், பாலாஜி, முகேஷ், மாரிராஜன் மற்றும் நீர்மின்திட்ட பணியாளர் அடங்கிய 8 பேர் கொண்ட குழு மட்டுமே ஆற்றைக்கடந்து அக்கரைக்கு சென்று பார்வையிட முடிந்தது. ஆற்றை கடப்பதற்கென உருவாக்கப்பட்டிருந்த மரப்பாலம் கடந்த வாரம் வந்த திடீர் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது. மழை காலம் இல்லையென்றாலும் கூட அவ்வப்போது காலநிலை மாற்றத்தின் விளைவாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக கூறினர்.
ஒட்டுமொத்தமாக ரூ. 300000 லட்சம் செலவில் சொந்தமாக மின்சாரம் தயார்செய்யும் வித்தையை செயல்படுத்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஆனால் பல லட்சம் கோடிகளை செலவு செய்து டெகரி திட்டத்தில் தயார் செய்யப்படும் மின்சாரம் உத்தரகாண்ட் கிராமங்களை மின்மயமாக்கும் முயற்சியை பின்தள்ளி எங்கோ உள்ள உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, சண்டிகர் தொழிற்பேட்டைகளுக்கு மின்சார விற்பனை மூலம் மாநில நிதிநிலைமையை பெருக்குதல் என்ற பெயரில் உள்ளூர் வளங்களை சுரண்டி உள்ளூர் மக்களை ஓட்டாண்டியாக்கிக்கொண்டுள்ளது.
சிறு மின்திட்டத்தை பார்வையிட சென்றதில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பின் காலை உணவு முடித்து பிகரிலால் அவர்களின் ஆசரமத்தில் இயற்கை வழிபாட்டு முறையில் இமயமலையை தெய்வமாக வணங்கு தின வழிபாட்டில் கலந்து கொண்ட பயணக்குழு அவருடன் குழு போட்டோ எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி சரியாக 10.30 மணிக்கு புறப்பட்டது. இன்றைய பயணப்படி டெகிரி கர்வால் மண்டலத்தில் இருந்து குமாவுன் மண்டலத்தில் உள்ள கவுசாணியை சென்றடைவதாகும்.
முகேஷ் அவர்களால் ஒட்டுமொத்தமாக 8 மணிநேர பயணத்தில் கவுசாணியை அடையளாம் என விளக்கம் கொடுக்கப்பட்ட பயணம் மதியம் 2.45 மணிக்கு ரெனிக்காட்டில் மதிய உணவுக்காக நிறுத்தப்பட்டது. பயணம் முழுவதுமே பில்கொண்டா நதியை பின்பற்றியே சென்றுகொண்டிருந்தது. நெடிதுயர்ந்த இரண்டு மலைகளை கடந்தாபின்புதான் ரேனிகேட்டை அடைய முடிந்தது. இடை இடையே காணக்கிடைக்காத இமயமலையின் பனிச்சிகரங்களை கிடைக்கும்போதெல்லாம் சுற்றுப்பயண குழுவினர் வண்டியை நிறுத்தி புகைப்படங்களாய் எடுத்து தள்ளிவிட்டனர். அத்துடன் இன்றைக்கு நீண்ட உயரம் உடைய, அடர்ந்த மலைப்பகுதிகளை கடந்தமையால் மத்திய இமயமலையின் முக்கிய குணாம்சமான நெடிதுயர்ந்த மலைப்பிரதேசங்களையும், அதன் இடுக்களில் விவசாய நிலங்களையும் காணமுடிந்தது.
