Friday, February 26, 2010

களைச் செடியாகும் கற்பகத்தருக்கள் -பீ.ஜெபலின் ஜான்

இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,​​ ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.​ தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் ​ கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.​ நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,​​ முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,​​ வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.​ இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,​​ இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.​ பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.​ இதன் உச்சியில்,​​ கிட்டத்தட்ட 30 -​ 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.​ ​​ ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.​ இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.​ அரசும்,​​ மக்களும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.​ ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.​ இந்தியாவில்,​​ கேரளம்,​​ கோவா,​​ மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள்,​​ தமிழகத்தில் கன்னியாகுமரி,​​ திருநெல்வேலி,​​ மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.​ ​ இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.​ 1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம்.​ அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும்,​​ நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.​ ​ உள்நாட்டுப் போரினால் மட்டும்,​​ 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.​ அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,​​ 30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.​ இலங்கையில் இருந்து பதனீர்,​​ கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.÷தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.​ பதநீர் விற்பனையை அதிகரித்து,​​ அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.​ ​​ ​ பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,​​ நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் ​ பனையிலிருந்து பெற முடியும்.​ பொதுவாக,​​ இது வளரும் இடங்களில் எல்லாம்,​​ வசதியற்ற ஏழை மக்களின் ​பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.÷பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர்,​​ பனை வெல்லம் -​ 25 கிலோ,​​ பனங்கற்கண்டு -​ 16 கிலோ,​​ தும்பு -​ 11.4 கிலோ,​​ ஈக்கு -​ 2.25 கிலோ,​​ விறகு -​ 10 கிலோ,​​ ஓலை -​ 10 கிலோ,​​ நார்-​ 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.​ ​ பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,​​ விலங்குகளின் உணவும் அடங்கும்.​ கட்டடப் பொருள்கள்,​​ அலங்காரப் பொருள்கள்,​​ வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.​ ​ முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.​ இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.​ அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து,​​ ஜெர்மனி,​​ பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.​ ​​ ​ அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள்,​​ தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.​ ​​ ​ இதுபோல தமிழுக்கும்,​​ தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்.​ தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,​​ தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.​ ​ ​ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ​(குறிப்பாக தென்மாவட்டங்களில்)​ பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்,​​ பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.​ ​அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.​ இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.​ ​ 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.​ எனவே,​​ பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,​​ வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.​ ​ மாநில மரம் என்ற வகையிலும்,​​ தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற ​ வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.​ ​​ ​ பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் ​ கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது,​​ பனையில் இருந்து ​ கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம்.​ பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.

நன்றி/தினமணி

Tuesday, February 9, 2010

நிலத்தடி நீர் மாதிரி மசோதா: 6 மாநிலங்கள் நிராகரிப்பு

புதுதில்லி,​​ பிப்.​ 9:​
நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கவும்,​​ சேமிக்கவும் வகை செய்து மத்திய அரசு அனுப்பிய நிலத்தடி நீர் மசோதாவை ​ பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிராகரித்தன.இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் என அச்சம் தெரிவித்து சில மாநிலங்களும்,​​ இத்தகைய மசோதாவுக்கு அவசியமே இல்லை என்று சில மாநிலங்களும் கருத்து தெரிவித்து மத்திய அரசு அனுப்பியிருந்த மாதிரி மசோதாவை ​ நிராகரித்தன.​

நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிப்பது,​​ அதை முறையாக நிர்வகித்து,​​ முறைப்படி பயன்படுத்துவதற்காக மத்திய நீர்வள அமைச்சகம் இந்த மாதிரி மசோதாவை தயாரித்து 1970ல் மாநிலங்களின் பரிசீலனைக்காக அனுப்பியது.​ ​ ​ 1992,​ 1996,​ 2005ம் ஆண்டுகளில் மீண்டும் மாநிலங்கள்,​​ யூனியன் பிரதேசங்களின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டன.​ இந்த மாதிரி மசோதாவை அடிப்படையாகக் கொண்டு நிலத்தடி நீர் கட்டுப்பாடு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் மாநில அரசுகளுக்கு அது பரிந்துரைத்திருந்தது.​ ஆனால் இந்த மசோதாவை பஞ்சாப்,​​ சிக்கிம்,​​ அருணாசலப் பிரதேசம்,​​ திரிபுரா,​​ நாகாலாந்து உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிராகரித்துள்ளன.ஒவ்வொரு மாநிலமும்,​​ யூனியன் பிரதேசமும் நீர்வள ஆணையம் அமைக்க இந்த மசோதா யோசனை தெரிவித்துள்ளது.​ ​​ நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதாக சந்தேகம் எழும்பட்சத்தில் அரசு நிலத்திலோ அல்லது தனியார் இடத்திலோ சென்று கிணறு,​​ ஆழ்குழாய் கிணறுகளை ஆணைய அதிகாரிகள் ​ சோதனையிட அதிகாரம் தர இந்த சட்டம் வகை செய்கிறது.​ மேலும் கிணறு தோண்டவோ அல்லது ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவோ ஆணையத்திடம் அனுமதி பெற்றாகவேண்டும் என்றும் மசோதா கட்டுப்பாடு விதிக்கிறது.​ மத்திய அரசு அனுப்பிய மாதிரி மசோதா வழியில் ஒரு மசோதாவை தயாரித்த பஞ்சாப் அரசு,​​ மாநில நீர்வள ​ குழுவின் முடிவுக்கு அனுப்பியது.​ ஆனால்,​​ இம்மசோதா பயனாளிகளுக்கு அதிக பாதிப்பு தருவதாகக் கூறி அந்த குழு அதை நிராகரித்தது.​ நிலத்தடி நீரை சேமிக்க ஊக்கச் சலுகை தரலாம் என்று அது யோசனை தெரிவித்துள்ளது என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.​

சிக்கிம்,​​ அருணாசலப் பிரதேசம் ஆகியவை தமது மாநிலங்களில் நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பதே இல்லை.​ எனவே இந்த சட்டத்துக்கு அவசியமே இல்லை என்று கைவிரித்துவிட்டன.நாகாலாந்து,​​ மணிப்பூர்,​​ திரிபுரா ஆகியவை மத்திய அரசு அனுப்பிய மசோதாவை நிராகரித்த மற்ற மாநிலங்கள்.இதுவரை 11 ​ மாநிலங்கள்,​​ யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசு யோசனை படி சட்டம் கொண்டுவந்து அமல்படுத்தியுள்ளன.​ ​​ 18 மாநிலங்கள் நிலத்தடி நீர்வள சட்டம் இயற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.ஆந்திரம், ​​ கோவா,​​ தமிழ்நாடு,​​ கேரளம்,​​ மேற்குவங்கம்,​​ இமாசலப்பிரதேசம்,​​ பிகார்,யூனியன் பிரேசங்களான சண்டீகர்,​​ ​ தாத்ரா,​​ நகர் ஹவேலி,​​ லட்சத்தீவு ஆகியவை மத்திய அரசு யோசனை படி நிலத்தடி நீர் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தை இயற்றியுள்ளன.

நன்றி> தினமணி