Sunday, January 31, 2010

புகை மாசு-2020ம் ஆண்டுக்குள் 25% கட்டுப்படுத்த இந்தியா ஒப்புதல்!

திங்கள்கிழமை, பிப்ரவரி 1, 2010, 10:59[IST]

டெல்லி: இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டுக்குள் புகை மாசு வெளியேற்றத்தை 20 முதல் 25 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ஐ.நாவிடம் மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டென்மார்க் தலைநகர் கோபனேஹனில் 194 நாடுகள் பங்கேற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் கார்பன் புகை மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்ட இலக்கை நிர்ணயம் செய்து ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் ஐ.நா. சபையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி அமெரிக்கா 2 நாட்களுக்கு முன்பு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது. தங்கள் நாட்டில் கார்பன் வெளியேற்ற அளவை 2020க்குள் 17 சதவீதம் கட்டுப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2020க்குள் 20 சதவீதத்தை கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா சார்பில் திட்ட இலக்கு நிர்ணய அறிக்கை ஐ.நா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்தியாவின் புகை மாசு வெளியேற்ற அளவை 2020ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பான நடவடிக்கைகளில் விவசாயத் துறைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேபோல், 'இந்த இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அந்தந்த நாடுகள் தாங்களாகவே முன்வந்து மேற்கொள்ளும் முயற்சியாக அமையவேண்டும்.

எந்த வகையிலும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது. இந்தியா தனது தேசிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்- http://thatstamil.oneindia.in/news/2010/02/01/india-submits-emission-mitigation.ஹ்த்ம்ல்