பின்னர் 3.30 ரேனிகேட்டில் இருந்து துவங்கிய பயணம் 2மணிநேரம் கழித்து ருத்திரபரியாக் நகரை கடந்தது. கடுமையான பயண கழைப்பின் காரணமாக தேனீர் இடைவேளை விடப்பட்டது. இரவு 8மணிக்கு மேல் இனிவரும் பகுதிகளில் பயணம் செய்யக்கூடாது என்ற உத்திரவு அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக முகேஷ் அறிவுறுத்தினார். அடுத்த 1 மணிநேர பயணத்தில் கிரன்பரியாக் நகரை அடைந்துவிட்டால் எப்படியாவது சமாளித்து கவுசானி சென்று விடாலம் என அறிவுறுத்தினார். ஏனெனில் இன்றைய இரவு கவுசானி லெக்சுமி ஆஸ்ரமத்தில் தங்குவது முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
5.45 மணிக்கு மீண்டும் துவங்கிய பயணம் கரடு முரடான பிண்டா ஆற்றின் கரைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. இடை இடையே மலைச்சரிவுகளை காணமுடிந்தது. சில இடங்களில் ரோட்டின் மையப்பகுதி வரை பாறைகள் விழுந்துகிடந்தன. ஒருவழியாக கரண்பரியாக் நகரை கடந்தது. சரியாக 7.40 மணிக்கு சமோலி நகருக்கு 10கிலோமீட்டர் முன்பாக வண்டியின் பின்பக்க டயர் பஞ்சராகி நின்று விட செய்தவதரியாது ஒரு திகைப்பு மேலிட்டது. இருந்தாலும் முகேஷ் இருக்க பயமேன் என்ற நிலையில் முகேஷ் உடன் ஆலோசனை செய்து இனிபயணத்தை தொடர்வது நல்லதில்லை என முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முகேஷின் நண்பர்கள் மூலம் குவால்தம் ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அஞ்சலி தங்கும் விடுதியில் தங்குவதற்கும், இரவு உணவுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரைமணி நேர போரட்டத்திற்கு பின் வண்டி பஞ்சர் பார்க்கப்பட்டு குவால்தம் நோக்கி புறப்பட்டது. சரியாக 9மணிக்கு குவால்தம் நகரை அடைந்தது. எல்லோரும் இரவு உணவு உண்டு தூங்க செல்ல இரவு 11.30 மணியாயிற்று. மறுநாள் அதிகாலை 5 மணிக்கே துவக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் முதல் நாள் கடக்காமல் விட்டதூரத்தை மறுநாள் முன்னமே கடக்கவேண்டும் என்ற நெருக்கடி பயண ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தமையே காரணம். ஒட்டொமொத்தமாய் இன்றையநாள் பயண சோதனைகள், அசௌகரியங்கள் நிறைந்த நாளாய், குறைவான இடங்களை பார்த்த உணர்வுவே மிகுதியாய் இருந்தது.
நான்காம் நாள், நவம்பர் 28, 2009:
இரவு தங்கிய இடம் பிண்டா நதியின் கரையில் உள்ளது. அதிகாலை எல்லோரும் ஜலஜலவென மெல்லிய சத்தத்துடன் ஓடும் பிண்டா நதியின் காலை அழகை ரசித்தபடியே கிளம்பினர். இன்றைய பயணம் கவுசாணி வழியாக அல்மோரா நகரை நோக்கியது. இன்று அவ்வளவாக சிரமங்கள் இருக்காது ஆனால் நிறைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பிருக்கும் என முகேஷ் கூறினார். அதிகாலை 5 மணியில் இருந்து கிளம்ப ஆரம்பித்து 6.30மணிக்கு கிளம்பினோம். அடுத்த ஒன்னரை மணிநேர பயணத்தில் கவுசாணி நகரை அடைந்தோம்.
கவுசாணி:
கவுசாணி நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1890 (6075 ft) மீட்டர் உயரமும், 5.2 சதுர கிலோமீட்டர் பரப்பும் உடைய ஒரு கோடைவாசஸ்தலம். இமயமலையின் பெரிய 350 கிலோமீட்டர் சுற்றுப்பரப்புடைய பனிச்சிகரங்களான திரிசூல், நந்ததேவி, பஞ்சசுலி சிகரங்களை இங்கிருந்து பார்க்கலாம். இந்தியாவின் சுவிட்சர்லாந்து என தேசத்தந்தை மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்ட கவுசாணியின் ஒருபுறம் சோமேஸ்வர் பள்ளத்தாக்கும், மற்றொருபுரம் குரூர் மற்றும் பஞ்நாத் பள்ளத்தாக்கையை உடைய பைன் மரங்களால் சூழப்பட்ட நகரமாகும்.
