பழங்குடி மக்களின் தொழில் மற்றும் உணவு பழக்கத்தின் அடிப்படையில் சமூகவியலாளர்கள் பழங்குடி மக்களை உணவு சேகரிப்போர் (food gatherers) மற்றும் உணவுப் பொருள் விளைவிப்போர் (food cultivators) என இருபிரிவுகளாக பிரிக்கின்றனர். இவ்வகைப்பாட்டில் பளியர்கள் உணவுப்பொருள் சேகரிக்கும் பிரிவினை சார்ந்தே உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியான மேல் பழனிமலை, கீழ்பழனிமலை, சிறுமலை, வருஷநாடுமலை, சதுரகிரி மலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வருபவர்களில் குறிப்பிடத்தக்கது பளியர் இனக்குழுவாகும். பளியர்களின் தொழில் மற்றும் உணவு பழக்கம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளது. உணவு சம்பந்தப்பட்ட பொருட்களையே சேகரிப்பதையே பளியர்கள் சுய தேவைக்காகவும், விற்பனைக்காகவும் வேண்டி தொழிலாக செய்கின்றனர்.
பளியர்களின் முக்கிய தொழில்கள்:
பளியர்களின் முக்கியத் தொழில்கள் வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், மீன் பிடித்தல், விறகு மற்றும் காட்டில் கிடைக்கும் சிறு வன மகசூல் சேகரித்தல் போன்றவை ஆகும்.
வேட்டையாடுதல்:
உணவுக்காக வேட்டையாடுதல் தொல்பழங்குடியினரின் அன்றாடப் பழக்கமாக இருந்தது. ஆனால், வேட்டை அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. வேட்டையில் ஒரு விலங்கு கிடைத்து விட்டால் அது அம்மக்கள் அனைவருக்குமே பொது. வேட்டையாடியவர் மட்டும் அனுபவிப்பதில்லை. அதனை யாருக்கு வேட்டை கிடைப்பினும் அங்கு வாழும் பழங்குடி மக்கள் அனைவருமே பகிர்ந்துண்ணும் பண்பினர். ஒருவர் பட்டினி கிடக்க மற்றொருவர் வயிறு நிரப்பி மகிழும் சிறுமைக் குணம் பழங்குடியினரிடம் காண முடியாது. இத்தகைய பண்பு மலையென இம்மக்களிடம் உயர்ந்து காணப்படுகிறது. பழங்குடிமக்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள்.
இத்தகைய பண்பு வனத்தை ஒட்டிவாழும் பழங்குடியினர் அல்லாத சமூக மக்களிடமும் தாக்கமாக இன்றளவும் நிலவி வருகிறது. வனத்தை ஒட்டி வாழும் பகுதியில் மானோ, பன்றியோ மற்ற விலங்குகளோ, வேட்டை கிடைத்துவிட்டால் வேட்டையாடியவரே எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை. வேட்டையாடிவருக்கு ஒரு பங்கோ அல்லது அதன் ஒரு உறுப்போ கூடுதலாகக் கொடுப்பர். மற்ற மாமிசத்தை எத்தனை குடும்பங்கள் உள்ளனவோ அவ்வளவு பேரும் பகிரிந்து கொள்கிறார்கள். மாமிசத்தை வெயிலில் உலர்த்தி உப்புக்கண்டம் (வத்தல்) போடும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள்.
வேட்டையாடுதல் என்பது பளியர்களின் தலையாய தொழில்களில் ஒன்றாகும். விலங்குகளின் கால்தடங்களை கொண்டு அது என்ன விலங்கு என கண்டுபிடித்து விடுவார். முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் வேட்டைக்கு செல்வர். பளியர்கள் பொதுவாக பெரிய மிருகங்களை வேட்டையாடுவதில்லை. தங்களுக்கே உரித்தான எளிதில் கையாளக்கூடிய தொழில்நுட்பங்களை கொண்டு முயல், காட்டு எலி, காட்டுக்கோழி, காட்டுப்பன்றி போன்றவற்றை பிடிக்கின்றனர். முயலை கண்ணிவலை மூலமும், காட்டுக்கோழியை இடுக்கி மூலமும், கௌதாரி பறவையை வில் கொண்டும், காட்டு எலியை அவை வாழும் வளைகளில் புகை மூட்டியும் பிடிக்கின்றனர். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், பளியர்கள் சிறியளவில் மாமிசத்திற்காக வேட்டையாடுவதை பல தலைமுறைகளாக செய்து வருவதால் இன்னமும் இம்முறைகளை கைக்கொள்கின்றனர்.
காட்டாடு, பன்றி, குறுமான், மீளா போன்ற மிருகங்கள் வேட்டையின் போது கிடைத்தால் அவ்விலங்கினை வனப்பகுதியிலுள்ள பாறை அல்லது நிலத்தில் இலைகளை விரித்து விலங்கின் மாமிசத்தை குடியிருப்பில் உள்ளோருக்கு சமமாக பகிர்ந்தளிக்கின்ற்னர். சில வேளை சென்னாய்கள் காட்டிலுள்ள மான், காட்டு ஆடு போன்ற விலங்குகளை வேட்டையாடி தின்று கொண்டிருப்பதை பார்த்தால் அதை விரட்டிவிட்டு அவ்விறைச்சியை பயன்படுத்தி கொள்வர்.
அதே போல் வேட்டையாடும் போது சிறிய இளம் குட்டிகளையோ, கருவுற்ற நிலையில் உள்ள விலங்குகளையோ இவர்கள் வேட்டையாடும் பழக்கமில்லை.
தேன் சேகரித்தல்:
பளியர்கள் பரம்பரைத் தொழில் தேன் சேகரித்தல் ஆகும். தேனெடுப்பதை தேனழித்தல் என்று கூறுகிறார்கள். மரப்பொந்துகள், மரக்கிளைகள், செடிகள், கொடிகள், சாதாரண பாறை இடுக்குகளில் உள்ள தேனை பகல் பொழுதில் அறுத்தெடுக்கின்றார்கள். ஆனால் பெரும் மலைத்தேனை இரவு நேரங்களிலேயே எடுக்கின்றனர். மரம், செடி, கொடிகளில் புதிய தேனைக்கண்டால் கண்டவர் அடையாளத்திற்காக தழையை ஒரு கொத்தாக ஒடித்து வழியில் போட்டுவிடுவார். அதை மற்றவர்கள் கண்டால் தேன் இருப்பதை அறிந்து கொள்வர். ஆனால் தேனை முதலில் பார்த்தவரே தேனை எடுப்பர். மற்றவர்கள் அதை எடுக்கும் பழக்கம் இல்லை.
அதே போல் மலைப்பகுதியில் தேனெடுக்கும் குடும்பம் தொடர்ந்து அப்பகுதியில் தேனை எடுப்பர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் அதைத் தொடமாட்டார்கள். எந்தெந்த குடும்பம் எங்கு தேனெடுக்கிதோ அங்கு அதை தொடர்ந்து எடுக்கும் பழக்கம் உள்ளது.
தேனெடுக்கச் செல்லும் போது ஆண்களும், பெண்களும் சேர்ந்தே செல்கின்றனர். தேனெடுக்கத் தொடங்கும் முன் கடவுளை வழிபடுகிறார்கள். நல்ல குறியாக விடைகொடுத்தால் மட்டுமே தேனெடுப்பர். கெட்ட சகுண அறிகுறி தெரிந்தால் தேனெடுப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள்.
மலைச்சாரல்களில் உள்ள பெரிய பாறைகளில் மலைத்தேன் இருக்கும். மலையின் பாறை இடுக்குகளில் இருந்து தேன் சேகரித்தல் மிகவும் ஆபத்து நிறைந்ததாகும். பாறையின் உயர்ந்த முகட்டில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருக்கும். நிலப்பரப்பிலிருந்து உயரத்திலுள்ள இப்பாறையில் தேன் எடுப்பதற்கு ஒரு பாத்திரத்தில் நெருப்பிட்டுப் புகையூட்டித் தேனீக்களை விரட்டி பின்பு தேனை சேகரிக்கிறார்கள். இதற்கு கருங்கொடி என்னும் நீண்டு வளர்ந்த காட்டுக் கொடியில் மூன்று நீளமானவற்றை ஒன்றாகப் பிணைத்து கயிறுபோல (இதை மால் என்று சொல்லுகிறார்கள்) ஆக்கி ஒரு நுனியை மேலே உள்ள மரத்திலோ, பாறை இடுக்கிலோ கட்டி அதனை ஒருவர் பிடித்துக்கொள்கிறார். எனவே கொடிகளால் (தாவரக்கொடி) ஏணிபோன்று பின்னல் செய்து பாறை இடுக்குகளில் கட்டி அதில் இறங்கி தொங்கிய நிலையில் ஆடியபடியே தேன் அறுப்பார்கள். (தேனடைகளை அறுப்பது). இதனை மால் கட்டுதல் என்று சொல்லுகிறார்கள்.
தீப்பந்தம், சுரைக்குடுக்கை, கத்தி, மழு(மழுவு) சாக்குப்பை போன்றவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுரைக்குடுக்கைகளில் தேனை சேகரிக்கின்றார்கள். இப்பொழுது பிளாஸ்டிக் குடங்கள், மற்றும் ஈய பாத்திரங்களினை பயன்படுத்துகின்றனர். தேனெடுத்து முடிந்த பின்னால் கடவுளுக்குத் தேன், கிழங்கு போன்றவைகளை வைத்துப் படைக்கிறார்கள்.
மால் கட்டும் போது இவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கின்றார்கள். தனது முன்னோர்களையும், கடவுளையும் நெஞ்சில் நினைத்து வணங்கிய பின் மாலில் இறங்குகிறார்கள். எலி போன்ற பிராணிகள் அந்த கயிற்றை (கொடி) கடித்துவிடலாம். அல்லது பொறாமை, பகைவர்கள் உள்ளவர்கள் அறுத்துவிடலாம். தேனெடுக்கும் போது அறுத்துவிட்டால் அதல பாதாளத்தில் விழுந்து உடல் சிதறி இறக்க நேரிடும்.
இவர்கள் தேனெடுக்கும் போது தம் உடன் பிறந்த சகோதரர்களை காவலுக்கு வைத்துக் கொள்வதில்லை. மனைவியின் உடன் பிறந்த சகோதர்களான மாமன் மைத்துனர்களே பாதுகாப்பாக காவல் காக்கின்றனர்.
மலையின் உயரமான பாறைகளிலும், மரங்களிலும், ஆழமான பள்ளத்தாக்கிலும் தேன் கூடுகளில் இருந்து தேன் சேகரிக்கின்றனர். உயர்ந்த மரக்கிளைகளில் தேன் எடுப்பதற்கு மூங்கிலின் உதவியுடன் தேன் கூட்டருகில் சென்று, நன்றாக உள்ளியை வாயிலிட்டு மேன்று தேன் கூட்டின் மீது ஊதுகிறார்கள். இதன் மூலம் தேனீக்கள் பறந்து சென்று விடுகின்றன. உடனே தேனாடையை பாத்திரத்தில் எடுத்து அதை கயிற்றின் உதவியுடன் கீழே தருகிறார்கள்.
தேன் எடுக்கப்படும் இடங்களை பொறுத்து நான்கு வகையாக கூறப்படுகிறது. அவை முறையே பெரும்தேன், தூக்குத்தேன், சிறுதேன், புற்றுத்தேன் என்பவையாகும். பெருந்தேன் ராட்டுக்கள் பாறைகளிலும், மரக்கிளைகளிலும் காணப்படும். தூக்குத்தேன் கூடுகள் பெரிய மரக்கிளைகளில் தொங்கும் நிலையில் காணப்படும். புற்றுத்தேன் கூடுகள் தரையில் புற்றுகளுக்கிடையே காணப்படும். தேன் மருத்துவ பயனும், பொருளாதார பயனும் நிறைந்தது. பளியர்கள் தேன் கெடாமல் இருப்பதற்குச் சேகரித்த தேனாடையைத் தனியாகப் பாத்திரத்தில் பிழிந்து எடுக்கின்றனர். பின்பு அதைச் சூரிய ஒளியில் இரண்டு மணிநேரம் உலர வைத்து மூங்கில் குழாய்களில் அடைத்து வைக்கிறார்கள். இவ்வகையில் தேன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். பளியர்கள் தங்களுடைய தேவைக்கு மட்டுமே தேன் எடுத்துக்கொள்வார்.
மீன்பிடித்தல்:
மீன் பிடிப்பது பளியர்களின் தொழில்களில் ஒன்றாகும். மலையாறுகளிலும், ஓடைகளிலும் வேட்டியால் அரித்து மீன்பிடிப்பார்கள். இண்டங்காய், காரங்காய் இரண்டையும் தட்டி தண்ணீர் விழும் இடத்தில் போட்டு விடுவார்கள். இக்காய்களின் சாறு ஊறிய தண்ணீரை குடிக்கும் மீன்கள் மயங்கி மேலே மிதக்கும். அப்படியே வாரி எடுத்துவிடுவார்கள்.
நீருக்குள் திரியும் நண்டுகளை எளிதாக பிடித்துவிடுவார்கள். பெரிய கற்களுக்கு அடியில் பதுங்கும் நண்டுகளை, அக்கற்களை புரட்டி விட்டு பிடிப்பார்கள். ஒரு குச்சியில் சின்ன மீன்களை நிறைய கட்டி, கற்களுக்கு அடியில் வைக்க, அந்த குச்சி மீனை தின்ன வரும் போது நண்டுகளை பிடித்து கொள்வர். மீன் பிடித்தலுக்காக ஒருவர் அல்லது பலர் சேர்ந்து செல்லுகின்றனர். ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளில் சிறுவலையினாலும் கொக்கியினாலும் மீன்பிடிக்கின்றனர். மண்புழுவைக் கொக்கியில் சேர்த்து அதை மீனுள்ள நீர் நிலைகளில் மூழ்கச் செய்வர். மீன் புழுவை கடிக்கும்போது கொக்கியில் மாட்டிக்கொள்ளும்.
விவசாயத் தொழில்:
பளியர்கள் தங்கள் குடியிறுப்புகளை சுற்றிலுமுள்ள நிலங்களில் கேழ்வரகு, திணை, குதிரைவாலி, நெல் முதலான தவசப் பயிர்களை தங்கள் தேவைக்கு மட்டுமே பயிரிட்டு வந்தனர். இன்று கீழ்பழனிமாலை பளியர்கள் தங்களிடம் உள்ள துண்டு நிலங்களில் காபி, வாழை ஆகிய பணப்பயிர்களை பயிரிடுகின்றனர். அத்துடன் அவர்கள் தனியார் தோட்டங்க்களில் மரம் வெட்டுதல், காபிச் செடி நடுதல், களை எடுத்தல், காப்பிப் பழம் பறித்தல் ஆகிய வேலைகளுக்கு செல்கின்றனர். தனியார் முதலாளிகளிடம் உள்ள நிலங்களை குத்தகைக்கு எடுத்து காபி, ஏலம், மிளகு, இஞ்சி, மஞ்சள், பீன்ஸ், அன்னாசி, ஆரஞ்சு, சௌசௌ, உருளை முதலான பயிர்களை பயிர் செய்கின்றனர்.
போடி அகமலை பகுதி பளியர்கள் மரவள்ளிக்கிழங்கு, வாழை, எலுமிச்சை, சில்க் காட்டன் போன்றவற்றையும் பயிரிடுகின்றனர். குமுளி பகுதி பளியர்கள் வண்டன் மேட்டு மலைச்சரிவுகளில் நல்ல மிளகு பயிரிடுகின்றனர்.
விவசாயத் தொழிலைப் பற்றிய அறிவு இவர்களிடம் குறைந்தே காணப்படுகிறது. காடுகளில் மரங்களுக்கிடையே பயிர் செய்யும் இவர்கள் வளம் குறையுமானால் பிற பகுதியில் இடம் பெயர்ந்து விவசாயம் செய்வர் (Shifting cultivating).
வனப்பொருள் சேகரிப்பு அல்லது பளிப்பாட்டம் (பளியர்களுக்கே சொந்தமான உழைப்பு) :
தேன் சேகரிப்பது, பழங்கள் சேகரிப்பது முதலான வேலைகளைப் பல காலமாகச் செய்து வந்து இருக்கிறார்கள். கடுக்காய், பூந்திக்காய் (நெக்கட்டான் காய்), குங்கிலியம் முதலானவற்றையும் சேகரித்து கொடுப்பார். இந்த வேலையைப் பளிப்பாட்டம் என்பர். காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த வேலைகளை செய்வார். பளிப்பாட்டம் இல்லாத காலங்களில் கிழங்கு தேடி தொண்டுவதே தொழிலாகும். காட்டிலுள்ள மரங்களின் பழங்களைச் சேகரிக்கும் உரிமையினை அரசிடம் தனிப்பட்டவர்கள் குத்தகை எடுத்து வனப் பொருள்களைச் சேகரிப்பதற்கு பளியர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி மிகவும் குறைவு.
பளியர்கள் பாரம்பரியமாக 197 வகையான சிறுவன மகசூல்களை சேகரித்து வந்துள்ளனர். இன்று இவ்வேண்ணிக்கை கணிசமாய் குறைந்துள்ளது. தற்பொழுது நெல்லிக்காய், கடுகு, பாசம், ஈஞ்சிமாறு, மூங்கில், வெங்காயம், இண்டம்பட்டை, தாட்டுப்பூட்டு கொடி, காட்டு மாங்காய், சீவக்காய், தேன், தலைவார், நாவற்பழம், ஈச்சம்பழம், கொட்டாம்பழம், கலாப்பழம், காட்டுமிளகு, காட்டு மல்லி, கல்வாழை, போதை (நெய்ப்) புல், கடுக்காய், பூலாம்பட்டை, புளி, இலவங்கப்பட்டை, இலவம் பஞ்சு, குங்கிலியம், நன்னாரி, கிழங்கு வகைகள், கருவாப் பட்டை, காட்டு நெல்லி, நொச்சி வேர், குமுகம் பட்டை போன்ற முக்கிய வனப்பொருட்களை எடுத்து விற்கின்றனர்.
பேப்புடலை, குங்கிலியம் (சாம்பிராணி), கூந்தப்பனை, நீட்டாங்காய், சாயப்பட்டை, இஞ்சி ஆகியவற்றை திரட்டிப் பயன்படுத்தி வந்தனர்.
கடப்பாரை, அரிவாள், மண்வெட்டி, சிறுகோடாலி தவிர பளியர்களிடம் வேறு உற்பத்திக் கருவிகள் என்பன இல்லை.
வேட்டையாடுதல், திணை, சாமை ஆகியவற்றை பயிர் செய்வது, மலைகளில் கிடைக்கும் பழங்களை சேகரிப்பது ஆகியவை இன்றும் பளியர்களின் தொழில் ஆகும். கானகப் பொருள் சேகரிப்பு, முதலாளிகளின் மலைத் தோட்டங்களில் காடுகளில் வேலை செய்வது, மரம் வெட்டுவது ஆகிய வேலையும் செய்கின்றனர். நூற்றில் ஒரு பங்குதான் திணை, சாமை, கேழ்வரகு ஆகிய பயிர்கள் வேளாண்மை செய்யப்படுகின்ற்னர். இப்பொழுது சிறிது காலமாக ஆடுமாடுகளும் வளர்த்து வருகின்றனர்.
தற்பொழுது வனச்சீரழிவு போன்ற காரணிகளால் சிறுவன மகசூல் சேகரிப்பு அழிந்து வருகிறது. அழிந்தது போக மிஞ்சியிறுக்கும் சிறுவன மகசூல்களை தற்சமயம் நேரடியாக விற்பனை செய்ய வானநில உரிமை அங்கீகார சட்டம் 2006இன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் வனத்துறை ஊழியர்கள் தடையாக உள்ளனர்.
பழங்குடியினர் காடுகளில் உள்ள காய், கனிகளை எடுக்கும் போது மரம், செடி, கொடிகளை வெட்டி எடுப்பதில்லை. பலனை மட்டும் எடுப்பதால் அதன் வளம் மேலும் வளர்ச்சி பெறுகிறது. இவை அழிக்கப்பட்டால் பழங்குடியினர் வாழ்வும் சூனியமாகிவிடும்.