Saturday, March 20, 2010

பாலைவனமாகும் சோலை வனங்கள்! எம்.கார்த்திக்

தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து உதகை வரை இந்த மலைத் தொடரில் மனிதர்களின் புழக்கத்திற்கு வராத குன்றுகளின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள், பெய்யும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் தேக்கி வைக்கும் நீர்த் தொட்டிகளாக இயற்கையாகவே அமைந்துள்ளன. மலைச் சிகரங்களில் நடக்கும் மகத்தான இயற்கை நிகழ்வைப் புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் சிக்கல் வராமல் செய்ய முடியும்.சமவெளியைவிட மலை உச்சிகளில் மழைப்பொழிவு அதிகம். அறிவியல் படி தண்ணீர் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடிவரும் இயல்பு கொண்டது. ஆனால், இந்தப் புல்வெளிகள் இருக்கும் குன்றுகளில் மழை பெய்தால் அவற்றைத் தம் வேர்க் கால்களால் தேக்கி வைக்கும் இயல்பை புல்வெளிகள் கொண்டுள்ளன.இக் குன்றுகளின் சரிவுகளில் இருக்கும் சோலைக் காடுகள் நம் மலைக்கே உரித்தான தனித்தன்மை கொண்டவை. வள்ளுவன் சொன்ன "அணிநிழற்காடு' இந்த சோலைகள்தான். கதிரவனின் ஒளிக்கீற்றுக்குள் புகமுடியாத, ஈரப்பதம் நிறைந்த சோலைகளில் மண் உருவாகும் விதமே சிறப்புக்குரியது.தமிழகத்தின் ஆண்டுதோறும் சராசரி மழையளவு 900 மி.மீ. ஆனால், நமக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கும் குறைவாகவே மழை கிடைக்கிறது. இவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயற்கை கொடுத்த கொடைதான் மலைக்காடுகள். இதைத்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி நிலம் என வரையறுத்து வைத்தனர்.காடாய் இருந்த முல்லை நிலங்களை அழித்து மருத நில வயல்களாய் மாற்றிய தமிழர்கள், குறிஞ்சி நிலத்தை எந்த சேதாரமுமின்றி வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. எந்த நதியும் சமவெளிகளில் உற்பத்தியாவதில்லை. மலைகளில்தான் உற்பத்தியாகிறது. பசுஞ்சோலைகளே ஆறுகளின் தாய்மடி.வெள்ளையர்கள் காலத்தில் நமது மலை வளம் கொள்ளை போனது. இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ், வேட்டல், பைன், தேயிலை, காபி என பசுமைப் பாலைவனங்கள் உருவாக்கப்பட்டன. ஓடைகள் மடிந்து நதிகள் சுருங்கின. இன்னும் மிச்சமிருக்கும் மிகக் குறைந்த மலைக்காடுகளே தண்ணீரின் ஆதாரம். அவற்றைக் காப்பது நம் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.உலகம் இன்று ஒரு பேராபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் "புவி வெப்பம்'. இதுபற்றி அறிவியல் உலகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பூமியின் வெப்பநிலை சீராக இருந்தது.ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் வெப்பநிலை உயரத் தொடங்கி உள்ளது. விழும் கதிரவனின் ஒளிக்கீற்றுகளில் பெரும் பகுதியை பூமி திருப்பி அனுப்பி விடுகிறது. அந்த அளவோடு நின்றுவிட்டால் பூமி முழுவதும் துருவப் பகுதியை போல் உறைந்து போயிருக்கும். ஆனால், திருப்பி அனுப்பப்படும் வெப்பத்தை, புவியைச் சூழ்ந்துள்ள சில வாயுக்கள் உள்வாங்கி இங்கு ஓர் இதமான வெப்பம் நிலவ காரணமாய் உள்ளன.இந்த விளைவு பசுமைக்குடில் விளைவு என்றும், அந்த வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கார்பன்-டை-ஆக்ûஸடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு, ஆகியவை முக்கியமான பசுமைக்குடில் வாயுக்கள்.கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றிய கார்பன்-டை-ஆக்ûஸடு புவி வெப்பம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம். உலகின் துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்வதோடு பருவநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஐரோப்பாவில் உள்ள குளிர்நாடுகளில்கூட அனல் காற்று வீசுகிறது. பெரும் வறட்சி, வெள்ளம் ஆகியவை பல நாடுகளை அச்சுறுத்துகிறது. விவசாயம் கேள்விக் குறியாகி உள்ளது. புதிய நுண் கிருமிகளின் தோற்றத்தால் புதுப்புது நோய்களுக்கு மனிதகுலம் உள்ளாக்கிறது. துருவக் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளன. இமயமலையில் பனி உருகுவது தொடர்ந்தால் வடஇந்திய நதிகள் அனைத்தும் வறண்டு போய்விடும்.சுனாமியால் பாதித்த பல கடலோர கிராமங்கள் உள்பட மும்பை, சென்னை போன்ற நகரங்களும் கடலில் மூழ்கிவிடும். இந்த பேராபத்தில் இருந்து நம் தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தத் தருணத்திலும் விழித்துக் கொள்ளாவிட்டால் மணலும், கற்களும்தான் மிஞ்சும்.ஜப்பானின் கியாட்டோ நகரில் கூடிய உலக ஆய்வாளர்கள், உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ûஸடின் அளவைக் குறைக்க வலியுறுத்தினார்கள். ஆனால், இவற்றை பெருமளவு உற்பத்தி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட மறுக்கின்றன. கடந்த டிசம்பரில் கோபன்ஹெகனில் நடந்த உலக மாநாட்டிலும் இது பற்றி பேசப்பட்டது. ஆனால், செயல்பாடுகள் தொடர்பாக இன்றும் ஆயத்தமாகவில்லை.கார்பன்-டை-ஆக்ûஸடு உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதோடு உலகை வற்புறுத்தும் கடமை யும் நமக்கிருக்கிறது. மறுபுறம் இந்த பூமியின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன்மூலம் உற்பத்தியான கார்பன்-டை-ஆக்ûஸடை குறைக்கச் செய்யலாம். குறிப்பாக, இந்த பூமியில்தான் தண்ணீரும், உயிர்க்காற்றும் உள்ளது. அதனால்தான் பூமியை உயிர்க்கோளம் என்று அழைக்கிறோம்.இந்த உயிர்க் கோளத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, இமயமலைக் காடுகள் உலகில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளே, வெளியேறிய கார்பன்-டை-ஆக்ûஸடை உறிஞ்சிக் குடிக்கின்றன. காடுகளைக் காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தேங்க்ஸ்> Dinamani