லக்சுமி ஆசரமம்:
சரியாக 8மணிக்கு கவுசாணியை அடைந்து ரோட்டில் இருந்து ஒன்றறை கிலோமீட்டர் உயரமான பைன் மரங்கள் சூழ்ந்த மலை உச்சியில் அமைந்துள்ள லக்சுமி ஆசரமத்தை அடைந்தோம். லக்சுமி ஆசரம நிர்வாகிகள் வரவேற்றனர். லச்சுமி ஆசரமம் குமாவுன் பகுதி பெண்கள் முன்னோற்றத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு மையம். இங்கு கிராமப்புற தொழில்கள், சுகாதாரம், பெண்கல்வி, ஆதரவற்ற குழ்ந்தைகளை பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மகாத்மா காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அயர்லாந்து நாட்டில் பிறந்து இப்பகுதியில் சமுகப்பணிகளில் ஈடுபட்டு மறைந்த சரளாபென் அவர்கள் லக்சுமி ஆசரமத்தில் தங்கித்தான் சுதந்திர போரட்டங்களில் கலந்துகொண்டு 3முறை சிறைவாசம் அனுபவித்தார். நாடு சுதந்திரம் பெற்றபின் பெண்களின் சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகாத்மா காந்தியின் மறைவிற்கு பின்னர் அவர் தங்கிய இடத்தில் அனாசக்தி ஆசரமத்தை உருவாக்கினார். இன்றைக்கு உத்திராகாண்ட் மாநிலத்தில் சமூக மாற்ற பணிகளில் ஈடுபட்டு வரும் பெருவாரியான தலைவர்களின் தாய்வீடு, பயிற்சி கூடம் அல்லது துவக்கம் என எதாவது ஒருவழியில் லக்சுமி ஆசரமத்துடன் தொடர்புடையவர்களாய் இருப்பர். இன்றைக்கும் தண்ணீர் தனியார்மயம், சிற்றாறுகளை பாதுகாப்பதற்கான ஆறுகள் பாதுகாப்பு இயக்கத்தை (Save the River Movement) ராதாபட் அவர்களின் தலைமையில் நடத்தி வருகிறது. லச்சுமி ஆசரமத்தின் வரலாறு, உத்திரகாண்ட் சமூக செயல்பாட்டு இயக்கங்கள், பணிகள் ஆகியன பற்றி லக்சுமி ஆசரமத்தை சேர்ந்த டேவிட் அவர்கள் விளக்கினார். அதனை தொடர்ந்து ஆசரமத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமத்தொழிற்கூடம், விற்பனை பிரிவுகளை பார்வையிட்டோம். சரியாக அங்கிருந்து 11.30 மணிக்கு கிளம்பி அனாசக்தி ஆசரமம் வந்தடைதோம்.
அனாசக்தி ஆசரமம்:
மகாத்மா காந்தி 1929ம் ஆண்டு கவுசானியில் 12நாள் தங்கி கீதையில் கூறப்பட்டுள்ள அனாசக்தி யோகாவிற்கான விளக்கத்தை எழுதிய இடத்தை அவரின் மறைவிற்கு பின்னர் அவரின் முக்கிய சீடரான சரளாபென் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அனாசக்தி ஆசரமம். அனாசக்தி ஆசரமம் என்றால் ஆன்மீகம் கலந்த அமைதி கிடைக்க கூடிய இடம் என்ற பொருள் உண்டு. காந்தியின் பெயரில் அவருடைய உத்திராகாண்ட் வருகையை நினைவுகூறும் வகையில் இவ்வாசிரமம் அமைந்துள்ளது. அனாசக்தி ஆசரமத்தின் தோற்றம் மற்றும் பின்னனி பற்றி முகேஷ் விளக்கினார். அதனை தொடர்ந்து சரியாக 12.45மணிக்கு அங்கிருந்து அல்மோரா நகரை நோக்கி கிளம்பினோம்.
