Tuesday, February 9, 2010

நிலத்தடி நீர் மாதிரி மசோதா: 6 மாநிலங்கள் நிராகரிப்பு

புதுதில்லி,​​ பிப்.​ 9:​
நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும்,​​ சேமிக்கவும் வகை செய்து மத்திய அரசு அனுப்பிய நிலத்தடி நீர் மசோதாவை ​ பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிராகரித்தன.இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் என அச்சம் தெரிவித்து சில மாநிலங்களும்,​​ இத்தகைய மசோதாவுக்கு அவசியமே இல்லை என்று சில மாநிலங்களும் கருத்து தெரிவித்து மத்திய அரசு அனுப்பியிருந்த மாதிரி மசோதாவை ​ நிராகரித்தன.​

நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிப்பது,​​ அதை முறையாக நிர்வகித்து,​​ முறைப்படி பயன்படுத்துவதற்காக மத்திய நீர்வள அமைச்சகம் இந்த மாதிரி மசோதாவை தயாரித்து 1970ல் மாநிலங்களின் பரிசீலனைக்காக அனுப்பியது.​ ​ ​ 1992,​ 1996,​ 2005ம் ஆண்டுகளில் மீண்டும் மாநிலங்கள்,​​ யூனியன் பிரதேசங்களின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டன.​ இந்த மாதிரி மசோதாவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தடி நீர் கட்டுப்பாடு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் மாநில அரசுகளுக்கு அது பரிந்துரைத்திருந்தது.​ ஆனால் இந்த மசோதாவை பஞ்சாப்,​​ சிக்கிம்,​​ அருணாசலப் பிரதேசம்,​​ திரிபுரா,​​ நாகாலாந்து உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிராகரித்துள்ளன.ஒவ்வொரு மாநிலமும்,​​ யூனியன் பிரதேசமும் நீர்வள ஆணையம் அமைக்க இந்த மசோதா யோசனை தெரிவித்துள்ளது.​ ​​ நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதாக சந்தேகம் எழும்பட்சத்தில் அரசு நிலத்திலோ அல்லது தனியார் இடத்திலோ சென்று கிணறு,​​ ஆழ்குழாய் கிணறுகளை ஆணைய அதிகாரிகள் ​ சோதனையிட அதிகாரம் தர இந்த சட்டம் வகை செய்கிறது.​ மேலும் கிணறு தோண்டவோ அல்லது ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவோ ஆணையத்திடம் அனுமதி பெற்றாகவேண்டும் என்றும் மசோதா கட்டுப்பாடு விதிக்கிறது.​ மத்திய அரசு அனுப்பிய மாதிரி மசோதா வழியில் ஒரு மசோதாவை தயாரித்த பஞ்சாப் அரசு,​​ மாநில நீர்வள ​ குழுவின் முடிவுக்கு அனுப்பியது.​ ஆனால்,​​ இம்மசோதா பயனாளிகளுக்கு அதிக பாதிப்பு தருவதாகக் கூறி அந்த குழு அதை நிராகரித்தது.​ நிலத்தடி நீரை சேமிக்க ஊக்கச் சலுகை தரலாம் என்று அது யோசனை தெரிவித்துள்ளது என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.​

சிக்கிம்,​​ அருணாசலப் பிரதேசம் ஆகியவை தமது மாநிலங்களில் நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பதே இல்லை.​ எனவே இந்த சட்டத்துக்கு அவசியமே இல்லை என்று கைவிரித்துவிட்டன.நாகாலாந்து,​​ மணிப்பூர்,​​ திரிபுரா ஆகியவை மத்திய அரசு அனுப்பிய மசோதாவை நிராகரித்த மற்ற மாநிலங்கள்.இதுவரை 11 ​ மாநிலங்கள்,​​ யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசு யோசனை படி சட்டம் கொண்டுவந்து அமல்படுத்தியுள்ளன.​ ​​ 18 மாநிலங்கள் நிலத்தடி நீர்வள சட்டம் இயற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.ஆந்திரம், ​​ கோவா,​​ தமிழ்நாடு,​​ கேரளம்,​​ மேற்குவங்கம்,​​ இமாசலப்பிரதேசம்,​​ பிகார்,யூனியன் பிரேசங்களான சண்டீகர்,​​ ​ தாத்ரா,​​ நகர் ஹவேலி,​​ லட்சத்தீவு ஆகியவை மத்திய அரசு யோசனை படி நிலத்தடி நீர் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தை இயற்றியுள்ளன.

நன்றி> தினமணி

No comments: