நவம்பர் 19,2009,00:00 IST
கோவை : விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் சில விவசாய தோட்டங்களில் "மீட்டர் பாக்ஸ்' பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் கணபதி, மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம், சங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில விவசாய தோட்டங்களில் மீட்டர் பாக்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சில தோட்டங்களில் வெறும் பாக்ஸ் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை, தோட்ட உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மீட்டர் பாக்ஸ் பொருத்தும் பணி: மணியகாரம்பாளையத்தில் மீட்டர் பாக்ஸ் பொருத்த சென்ற மின்வாரிய ஊழியர்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
மின்வாரியத்தினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள், மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.சங்கனூர் உதவி மின் பொறியாளரிடம் கொடுத்துள்ள மனுவில், "எங்கள் பகுதி சிறு விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர். இப்போது "மின் மீட்டர்' பொருத்துவதாக மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் பரவியுள்ளது. இந்த நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.விவசாயிகள் எதிர்ப்பு: இப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: மின்சார மீட்டர் பாக்ஸ் பொருத்த வரும் மின்வாரிய ஊழியர்கள், தோட்ட உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் பெட்டியை பொருத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இது பற்றி மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், "ஒவ்வொரு விவசாயியும் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை அறியவே மீட்டர் பாக்ஸ் பொருத்துவதாக கூறுகின்றனர். ஒரே இணைப்பில் இருந்து பயன்படுத்தப்படும் மொத்த மின்சார அளவில், தோட்டத்து மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிட முடியும். அப்படியிருக்கும் போது, தனியாக மீட்டர் பாக்ஸ் பொருத்த வேண்டிய தேவை என்ன? ஏற்கனவே விவசாயக் கூலி, உர விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் சிரமப்பட்டு வருகிறோம். இனி மின்சாரக் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உருவானால், விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். விரைவில் அனைத்து விவசாயிகள் அடங்கிய கூட்டம் நடத்தி இப்பிரச்னை பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளோம், என்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலு கூறுகையில், ""நிஜமாகவே கட்டணம் வசூலிப்பதற்காக மீட்டர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தால் அதை ஏற்கமுடியாது. உடனே தடுக்காவிட்டால் கடும் போராட்டங்களில் ஈடுபடுவோம். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முத்தரப்பு கூட்டம் நடத்திய பின்பே மீட்டர் பொருத்த வேண்டும். மின்சார வாரியத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
"இலவசத்துக்கும் கணக்கு வேண்டும்' : தமிழ்நாடு மின்வாரிய முதன்மை பொறியாளர் தங்கவேலு கூறியதாவது:இலவசமாகவே இருந்தாலும் எதற்கும் ஒரு கணக்கு வேண்டும். அனைத்து மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பாக்ஸ் பொருத்தி, வீண் இழப்புகளை கணக்கிட வேண்டும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து ஏராளமான இணைப்புகள் செல்கின்றன. எந்த இணைப்பில் எவ்வளவு மின்சார இழப்பு ஏற்படுகிறது என்பதை அறியவே மீட்டர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது.
இணைப்பு கொடுப்பதில் உள்ள குறைபாடுகளாலும் இழப்புகள் ஏற்படுகின்றன.வீண் இழப்பு எவ்வளவு என்பதை அறிந்தால் மட்டுமே, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க முடியும். மாநகராட்சி பகுதிகளில் இதற்கான பணி முடிந்தது. 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ளபேரூராட்சிகளில் பொருத்தி வருகிறோம். இழப்பீட்டை குறைத்தால் அதற்கு இணையான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். விவசாயிகள் இது பற்றி கவலைப்படத் தேவையில்லை. மின் கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என்றார்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment