Tuesday, October 5, 2010
5 இடங்களில் ஐவகை மரபணு பூங்கா
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்ததற்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் குறிஞ்சி, தஞ்சை மாவட்டத்தில் மருதம், திண்டுக்கல் மாவட்டத்தில் முல்லை, நாகை மாவட்டத்தில் நெய்தல், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலை என ஐவகை மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வன உயிரின விழாச் செய்தி வருமாறு:அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் முதல் நாடு முழுவதும் ஒரு வார காலம் வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. பழந்தமிழரின் ஐவகை நிலப்பாகுபாடுகளில் காடுகளும், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகளும் முல்லை நிலம் என அழைக்கப்பட்டு வனவளமும் வனம் வாழ் உயிரினங்களும் போற்றப்பட்டுள்ளன.
அதனையொட்டி அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஐவகை நிலங்களிலும் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப சேலம் மாவட்டத்தில் குறிஞ்சி மரபணுப் பூங்கா திண்டுக்கல் மாவட்டத்தில் முல்லை மரபணுப் பூங்கா, தஞ்சை மாவட்டத்தில் மருதம் மரபணுப் பூங்கா, நாகை மாவட்டத்தில் நெய்தல் மரபணுப் பூங்கா, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலை மரபணுப் பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக அந்தந்த நிலப் பகுதிகளுக்குரிய அரிய வகை உயிரினங்களைக் காக்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 22,877 சதுர கிலோ மீட்டர் வனப்பரபில் 4,578 சதுர கிலோ மீட்டர் அதாவது 20 விழுக்காடு வனப்பரப்பு பாதுகாப்புப் பகுதியாகும். இதில் 5 தேசிய பூங்காக்கள், 9 வன உயிரின சரணாலயங்கள், 12 பறவைகள் சரணாலயங்கள், 4 யானைகள் காப்பகங்கள், 3 உயிரிசூழல் காப்பகங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள ஆசியாவிலேயே அரிய வகை வெள்ளைப் புலிக்குட்டிகள் மூன்றில் ஆண் புலிக்குட்டிக்கு செம்பியன் என்றும் பெண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு இந்திரா வள்ளி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் எனும் உணர்வுடன் மரம் வளர்ப்போம், வனப் பகுதிகளைப் பெருக்குவோம் வன உயிரினங்களைக் காப்போம் எனும் சிந்தனைகளை மக்களிடையே உருவாக்கிட இந்த ஆண்டின் வன உயிரின வார விழா எங்கும் எழுச்சியுடன் நடைபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Tuesday, July 13, 2010
வறுமை: ஆப்பிரிக்காவை விஞ்சிய இந்தியாவின் 8 மாநிலங்கள்
2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.
ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.
இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.
உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.
5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்
Source: Thats tamil.com
Wednesday, July 7, 2010
பனைத்தொழிலை பாதுகாத்தல்: பூமி சூடாதலை தடுத்திட, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான மக்களை மையப்படுத்திய மாற்று செயல்திட்டம்
இன்று இப்பூவுலகின் இருப்பினை, மனித நாகரீகத்தின் இன்றைய நிலையை கேள்விக்குள்ளாக்ககூடிய ஒரு சுற்றுச்சூழல்பிரச்சனை. ஏனெனில் நாம் வாழும் இக்காலகட்டம் பிரச்சனையின் தீவிரத்தன்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான காலகட்டம். மனித சமூகம் ஒரு அசாதரணமான காலகட்டத்தை நோக்கி வெகுவேகமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த அசாதரணமான காலகட்டத்தை வெகுசீக்கிரத்தில், 15 முதல் 20 வருடகாலகட்டத்திலேயே அடைந்துவிடக்கூட சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகின்றன. அவ்வாறு அடையக்கூடிய நிலை இதுவரை உலகம் சந்தித்திராத பேரழிவாகத்தான் இருக்கும்.
ஏன் இந்த பேரழிவை நோக்கிய பயணம்:
வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி குறிப்பாக கார்பன்டைஆக்சைடின் பல்லாயிரம் ஆன்டுகளுக்கு பின் மனித செயல்பாடுகளின் விளைவுகளால் தற்போது வெகுவாகமாக கூடி வருகிறது. கார்பன்டை ஆக்சைடு மட்டுமல்லாமல் ஏனைய பசுமையில்ல வாயுக்களின் அடர்த்தியும் கணிசமாக கூடி வருகின்றது. அதிலும் குறிப்பாக தொழிற்புரட்சி காலகட்டத்தில் இருந்து பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி கூட ஆரம்பித்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் பன்மடங்கு கூடியுள்ளது. இதன்விளைவாக கார்பன் சுழற்சியினை இயல்பான சமநிலையில் வைக்கும் தன்மை அடியோடு தகர்க்கப்பட்டு கார்பன்டை ஆக்சைடின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு (1800ல்) 281 பி.பி.எம் ஆக இருந்த கார்பன்டை ஆக்சைடு 1970ல் 327 பி.பி.எம் ஆக அடர்த்தி அதிகரித்துவிட்டது. 2003ல் 376 பி.பி.எம் ஆக கூடியிருக்கிறது. ஆண்டுக்கு 2பி.பி.எம்க்கு குறையாமல் அடர்த்தி கூடிக்கொண்டே வருகிறது. மொத்தத்தில் 1750லிருந்து தற்போதுவரை கார்பன்டை ஆக்சைடு 31 விழுக்காடும், மீத்தேன் 51விழுக்காடும், நைட்ரஸ் ஆக்சைடு 17விழுக்காடும் கூடியுள்ளது. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் 83 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன.
இதில் கார்பன்டை ஆக்சைடு பல ஆண்டுகாலம் செயலாற்றும் தன்மையுடையது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இருந்து 1000 ஆண்டுகள் வரை செயலாற்றூம் தன்மையுடையது. அதனுடைய செயலாற்றும் தன்மை (பூமிசூட்டினை அதிகரித்தல்) ஆரம்பவருடங்களில் வெகுதீவிரமான போக்குடன் இருக்கும். அதேநேரத்தில் மற்ற வாயுக்கள் குறைந்த ஆயுட்கால வளிமண்டலத்தில் தங்கியிருக்கும்.
காலநிலை மாற்ற பன்னாட்டு அரசு குழு (Intergovernmental Panal on Climate Change – IPCC) வின் நான்காவது அறிக்கையின் படி பூமியின் சரசாரி வெப்பநிலையான 13டிகிரியில் இருந்து 0.73 டிகிரி செல்ஜியஸ் கூடியுள்ளதாக கூறுயுள்ளது. இந்த சிறியளவிலான வெப்ப அதிகரிப்பே இன்று பூமியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பனிக்கட்டி உருகுதல், கடல் மட்டம் உயர்தல், விவசாய உற்பத்தி குறைதல், வனங்களில் காட்டுத்தீ,கடலில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிப்போதல், நீண்ட கோடைகாலம், பருவமழை பொய்த்துப்போதல், வறட்டி, தொடர் மழை, புதுப்புது வியாதிகள் என கணிக்க முடியாத பேரிடர் நிகழ்வுகள் தொடர்ச்சியாய் நடந்து வருகின்றன.
இப்பூமியின் சூடு கூடும் போக்கு 2 டிகிரி செல்ஜியஸ்ற்கு மேல் போகும்போது பூமி தன்னைத்தானே தகவமைத்துக்கொள்வதற்கான தன்மையை அல்லது வாய்ப்பு இல்லாமல் போகும் என அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர். இதையே புரியும்படியாக சொல்வதென்றால் பூமி பேரழிவை சந்திக்ககூடிய நிகழ்வு 2 டிகிரி செல்ஜியஸ்யை (Tiping Point) கடப்பதையே குறிக்கும். அதன் பின் இவ்வுலகு இன்றைக்கு இருப்பதுபோல் இருக்குமா என்பது ஆய்வுக்குறிய விசயம்.
பூமியின் வெப்பம் 0.73 டிகிரி ஜெல்சியஸ் கூடியுள்ளது. இந்த கூடுதல் வெப்பம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட பசுங்குடில் வாயுக்களின் விளைவாகும். அதற்கு பின்னரும் தொடர்ச்சியாக அதிகளவு பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு வருகிறோம். இவைகளின் விளைவு இனிமேல்தான் தெரியும். எனவே 0.8 டிகிரி ஜெல்ஜியஸ் கூடுவது தவிர்க்கமுடியாதது. கட்டாயம் வெளிவிடப்படும். ஆகமொத்தம் 1.5 டிகிரி ஜெல்ஜியஸ்ற்கான விளைவுகளை இப்பூமி சந்த்தித்தே தீரவேண்டும். வேறு வழியே கிடையாது. பூமிதன்னை தகவமைத்துக்கொள்வதற்கான கடைசி வாய்ப்பினை இழப்பதற்கு இன்னமும் 0.5டிகிரி ஜெல்சியஸ் மட்டுமே உள்ளது. இன்றைய உலகம் போகும் போக்கில் அதிலும் குறிப்பாக இந்தியா, சீனாவும் வளர்ச்சியை அடைந்தே தீருவோம் என்ற தீவிர போக்கினால் விரைவிலேயே 0.5டிகிரி செல்ஜியஸ்யை அடைந்து விடுவோம். உலகத்தின் பேரழிவு எட்டக்கூடிய தூரத்தில் மட்டுமே உள்ளது.
புவிவெப்படைதலுக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் அதிகரிப்பிற்கு அடிப்படை காரணமான தொல்படிம எரிபொருள்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்தான சிந்தனை இன்று மேலோங்கிவருகிறது. அதிலும் குறிப்பாக வளிமண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தியை குறைப்பதன் தேவை வலியுறுத்தப்படுகிறது. இன்று உலகெங்கும் பூமிசூடாதல் குறித்த பேசப்படுகிறது. இதிலிருந்து பூமியை, மனிதகுலத்தை, ஏனைய பிற உயிரினங்களை காப்பாற்றும் வழிமுறை குறித்து விவாதிக்கப்படுகிறது. பூமிசூடாதால் ஒர் உலகளாவிய பிரச்சனை என்பதால் உலகம் முழுமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் உலகமக்கள் இணைந்து இப்பிரச்சனைகளை தீர்க்க பலமட்டங்களில் தனித்தனியாகவும், கூட்டாகவும் முயற்சி எடுக்கவேண்டிய வரலாற்று தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 15 வருடங்களாய் உலகத்தலைவர்கள் எடுத்துள்ள முயற்சிகள் உண்மையிலேயே பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாய் பிரச்சனையின் தீவிரத்தன்மையை கூட்டவே செய்துள்ளன. கியாட்டோ ஒப்பந்தம் அதன் ஆரம்ப வடிவில் செயல்படுத்தப்படாமல் நெகிழ்வு தொழில்நுட்பங்கள என்ற பெயரில் கரிம வர்த்தகத்தை விற்கும் வியாபாரமாக மாற்றப்பட்டது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் 15 வது காலநிலை மாற்ற தடுப்பிற்கான ஹோபன்ஹெகன் உச்சிமாநாடு தோல்வி என்ற முட்டுச்சந்தில் இன்று உலகம் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளது.
உலகமய பொருளாதார போக்கில் பூமிசூடாதலை தடுக்கமுடியுமா?:
காலனி ஆதிக்க காலத்தில் வடிவெடுத்த மேற்கத்திய பாணியிலான பொருளாதாரம், இன்று உலகமயபோக்கினால் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறநெறியற்ற இன்றைய பொருளாதார போக்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக இன்று உலகில் வரலாறு காணாத அளவிற்கு வறுமை, ஏற்றத்தாழ்வு, கிராமப்புற மக்களிடம் இருந்து வாழ்வாதாரங்கள் சுரண்டப்படல் போன்றவை தொடர்கதையாய் மாறியுள்ளன. இன்று உலகெங்கும் இப்பொருளாதார போக்கினால் உருவான இடப்பெயர்வின் மூலம் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள சூழல் அகதிகளின் எண்ணிக்கை அதிகம். உலகின் பல்லுயிர் தன்மை பெரும் கேள்விக்குள்ளாகி வருகின்றது. இப்பொருளாதார போக்கிற்கெதிரான மக்கள் அமைப்புகளின் குரல்களை ஒடுக்கும் விதமாய் உலகெங்கும் ராணுவமயமாகும் போக்கும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்பொருளாதார போக்கில் ராணுவமும், யுத்தங்களும் கார்பன்டை ஆக்சைடை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை கொள்ளையடிக்கும் இந்த நாசகர பொருளாதார போக்கு "வளர்ச்சி" என்ற போதைக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இது உண்மையில் வளர்ச்சியோ அல்லது முன்னேற்றமோ அல்லது மேம்பாடோ கிடையாது. மாறாக இது வீக்கம் தான். இது இயற்கைக்கும், பெருவாரியான மக்களுக்கும், மனித நேயத்திற்கும் விரோதமான பொருளாதார போக்காகும். இப்பொருளாதார போக்கினை தாங்கி பிடிக்கும் உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக கழகம், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆகும். இப்பொருளாதார போக்கினை தாங்கிப்பிடிக்கின்ற மேற்சொன்ன நிறுவனங்கள், இவர்களுக்கு வால்பிடிக்கும் மூன்றாம் உலக நாடுகளின் தேசிய அரசுகளின் அரசியல், கலாச்சார போக்குகளே நமது அன்னை பூமி பேரழிவை நோக்கி பயணம் செய்ய காரணம் உள்ளன. இப்பொருளாதார போக்கின் அடியாட்களான உலகத்தலைவர்கள் பூமிசூடாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நினைத்தால் அது நம்முடைய முட்டாள்தனம் தான். அதற்கு சிறந்த உதாரணம் ஹோபன்ஹெகன் உச்சிமாநாடு. மாறாக தீப்பற்றி எரியும் வீட்டில் கொள்ளி திருடுபவனை போல பேரழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கும் உலகின் பிரச்சனைகளை காசாக்குவது, ஏழைநாடுகளின் வளங்களை கரிமவர்த்தகம், வனங்களை கையகப்படுத்தும் ரெட் திட்டங்கள் போன்ற புதுப்புது பெயர்களில் சாதாரண மக்களை மொட்டை அடிக்கமட்டுமே முயல்கின்றனர். தங்களுடைய ஆட்சிக்காலத்தில் எதயும் செய்ய தயாராக இல்லாத இத்தலைவர்கள் 2040 எவ்வாறு குறைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றனர்.
பூமி சூடாதல், காலநிலை மாற்ற பிரச்சனையை ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையாக அணுகாத, மொத்த அரசியல், பொருளாதார, கலாச்சார பிரச்சனைகளோடு தொடர்படுத்தி பார்க்ககூடிய, இன்றைய புதைபடிம எரிபொருள்களை சார்ந்த நவீன நாகரிகத்தை கேள்விக்குள்ளாக்கி மாற்றியமைக்ககூடிய ஒரு மாற்றுப்போக்குகளை அமைத்தால் மட்டுமே இவ்வுலகை பேரழிவில் இருந்து காக்கமுடியும்.
மாற்றுவழிதான் என்ன?:
இன்றைய உலகம் போகும் போக்கு பூமியின் இருப்பையும், மனித நாகரீகத்தை கேள்விக்குள்ளாக்ககூடியதாய் உள்ளது. இதற்கு பூமி சூடாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகள் ஒரு பெரும் காரணியாய் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இன்றைய உயிர்ப்புத்தன்மையுடன் கூடிய உலகு இனிமேல் பயன்படுத்துவதற்கு வளங்கள் இல்லை என்ற திவால் நிலையை அடைந்து விட்டது. இன்றைய உலக செளகரியங்களை அப்படியே கொண்டுசெல்லவேண்டும் என்றால் இன்னமும் புதிதாக ஒன்றறை உலக வளங்கள் தேவை என்கின்றனர். வளர்ந்த நாடுகளை போல மூன்றாம் உலக நாடுகள் வளர கிட்டத்தட்ட 7 மடங்கு உலக வளங்கள் தேவைப்படும் என கணிப்புகள் கூறுகின்றன.
சிந்துசமவெளி நாகரிகம், எகிப்திய நாகரீகம், ரோம் நாகரீகம் போன்ற கடந்த கால நாகரீகங்கள் மற்றும் இன்றைய நவீன நாகரிகம் போன்ற நாகரீகங்களுக்கு நிலைத்த தன்மை கிடையாது. ஏனெனில் கடந்தகால நாகரீகங்கள் அடிமைகளின் உடல் உழைப்பைகொண்டுதான் வளர்ச்சியடைந்தன. அங்கு சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயிர்ம நேய கோட்பாடுகளுக்கு இடமில்லை. அதனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் இந்நாகரிகங்கள் நிலைக்கவில்லை. அதே நிலை தான் இன்றைய தொழிற்புரட்சிக்கு பிந்தைய நவீன நாகரீகத்திற்கும். இன்றைய நவீன நாகரீகம் காலனி ஆதிக்கம், உலக மயம் என்ற பெயர்களில் ஏழைநாடுகளின் வளங்களை கொள்ளையடித்து, அறநெறி கோட்பாடுகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ளது. அதனால் இன்றைய நவீன நாகரீகம் அதனுடைய அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என உறுதியாக நம்பலாம். உலக வெப்பநிலை 2.0 டிகிரி செல்ஜியசை தொடும்போது அது இன்றைய நாகரீகத்திற்கான அது இன்றைய நவீன நாகரீக அழிவின் தொடக்கமாக இருக்கும். அன்று பூமியை காக்கவேண்டி மக்கள் எழுப்பும் குரல் இன்றைய நாசகர பொருளாதார போக்கிற்கெதிரான மக்கள் பெருந்திரள் போராட்டமாக இருக்கமுடியும் என்பது திண்ணம்.
உலகை பேரழிவில் இருந்து எவ்வாறு காப்பது:
இன்றைய நவீன நாகரீகத்தின் அழிவில் இருந்து தான் புதிய மனித நேய, உயிர்ம நேய நாகரீகத்தை உருவாக்கமுடியும். இதைத்தான் மார்க்ஸ்சும் ஏற்கெனவே சொல்லியுள்ளார். இந்த புதிய மாற்று வளர்ச்சிப்போக்கிற்கான நாகரீகத்தில் மனித மற்றும் விலங்குகளின் உழைப்பிற்கு முக்கிய பங்குண்டு. கட்டாயமாக இன்றைய பாணியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு புதிய நாகரீகத்தில் இடமில்லை. புதிய நாகரீகத்தில் கட்டாயம் ஏழைமக்களின் நுகர்வு பழக்கம் உயர்வதற்கு தேவையான ஆக்கபூர்வமான பணிகள் செய்யப்படவேண்டும், அதன் வாயிலாய் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கமுடியும். நடுத்தர மக்களின் நுகர்வு கலாச்சாரம் நிலைநிறுத்தப்படவேண்டும். உயர்மட்ட வகிப்பினரின் நுகர்வு கலாச்சாரம் பெரிய அளவில் குறைக்கப்படவும் வேண்டும். ஒட்டுமொத்தமாய் மக்கள் நேரடியாய் உற்பத்தியில் ஈடுபடக்கூடிய தொழில் ஊக்குவிக்கப்படவேண்டும். இதற்கு தேவையான உள்ளூர், மாநில, தேசிய, உலகளாவிய மாற்று செயல்திட்டங்கள் தற்போதிருந்தே முன்னெடுக்கப்படவேண்டும். எல்லாத்தரப்பு மக்களின் பங்களிப்பும் இதற்கு அவசியம்.
இதற்கு தேவையான செயல்திட்டங்கள் கீழ்மட்ட அளவில் இருந்து துவங்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான திட்டமிடல் பஞ்சாயத்து அளவில் செய்ய வேண்டியுள்ளது. அதில் தானே முன்வந்து பங்கேற்க வேண்டிய பொதுமக்களின் கடமையாகும்.
செயல்திட்டம்தான் என்ன;
இன்றைக்குள்ள தொழில் வளர்ச்சியுடன் உலகம் இனி செயல்பட முடியாது. எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு. இன்றைக்கு உள்ள சில தொழில்களை அப்படியே முழுமையாக கைவிடவேண்டும். சில தொழில்களை வளர்த்தெடுக்கவேண்டும். இன்னும் சிலதொழில்களை பரவலாக்கவேண்டும். ஒட்டுமொத்தமாய் சுற்றுச்சூழலுக்குகந்த, ஒத்திசைவான, எல்லோரும் ஈடுபடக்கூடிய தொழில்களை வழர்த்தெடுக்கவும், கம்பெனிகளை மையப்படுத்திய தொழில்களின் முக்கியத்துவம் குறைக்கப்படவும் வேண்டும். இந்த அடிப்படையில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடம் வகித்த பாரம்பரிய தொழில்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானதும் இன்றைய காலநிலை மாற்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலுமான பனைத்தொழில் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தொழில்.