கவுசாணியில் இருந்து 15கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகேஸ்வர் டவுனில் மதிய உணவுக்காக வண்டி நிறுத்தப்பட்டது. பாகேஸ்வர் டவுன் ஒரு சிறிய உள்ளூர் சந்தையை மையப்படுத்தி சந்தையை மையப்படுத்திய நகரம் என்பதால் ஏதேனும் பொருள் வாங்கவிரும்புபவர்களின் ஆசைகளை நிறைவுசெய்யும் வகையில் 3.30மணி வரை இடைவேளை விடப்பட்டது. அதனை தொடர்ந்து வண்டி கிளம்பி சரியாக 5.54 அல்மோரா நகரை அடைந்தோம். அல்மோரா நகரில் உத்திராகாண்ட் குடிமக்கள் உலக அரங்கின் அமைப்பாளரான திரு. ரகு திவாரி அவர்கள் பயண குழிவினரை வரவேற்றார்.
அல்மோராவில் தங்குவதற்கு விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லொரும் ஓய்விற்கு பின் 7 மணிக்கு விடுதியின் மொட்டை மாடியில் உள்ள ஒன்று கூடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி எல்லோரும் வந்து சேர குழு வினருடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மூன்று சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முறையே உத்திராகாண்ட் பரிவர்த்தன் கட்சியின் தலைவர் திரு. பி.சி. திவாரி, உத்திராகாண்ட் வனப்பஞ்சாயத்து கூட்டமைப்பு (உத்திராகாண்ட் சர்ப்பஞ்ச் சங்கட்டான்) தலைவர் மற்றும் இமாலயன் சுவராஜ் அபியன் அமைப்பை சார்ந்த சங்கர், சந்தீப், பிஜோய் ஆகியோராவர்.
முதலாவதாக பி.சி.திவாரி அவர்கள் உத்திரகாண்ட் அரசியல், பொருளாதார சூழ்நிலை, அதனை எதிர்கொண்டு தாங்கள் முன்னெடுத்துள்ள பசுமை சார்ந்த அரசியலின் இன்றைய நிலை, எதிர்கால திட்டம் குறித்து விளக்கினார். அவரது உரையை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து வனப்பஞ்சாயத்து கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் உத்திராகாண்ட் மாநில வனங்களின் நிலைமை, அரசின் கொள்கை, வனச்சமுகங்களின் வாழ்நிலை குறித்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து 9.30 மணிக்கு இரவு உணவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டுநாள் நிகழ்வுகள் குறித்தான கருத்து பரிமாற்றம் பயணத்தின் அமைப்பாளர் திரு. சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பயணத்தில் காணப்படும் சிற்சில குறைபாடுகள் குறித்து திரு. ஆனாந்தராஜா தனக்கிருந்த வருத்தங்களை பகிர்ந்தார்.
ஐந்தாம் நாள், நவம்பர் 29, 2009:
அல்மோரா நகரம்:
உத்திராகாண்ட் மாநிலத்தின் அரசியல் மற்றும் சமூக போரட்டங்களின் தலைமையிடங்களாக விளங்கும் ப்ருமை அல்மோரா நகருக்கு உண்டு. ஏனென்றால் உத்திராகாண்ட் பசுமை கட்சியான பரிவர்த்தன் கட்சியின் தலைவர் பி.சி. திவாரியின் சொந்த ஊர் இதுதான். அதைப்போல மாநிலம் மதுஒழிப்பு, வனப்பஞ்சாயத்து இயக்கம் போன்ற மாநிலம் தழுவிய, தனிமாநில கோரிக்கையை வென்றெடுக்க காரணமாய் இருந்த மக்கள் இயக்கங்கள் உற்பத்தி தளம், புண்ணிய பூமி இந்த நகரம் தான்.
