Friday, April 9, 2010

தமிழகத்தில் தனிநபர் கடன் ரூ.14,353

சென்னை,​​ ஏப்.​ 9:​
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன் இருப்பதாக நிதியமைச்சர் க.​ அன்பழகன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாத்ததுக்கு பதிலளித்து அவர் பேசியது:"தமிழக அரசு கடனில் மூழ்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.​ அரசு கடனில் மூழ்காது.​ கடனை வைத்து வேறு சிலரை மூழ்கடிப்போம்.​ மக்களுக்கான அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் வேண்டும்.​ அரசின் பணத்தில் இருந்துதான் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றால் அதற்கு காலம் ஆகும்.​ அதற்குள் அந்தத் திட்டங்களுக்கான செலவு அதிகரிக்கும்.​ எனவே,​​ திட்டங்களைச் செயல்படுத்தவும்,​​ நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யவும் கடன் திரட்டுவதில் தவறில்லை.
கடன் பொறுப்பு:​​
தமிழகத்தில் தனிநபர் கடன் பொறுப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.மாநிலங்களின் கடன் பொறுப்பைப் பொருத்தவரை,​​ மகாராஷ்டிரத்துக்கு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடியும்,​​ ஆந்திரத்துக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடியும்,​​ கர்நாடகத்துக்கு ரூ.79 ஆயிரத்து 644 கோடியும்,​​ கேரளத்துக்கு ரூ.70 ஆயிரத்து 117 கோடியும்,​​ தமிழகத்துக்கு ரூ.89 ஆயிரத்து 149 கோடியும் உள்ளன.தனிநபர் கடனைப் பொருத்தவரை,​​ மகாராஷ்டிரத்தில் ரூ.18 ஆயிரத்து 575,​ ஆந்திரத்தில் ரூ.16 ஆயிரத்து 494,​ கர்நாடகத்துக்கு ரூ.15 ஆயிரத்து 107,​ கேரளத்தில் ரூ.21,991,​ தமிழகத்தில் ரூ.14 ஆயிரத்து 353-ம் உள்ளன.இந்தியாவின் கடன் அளவு ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடியும்,​​ தனிநபர் கடன் ரூ.34,231-ம் உள்ளன.
தமிழகத்தில் கடனைத் தீர்க்க முடியாத அளவுக்கு இல்லை.​ கடனைத் திருப்பிச் செலுத்துவோம்.​ கடன் சுமை கட்டுக்குள் உள்ளது.பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு,​​ மூலதனப் பணம் ​(திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம்)​ திருப்பி விடப்படுவதாகக் கூறுகிறார்கள்.​ பற்றாக்குறை முழுவதும் கடனைத் திரட்டுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது'' என்றார் நிதியமைச்சர் க.அன்பழகன்.