Tuesday, March 2, 2010

இடம்பெயரும் துயரம்

இடமாறுதல் ஆணை பெற்று வேறு ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கும், பெரிய தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கிடைப்பதால் இடம் பெயர்வோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் புதிய இடம், புதிய மனிதர்கள், கலாசாரம், மொழி சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால், என்ன தொழில் செய்வோம் என்பதே தெரியாமல், தங்கள் உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் வெளியேறும் சாதாரண ஏழைகளின் நிலைமை எண்ணிப் பார்க்க முடியாத துயரமாகத்தான் இருக்கிறது.
2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி, 102 கோடி மக்கள்தொகையில் 30 கோடி பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 24 கோடி பேர் (84.2 சதவீதம்) மாநிலத்துக்குள்ளாகவே மாவட்டத்தைவிட்டு வெளியேறியும் அல்லது மாவட்டங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 4.5 கோடி பேர் (13.8 சதவீதம்) வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
1981-ம் ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. 1991-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்த எண்ணிக்கை 23 நகரங்களாக மாறியது. 2001-ம் ஆண்டு 35 நகரங்களாக உயர்ந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இவ்வாறு பிழைப்பைத் தேடி வெளியேறும் சாதாரண ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கையின் நெருக்கடி, குடும்ப வறுமை, பொய்த்துப்போன விவசாயம், உள்ளூரில் வேலை கிடைக்காத நிலை என்று பல்வேறு காரணங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்தின்படி, இந்த எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்திருக்கும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதுபற்றிய உண்மைகள் அப்பட்டமாகத் தெரியவரும்.
பெருந்தொழில்களும் நெடுஞ்சாலைகளும் கிராமங்களைக் கிழித்துப்போடும்போது, இவர்கள் வாழ்க்கையையும் சேர்த்தே கிழித்துவிடுகிறது. விவசாய நிலங்களுக்காக இவர்களுக்குத் தரப்படும் இழப்பீடுகள் ஓராண்டுக்குமேல் கையில் இருப்பதில்லை. உடலுழைப்பைத்தவிர வேறு தொழில் தெரியாத நிலைமையும், குடிப்பழக்கமும், படிப்பறிவின்மையும் இவர்களின் பணத்தைக் கரைத்துவிடுகிறது. விவசாய நிலவுடைமைக்காரரும் வயலில் வேலை செய்யும் விவசாயக்கூலியும் - இரு குடும்பங்களுமே வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றன. பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, அரசியல் கட்சிகளால் பிரச்னையாக்கப்பட்டது. மீண்டும் 13 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் சமூகவியல் மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும், மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும் வீடுதேடிச் சென்று ஆய்வு நடத்தினால் துயரம் தோய்ந்த பல்வேறு உண்மைகள் வெளிப்படும். இவர்களில் 90 சதவீதம்பேர் பிழைப்பைத் தேடி வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயத்துக்கு வழியில்லாமல், தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை நடத்த கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் இடம்பெயரும். தமிழர்கள் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் இன்னல்கள்- உள்ளூரிலும் வெளியூரிலும்- ஏராளம்.
உள்ளூரில் இவர்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதும், நம்பிக்கையுடன் உறவினர்களுடன் விட்டுச்செல்லப்பட்ட சிறு குழந்தைகள் வீணாகிப் போவதும், இவர்களது சிறு உடைமைகளும் காணாமல்போவதுமான சிக்கல்கள் ஒருபுறம். பிழைப்பைத் தேடிச் சென்ற இடத்தில் தங்க இடம் இல்லாமல் சாலையோரத்தில் ஆதரவற்று வாழ்க்கை நடத்துவதும், பெண் குழந்தைகளும் இளம் பெண்களும் கடத்தப்படுவதும் அல்லது வறுமையால் அவர்கள் வாழ்க்கை சீரழிவதும் ஒருபுறம். இவர்கள் சென்ற இடத்தில், நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்வதாலேயே இவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதே இல்லை- கொலை போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளைத் தவிர, சாதாரண விபத்தில் கை, கால்களை இழந்தாலும், கட்டட வேலையின்போது விபத்தில் இறந்தாலும், குறைந்த அளவு இழப்பீடு கொடுத்து, எந்தக் குற்றப் பதிவும் வழக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனை இன்னல்கள் இருந்தாலும் இவர்கள் இடம்பெயரக் காரணம் வறுமை, வேலையின்மை.
கிராம மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கிச் செல்வது மிகப்பெரிய அபாயத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இதனை அறியாத அரசும், அரசியல்வாதிகளும், நாமும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருப்பது அதைக் காட்டிலும் பெருந்துயரம்.
இந்த மக்களை மீண்டும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கே திரும்பி வந்து வாழ்வதற்கான விவசாயத் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ. 42,000 கோடி ஒதுக்கினாலும், இவற்றில் மிகச் சிறிய தொகை மட்டுமே விவசாயிகளை அடைகிறது என்பதால், இதை நம்பி யாரும் கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. இவர்களுக்காகத் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். இவர்கள் இடம்பெயர்வதைப் பதிவு செய்யவும், இவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும், இவர்களை மீண்டும் அவர்களது மண்ணிலேயே வேரூன்றவும் செய்வதற்கான சிறப்புத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அவசியம். இதற்கென தனி அமைச்சரை நியமித்தாலும் நல்லதுதான்.

நன்றி / தினமணி

களைச் செடியாகும் கற்பகத்தருக்கள் - பீ.ஜெபலின் ஜான்

இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,​​ ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.​ தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் ​ கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.​ நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,​​ முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,​​ வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.​ இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,​​ இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.​ பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.​ இதன் உச்சியில்,​​ கிட்டத்தட்ட 30 -​ 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.​ ​​ ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.​ இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.​ அரசும்,​​ மக்களும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.​ ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.​ இந்தியாவில்,​​ கேரளம்,​​ கோவா,​​ மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள்,​​ தமிழகத்தில் கன்னியாகுமரி,​​ திருநெல்வேலி,​​ மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.​ ​ இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.​ 1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம்.​ அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும்,​​ நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.​ ​ உள்நாட்டுப் போரினால் மட்டும்,​​ 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.​ அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,​​ 30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.​ இலங்கையில் இருந்து பதனீர்,​​ கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.÷தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.​ பதநீர் விற்பனையை அதிகரித்து,​​ அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.​ ​​ ​ பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,​​ நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் ​ பனையிலிருந்து பெற முடியும்.​ பொதுவாக,​​ இது வளரும் இடங்களில் எல்லாம்,​​ வசதியற்ற ஏழை மக்களின் ​பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.÷பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர்,​​ பனை வெல்லம் -​ 25 கிலோ,​​ பனங்கற்கண்டு -​ 16 கிலோ,​​ தும்பு -​ 11.4 கிலோ,​​ ஈக்கு -​ 2.25 கிலோ,​​ விறகு -​ 10 கிலோ,​​ ஓலை -​ 10 கிலோ,​​ நார்-​ 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.​ ​ பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,​​ விலங்குகளின் உணவும் அடங்கும்.​ கட்டடப் பொருள்கள்,​​ அலங்காரப் பொருள்கள்,​​ வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.​ ​ முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.​ இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.​ அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து,​​ ஜெர்மனி,​​ பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.​ ​​ ​ அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள்,​​ தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.​ ​​ ​ இதுபோல தமிழுக்கும்,​​ தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்.​ தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,​​ தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.​ ​ ​ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ​(குறிப்பாக தென்மாவட்டங்களில்)​ பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்,​​ பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.​ ​அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.​ இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.​ ​ 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.​ எனவே,​​ பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,​​ வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.​ ​ மாநில மரம் என்ற வகையிலும்,​​ தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற ​ வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.​ ​​ ​ பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் ​ கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது,​​ பனையில் இருந்து ​ கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம்.​ பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.

நன்றி - தினமணி