1568ல் உருவாக்கப்பட்ட அல்மோரா நகரம் குமாவுன் பகுதியின் கலாச்சாரத்தின் இதயமாக விளங்கக்கூடியதாகும். இது கடல்மட்டத்தில் இருந்து 1651 மீட்டர் (5417 அடி) உயரத்தில் உள்ளது. பைன், பர் மரங்களால் சூழப்பட்ட இந்நகரத்தை ஒட்டி கோஷி, சுயால் நதிகள் ஓடுகின்றன. இமயமலையின் பனிச்சிகரங்களின் பின்னனி பார்ப்பதற்கு எழில் கொஞ்சும் நகரமாகும்.
முதல் நாள் கருத்துப்பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக இமாலயன் சிவராஜ் அபியன் அமைப்பை சேர்ந்த சந்தீப் கிராமப்புற இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சமூக மாற்றத்திற்கான எழுத்தறிவு இயக்கத்தின் பணிகள் பற்றி விளக்கினார். அத்துடன் இமயமலை பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள், தலித்துகள் முன்னேற்றம் போன்ற தங்களது பணிகள் குறித்து விளக்கினார். உத்திரகாண்ட் மாநிலத்தின் வளர்ந்து வரும் இளம் தலைமுறை செயல்பாட்டாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்.
அதனை தொடர்ந்து காலை உணவுக்கு பின் சௌகாட்டியை நோக்கிய ரேனிகேட் வழியான பயணம் சரியாக 10.30மணிக்கு துவங்கியது. மதியம் 2.15மணிக்கு பயண குழு ரேனிகேட் நகரை அடைந்தது. மதிய உணவுக்காக வண்டி ரேனிகேட் நகரில் நிறுத்தப்பட்டது.
ரேனிகேட்:
மன்னர் காலத்தில் ராஜ சுதரதேவ் தன்னுடைய ராணியான ராணி பத்மினியின் இதயத்தை கவர இந்த பகுதியை தேர்வு செய்து ராணிக்கு அரண்மனை கட்டி ராணிகேட் பெயர் சூட்டியதால் ரேனிகேட் என்ற பெயர் இந்நகரின் பெயராய் நிலைபெற்றுள்ளது. ரேனிகேட் நகரம் கடல்மட்டத்தில் இருந்து 1869 மீட்டர் (6132 அடி) உயரத்தில் உள்ளது.
1869 இந்நகரை மையமாக வைத்து ஆங்கில அரசாங்கம் குமாவுன் ரெஜிமண்ட் என்ற ராணுவபிரிவினை தோற்றூவித்தது. அத்துடன் இந்திய வெயிலில் இருந்து தப்பிக்க ராணுவ அதிகாரிகளுக்கான கோடைவாசஸ்தலமாகவும் பயன்படுத்தியது. தற்பொழுதும் குமாவுன் ரெஜிமண்ட்டின் தலைமையிடமாக விளங்குகிறது.
ரேனிகேட் நகரம் உள்ளூர் கைவினைப்பொருட்கள், சுவெட்டர் போன்ற பொருட்களுக்கு பெயர்பெற்ற நகரம் என்பதால் பங்கேற்பாளர்களின் விருப்பத்திற்கிணங்க கடைவீதியை சுற்றிப்பார்த்து விட்டு 5.30 மணிக்குள் வந்துவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சிறிது தாமதத்திற்கு பின்னர் வண்டி 6.10க்கு சவூட்டியாவை நோக்கி கிளம்பியது. இரவு 7.45க்கு சவூட்டியா நகரை அடைந்தோம். அங்குள்ள வியாபாரிகள் சங்க விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு உணவு முடித்து, இரவு 9.30மணிக்கு துவங்கிய பயண சீராய்வு கூட்டத்திற்கு பின் விருப்பப்பட்டவர்களை சவூட்டியாவில் நடைபெறும் ராம்லீலாவிற்கு பி.சி. திவாரி அவர்களின் சார்பில் பயணக்குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி விருப்பமுள்ள பங்கேற்பாளர் ராம்லீலா செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் அந்த பாரம்பரிய கிராம திருவிழாவில் பங்கெடுத்துக்கொண்டனர்.
ஆறாம் நாள், நவம்பர் 30, 2009:
சவூட்டியா:
சிறிது அசவுரியங்களுடானான இரவு தூக்கத்திற்கு பின் இன்றைய பயணம் திரு. ரகு திவாரி அவர்களின் அம்மான் நிறுவனத்தின் சார்பில் கிராமப்புறங்களில் செய்யப்படும் தொண்டு நிறுவன பணிகளை பார்வையிட காலைஉணவுக்கு பின் 9மணிக்கு துவங்கியது. அடுத்த அரைமணிநேர பயணத்திற்கு பின் அம்மன் நிறுவனத்தின் களப்பணி அலுவலகம் அமைந்துள்ள கிராமத்திற்கு சென்றோம். அவருடைய அலுவலகம் ரோட்டில் இருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியின் மீது அமந்திருந்தது. பயணக்குழுவினரில் ஒருசிலருக்கு மலை ஏறுவது சிரமம் என கருதிதியதால் கீழேயே இருந்து கொள்வதாய் கூறிவிட்டனர்.
அம்மான் அலுவலகத்தில் ரகு திவாரி மற்றும் அவரது சகபணியாளர் எல்லோரையும் வரவேற்றனர். அங்கு உத்திராகாண்ட் மாநில பாரம்பரிய கதை வடிவிலான இசைநிகழ்ச்சி உள்ளூர் இசைக்கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் உள்ளூர் மொழியிலான விழிப்புணர்வு பாடல்கள் அம்மான் நிறுவன பணியாளர்களால் பாடப்பட்டது. இடைஇடையே சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டது. உத்திராகாண்ட் மாநில பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ..........................விளக்கினார். அம்மான் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம முன்னேற்ற பணிகள் குறித்து ரகு திவாரி விளக்கினார். சுற்றூச்சூழல் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்க்கு பத்திரிக்கையாலர்களின் பங்கு குறித்து திரு. ... விளக்கினார். அதனை தொடர்ந்து உத்திராகான்ட் மகிளா சமாஜ் சார்பில் பெண்கள் பிரச்சனை மற்றூம் பெண் விடுதலை குறித்தான பணிகள், சுற்றுச்சூழல் இயக்கங்களில் பெண்களின் பங்கு குறித்து திருமதி. ........விளக்கினார். அவரை தொடர்ந்து ரகு திவார். இறுதியாக இடைநின்ற குழந்தைகள் நின்ற சிறுவர்கள் மத்தியில் செய்யப்படும் கல்வி பணிகள் வாயிலாய் சமூக குற்றங்கள் குறைந்துள்ள நிலைமை பற்றி திரு. ........... விளக்கினார். இறுதியில் திரு.ரகு திவாரி அவர்கள் தமிழ்நாட்டுடனான தங்கள் தொடர்பு, திரு. ஒய். டேவிட் அவர்கள் உத்திரகாண்ட் மாநில சமூக செயல்பாட்டு குழுக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் இச்சுற்றுப்பயணத்திற்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
எல்லோருக்கும் மதியம் 2மணி அளவில் பருப்பு, ரசம், தயிருடன் கூடிய மதிய உணவு அம்மான் நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் அம்மன் நிறுவனத்தின் பணித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உரக்குழிகள், பசுமைகுடில் அரங்குகள் பார்வையிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 4மணிக்கு நைனிடாலை நோக்கிய பயணம் துவங்கியது. இப்பயணம் முழுவதும் இமயமலையில் இருந்து கீழே இறங்கும் வகையில் அமைந்தது. இரவு 9மணிக்கு நைனிடால் காந்தி ஆசிரமத்தை அடைந்தோம். இரவு தங்கள் இங்குதான். எல்லோரும் ரூமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவு முடித்து தூங்கும்போது இரவு 11மணி ஆகிவிட்டது.