பனை மரம்:
நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர். மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர், டாக்டர். மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார். பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ளபடியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை.
பனை மரங்கள் 45டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45டிகிரி தென் அச்சரேகை வரையிலுள்ள வெப்பமண்டல பிரதேசங்களில் வளர்கிறது. இப்பிரதேசத்தை பனை வட்டம் (Palm Belt) என அழைக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் அடங்கிய இந்தியா: 60 மில்லியன், மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன், இலங்கை - 11.1 மில்லியன், இந்தோனெசியா - 10 மில்லியன், மடகஸ்கார் - 10 மில்லியன், மியன்மார் - 2.3 மில்லியன், கம்பூச்சியா - 2 மில்லியன், தாய்லாந்து - 2 மில்லியன் என உலக அளவில் மொத்தளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
என்ற நன்றியின் பயனோடு பனையின் பயனை ஒப்பிட்டு வள்ளூவர் கூறியதிலிருந்தே பனையின் மேம்பட்ட சிறப்பு தன்மை விளங்குகிறது.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகத்தரு என்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும்.பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு: பதனீர் - 180 லிட்டர், பனை வெல்லம் - 25 கி, பனஞ்சீனி - 16 கி, தும்பு - 11.4 கி, ஈக்கு - 2.25 கி, விறகு - 10 கி, ஓலை - 10 கி, நார் - 20 கி.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது.
பனைத்தொழில் அன்றும் இன்றும்:
இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது. பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை. முன்பு கரும்பு வெள்ளம், தென்னை, பனை கருப்பட்டி, முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது. தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார். அக்காலகட்டத்தில் பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது. குறிப்பாக சொல்வதென்றால் 200 வருடங்களுக்கு முன்பு பனையேறிகள் செல்வந்தர்களாய், நாகரீகம் மிக்க சமுதாயங்களாய், சமுதாய அந்தாஸ்த்துடையவர்களாய் இருந்தனர். கிட்டத்தட்ட 843 மேற்பட்ட பனைசார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த 150 வருடங்களாய் பனைத்தொழில் நசிவடைந்து வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர், கேக், முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்தது. அதற்கென கரும்பிளிருக்கும் இரும்பு, செம்பு, முதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின், அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்தி, கரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய பணப்பயிராக உருவெடுத்தது. இதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார். மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு - சர்க்கரை உற்பத்தி. கடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும், உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளது. உலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது . இந்தியாவில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.
கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர். கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர். தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடி நிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது. கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால் நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறது. நிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை , நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது. கடந்த 2007ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினால் நிலத்தடி நீர் இல்லாத கருப்பு ஒன்றியங்களாக வரையறை செய்யப்பட்ட பெரும்பாலான ஒன்றியங்களின் அந்தநிலைக்கு பின்னால் கரும்பு உற்பத்தி என்ற வணிக நோக்கம் அரசு அறியாதது அல்ல.
பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்" கொண்டு பெறப்படுகிறது. பிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லை. அமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளர. இங்கு அப்படியா? நிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம். எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்று. அதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா? என்று சற்றே யோசிக்க வேண்டும். இன்றைய சந்தப்பவாத காசுக்காக, நிலையான செல்வங்களான நீர் நில வளங்களை, இழந்து விடக்கூடாது.
இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, போன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கின. இத்துடன் பால் உற்பத்தி தேசியமயமான பின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்று இந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. .
போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்து சாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது.
பனையேறிகள் வாழ்வும், தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன், ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறது. பனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் பனைத்தொழில்:
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும், தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்) பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும். தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தன. தற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.
பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:
கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க, பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளது. தமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம். ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. இத்தொழிலை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 10இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.
நவீன கண்டுபிடிப்புகளோ, இயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லை. மாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறது. அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.
பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம். முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள். இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோ, வார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள். மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம். அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளது. இவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர். தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.
பனைத்தொழிலை மீட்டெடுக்க:
எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை, வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும், தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.
தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான். பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர். ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை.
ஒட்டுமொத்தத்தில் பனை, பனைத்தொழில், பனைதொழிலாளர்கள், பனைப்பொருள் நுகர்வு கலாச்சாரம் என சகல அம்சங்களும் அடங்கிய தமிழகத்தின் பனைப்பொருளாதாரம் எல்லாத்தரப்பு மக்களின் ஈடுபாட்டோடு மீட்டெடுக்க வேண்டிய பெரும்பனி நம்முன் உள்ளது. பலலட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்ககூடிய பணைப்பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தின் நிலத்தடி நீரை சுரண்டும், அதிகமான நோயாளிகளை உண்டாக்கும் கரும்பு கலாச்சாரம் மட்டுப்படுத்தப்படும். இது கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தை உண்டு பண்ணும். இடபெயர்வினை பெறுமளவு கட்டுப்படுத்தும். காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வளரக்கூடிய இயற்கை தன்மை கொண்ட கற்பக விருட்சமான பனை தமிழகத்தின் காலநிலை மாற்றத்தை எதிர்கொல்வதற்கான மாநில செய்ல்திட்டத்தில் முக்கிய இடம் பெறும் என்பது நிச்சயம்.
குறிப்பு:இக்கட்டுரை நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு - தமிழ்நாடு அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு. ஒய்.டேவிட் அவர்கள் ஜனவரி 16, 17களில் நடைபெற்ற ஜாசூல் மாநில குழு கூட்டத்தில் ஹோபன்ஹெகன் மாநாட்டின் தோல்விக்கு பின்னரான வெற்றிடத்தை நிரப்புவதில் மக்கள் அமைப்புகளின் பங்கு என்ற தன்னுடைய கருத்து பகிர்வில் ஆற்றிய உரையின் சுருக்கம். இது தொடர்பான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. தொடர்புக்கு - tmarirajan@gmail.com
ஆக்கம்:
Friday, April 9, 2010
தமிழகத்தில் தனிநபர் கடன் ரூ.14,353
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன் இருப்பதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாத்ததுக்கு பதிலளித்து அவர் பேசியது:"தமிழக அரசு கடனில் மூழ்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அரசு கடனில் மூழ்காது. கடனை வைத்து வேறு சிலரை மூழ்கடிப்போம். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் வேண்டும். அரசின் பணத்தில் இருந்துதான் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றால் அதற்கு காலம் ஆகும். அதற்குள் அந்தத் திட்டங்களுக்கான செலவு அதிகரிக்கும். எனவே, திட்டங்களைச் செயல்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யவும் கடன் திரட்டுவதில் தவறில்லை.
கடன் பொறுப்பு:
தமிழகத்தில் தனிநபர் கடன் பொறுப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.மாநிலங்களின் கடன் பொறுப்பைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்துக்கு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடியும், ஆந்திரத்துக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.79 ஆயிரத்து 644 கோடியும், கேரளத்துக்கு ரூ.70 ஆயிரத்து 117 கோடியும், தமிழகத்துக்கு ரூ.89 ஆயிரத்து 149 கோடியும் உள்ளன.தனிநபர் கடனைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் ரூ.18 ஆயிரத்து 575, ஆந்திரத்தில் ரூ.16 ஆயிரத்து 494, கர்நாடகத்துக்கு ரூ.15 ஆயிரத்து 107, கேரளத்தில் ரூ.21,991, தமிழகத்தில் ரூ.14 ஆயிரத்து 353-ம் உள்ளன.இந்தியாவின் கடன் அளவு ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடியும், தனிநபர் கடன் ரூ.34,231-ம் உள்ளன.
தமிழகத்தில் கடனைத் தீர்க்க முடியாத அளவுக்கு இல்லை. கடனைத் திருப்பிச் செலுத்துவோம். கடன் சுமை கட்டுக்குள் உள்ளது.பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, மூலதனப் பணம் (திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம்) திருப்பி விடப்படுவதாகக் கூறுகிறார்கள். பற்றாக்குறை முழுவதும் கடனைத் திரட்டுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது'' என்றார் நிதியமைச்சர் க.அன்பழகன்.
Saturday, March 20, 2010
பாலைவனமாகும் சோலை வனங்கள்! எம்.கார்த்திக்
தேங்க்ஸ்> Dinamani