ஏழாம் நாள், நவம்பர் 31, 2009:
நைனிடால்:
இமயமலை சிகரத்தின் குமாவுன் மலைப்பிரதேசத்தின் வெளிப்புற அடிவாரத்தில் உள்ள நைனிடால் நகரம் நைனிடால் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 2084 மீட்டர் (6837 அடி) உயரத்தில் உள்ளது. இந்நகரின் மத்தியில், வடக்கில் நைனா (2615மீட்டர்), மேற்கில் தியோபத்தா (2438 மீட்டர்), தெற்கில் ஆயர்பத்தா (2278மீட்டர்) மலைகளால் சூழப்பட்ட இரண்டு கிலோமீட்டர் பரப்பளவுடைய நைனிடால் ஏரி உள்ளது. உத்திராகான்ட் மாநில ஆளுநர் மாளிகை, உயர்நீதிமன்றம் இங்குதான் உள்ளது. ஷேர் க தன்டா மேடு என்னும் 2270 மீட்டர் (7448 அடி) உயரத்தில் உள்ள இடத்தில் இருந்து நந்தாதேவி, திரிசூல், நந்தாகோட் பனிச்சிகரங்களை பார்வையிடும் இடம் உள்ளது. இதற்கு செல்ல கேபிள் கார் வசதி உண்டு.
இங்குள்ள நைனினா மலைத்தொடர்முடிவில் இருந்து சீனாவின் எல்லை ஆரம்பிப்பதால் இது சீனா மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது. இது கடல்மட்டத்தில் இருந்து 2615 மீட்டர் (8579 அடி) உயரம் உடையது.
கடந்த 15னைந்து 20 வருடங்களாக அதிகரித்துவரும் நகர்புற கட்டுமானங்களின் விளைவாக நைனிடால் நகரின் இயற்கை அழகு கெட்டுவருவது மட்டுமல்லாமல், வனங்கள் சீரழிவு, நீர்ப்பிடிப்புகள் இல்லாமல் போதல், நைனிடால் ஏரி மாசடைதல் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
சுற்றுப்பயண குழுவினரை சந்திக்க வருவதாய் கூறியிருந்த பிரபல காந்தியவாதி சேகர் பட்டக் உடல்நல குறைவின் காரணமாய் வரமுடியாததால் காலை நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி சுற்றுப்பயண குழுவினர் நைனிடால் நகரை சுற்றிப்பார்த்து விட்டு சரியாக 12.30 மணிக்கு எல்லோரும் தங்கியுள்ள இடத்திற்கு திரும்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்படி முகேஷ் அவர்கள் ஒட்டுமொத்தமாக உத்திரகாண்ட் மாநில வரலாறு, இயற்கை சூழல், மக்கள் வாழ்க்கை சூழல், வாழ்வாதார சூழல், காலநிலை மாற்றம் போன்ற தலைப்புகளின் கீழான சொற்பொழிவாற்றினார். அதனை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். சரியாக இரண்டு மணிக்கு முடிவடைந்த அவருடைய உரைக்கு பின் பயண குழுவினர் மற்றும் முகேஷ் என எல்லோரும் அடங்கிய குழு போட்டோ எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியாக சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலான சுற்றுசூழல் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி நோக்கி செல்ல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்புற கண்ணாடி இல்லாத வண்டியில் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தை நோக்கிய பயணம் துவங்கியது. மாலை 4.30 மணிக்கு துவங்கிய பயணம் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நிஜாமுதினில் நிறைவுபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment